
மும்பை போலீஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் பல கோடி ரூபாய்கள் மதிப்புள்ள கார்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. இந்த சம்பவம் பற்றி வெளிவந்த பகீர் தகவல்களை இப்பதிவில் காணலாம்.
அண்மைக் காலங்களாக வங்கி மோசடி சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. அந்தவகையில், போலீ ஆவணங்களைக் கொண்டு வாங்கப்பட்ட பல கோடி ரூபாய்கள் மதிப்புள்ள சொகுசு கார்களை மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை நகர போலீஸார் தங்களின் அதிரடி நடவடிக்கைகளின் மூலம் மீட்டெடுத்திருக்கின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கார்களில் விலையுயர்ந்த லக்சூரி கார்களும் அடங்கும். மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சொகுசு கார் ஒன்று, ஆடி நிறுவனத்தின் சொகுசு கார்கள் இரண்டு, ஓர் மினி கூப்பர் சொகுசு கார் ஆகியவை அதில் அடங்கும். தற்போது பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் ஒட்டுமொத்த கார்களின் மதிப்பு ரூ. 7 கோடிகள் ஆகும்.
இவையனைத்துமே வங்கிகளில் போலியான ஆவணங்களைக் கொண்டு மோசடியாளர்களால் வாங்கப்பட்ட கார்களாகும். அந்தவகையில், சுமார் 19 விலையுயர்ந்த மற்றும் வழக்கமான பயணிகள் கார்களை மும்பை போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.
மும்பை மட்டுமின்றி நாட்டின் பிற நகரங்களான பெங்களூரு, இந்தோர் ஆகிய நகரங்களில் இருந்தும் மோசடியாளர்களால் விற்கப்பட்ட கார்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. பிரதீப் மவுர்யா, தரம்பீர் ஷர்மா, ம்ரிகேஷ் நவிதர்,சாய்நாத் கன்ஜி, தில்ஷட் அன்சாரி, விஜயர் வெர்மா, சலாம் கான் இவர்களே வங்கியை ஏமாற்றி கார்களை வாங்கியவர்கள் ஆவார்கள்.
நீண்டா தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து இந்த மோசடி கும்பலை மும்பைப் போலீஸார் கைது செய்திருக்கின்றனர். இவர்கள் ஆதார் கார்டு, பேன் கார்டு, வருமான சான்று, வங்கி ஸ்டேட்மென்ட் என அனைத்தையுமே போலியாக தயார் செய்து, அவற்றைக் கொண்டு வங்கிகளை ஏமாற்றி புதிய கார்களை வாங்கியிருக்கின்றனர்.
வாங்கிய ஒரு சில நாட்களிலேயே பிற நிறுவனங்கள் அல்லது தனி நபர்களிடத்தில் தங்கைக்குக் கல்யாணம், குடும்ப கஷ்டம் என கூறி பாதிக்கு பாதிக்கு என்ற விலையில் விற்று வந்திருக்கின்றனர். இவ்வாறு, போலி ஆவணங்களைக் கொண்டு அரசு மற்றும் தனியார் வங்கிகளில் மோசடி செய்து பல்வேறு கார்களை வாங்கி விற்றிருக்கின்றனர்.
மோசடியாளர்களுக்கு சில வங்கிகளின் ஊழியர்களும் உடந்தை என்று பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, அனைவர் மீதும் மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கையை மும்பை நகர போலீஸார் மேற்கொண்டிருக்கின்றனர்.
இதில், குறைந்த விலையில் சொகுசு கார்கள் கிடைப்பதாக நினைத்து மோசடியாளர்களிடத்தில் இருந்து கார்களை செகண்டு ஹேண்டுகளில் வாங்கியவர்களே பெரும் பாதிப்பைச் சந்தித்திருக்கின்றனர்.
செகண்டு ஹேண்டுகளில் வாகனங்களை வாங்கும் முன்பு அனைத்து ஆவணங்களையும் கையேடு வாங்கி சரிபார்த்தால் மட்டுமே இதுபோன்று முறைகேடுகளைத் தவிர்க்க முடியும். குறிப்பாக, என்ஓசி போன்ற ஆவணங்களைப் பெறுதல் அவசியம் ஆகும்.