
உடலோடு உடல் தீண்டாமல், ஆடையுடன் தீண்டுவது, பாலியல் சீண்டல்கள் ஆகாது எனத் தெரிவித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா கணேதிவாலாவை நிரந்தர நீதிபதியாக நியமித்த பரிந்துரையை திரும்பப் பெற்றது உச்ச நீதிமன்ற கொலிஜீயம்!
போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட பாலியல் வழக்குகளில் குற்றவாளிகளுக்கு சாதகமாக சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பு அளித்த மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா கனேதிவாலாவை, நிரந்தர நீதிபதி ஆக்கும் பரிந்துரையை திரும்பப் பெற்றுள்ளது உச்ச நீதிமன்ற கொலீஜியம்.
மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் நீதிபதியாக பணியாற்றி வரும் புஷ்பா கனேதிவாலா, போக்சோ சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில், ‘உடலுறவு கொள்வதைத் தவிர, தோலோடு தோல் தொடர்பு ஏற்பட்டால் மட்டுமே பாலியல் அத்துமீறல் ஆகும்’ என்று தீர்ப்பு அளித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. புஷ்பா கனேதிவாலாவின் இந்தத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
இதே போல் வேறொரு போக்சோ சட்டத்தின் கீழான வழக்கில், சிறுமியின் கையைப் பிடித்திழுப்பது, பேன்ட் ‘ஜிப்’ திறந்திருப்பது ஆகியவை பாலியல் அத்துமீறல் ஆகாது’ என தீர்ப்பு கொடுத்தார்.
இன்னொரு வழக்கில் இதே போல் சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பு கொடுத்திருந்தார் புஷ்பா கனேதிவாலா. அந்தத் தீர்ப்பில், “இந்த வழக்கில் சம்பவம் நடந்த போது பாதிக்கப்பட்டவர் 18 வயதுக்குக் குறைவாக இருந்தார் என்பது ஆதார பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. பலவந்தப் படுத்தி பலாத்காரம் செய்திருந்தால், இருவருக்கும் மோதல் ஏற்பட்டு, பாதிக்கப்பட்டவர் உடலில் காயங்கள் ஏற்பட்டிருக்கும். ஆனால், பாதிக்கப்பட்டவர் உடலில் காயங்கள் இருந்ததாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கவில்லை. எனவே இருவரும் விருப்பப்பட்டே இந்தச் சம்பவம் நடந்துள்ளதாகத் தெரிகிறது. அதனால் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த 10 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு தொடர்ந்து இவரது தீர்ப்புகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஜன.20 ஆம் தேதி நீதிபதி புஷ்பாவை, மும்பை உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே மற்றும் நீதிபதிகள் என்.வி.ரமணா, பாலி நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்ததை திரும்பப் பெற்றது உச்ச நீதிமன்ற கொலீஜியம்!