
டி.எஸ்.பி. ஆன தனது மகளுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் தந்தை ஒருவர் விரைப்பாக கைதூக்கி அடித்த ராயல் சல்யூட் படம் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஆந்திரப் பிரதேச காவல்துறையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஒய். ஷியாம் சுந்தர். இவரது மகள் ஜெஸ்ஸி பிரசாந்தி. இவர் கடந்த 2018-இல் நடந்த காவலர் தேர்வில் வெற்றி பெற்று துணை போலீஸ் சூப்பிரண்ட் – டிஎஸ்பி.,யாக பணியாற்றி வருகிறார்.
மகள் ஜெஸ்ஸி பிரசாந்தி, தன்னை விட உயர்ந்த நிலை அதிகாரி என்பதில், ஷியாம் சுந்தருக்கு பெரும் மகிழ்ச்சி. இந்நிலையில் ஜெஸ்ஸி பிரசாந்தி திருப்பதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்தார். அப்போது அவரது வருகையைக் கண்ட ஷியாம் சுந்தர், பணி நிலை அடிப்படையில் தனக்கு மூத்த அதிகாரியான அவருக்கு ஒரு சல்யூட் அடித்தார். அது தனது மகள் என்பதால் ஒரு ராயல் சல்யூட்டாகப் பட்டது அதைக் கண்டவர்களுக்கு! உடனே அதை போட்டோ எடுத்து வைரலாக்கிவிட்டனர்.
தனது மகளுக்கு சல்யூட் அடித்தது குறித்து கூறியுள்ள ஷியாம் சுந்தர், தனக்கு இது பெருமையான விஷயம் என்று மகிழ்ச்சி பொங்கக் கூறியுள்ளார். வீட்டில்தான் அப்பா-மகள் உறவு, பணிக்கு வந்தால் மகள் என் உயர் அதிகாரி… என்று பெருமிதம் பொங்கக் கூறியுள்ளார்.