போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, விதிமீறல்களை முழுமையாக குறைக்கும் நோக்கில் உச்சபட்ச அபராதம் போன்ற கடுமையான விதிகள் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.
இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே ஒடிசா மாநிலத்தில் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. 18 வயதுக்கும் குறைந்தவர்களை வாகனங்களை இயக்க போக்குவரத்து விதிகள் அனுமதிப்பதில்லை. குறிப்பாக, ஓட்டுநர் உரிமம் இன்றி எந்தவொரு நபரையும் வாகனங்களை இயக்க விதிகள் அனுமதிப்பதில்லை.
இந்த நிலையில், ஓட்டுநர் உரிமம் இன்றி ஸ்கூட்டரில் பள்ளிக்கூடம் சென்று வந்த மாணவ, மாணவியரின் பெற்றோர்களுக்கு ஒடிசா மாநில போலீஸார் உச்சபட்ச அபராதத்தை வழங்கியிருக்கின்றனர். நான்கு மாணவர்களின் பெற்றோர்களுக்கு அபராதம் வழங்கப்பட்டிருப்பதாக கலிங்கா டிவி செய்தி வெளியிட்டுள்ளது.
நான்கு மாணவர்கள் உரிய உரிமம் இன்றி ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள்களை இயக்கியிருக்கின்றனர். இதனடிப்படையில், அண்மையில் அவர்கள் இயக்கி வந்த இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்த போலீஸார், அதிகபட்சமாக தலா ரூ. 25 ஆயிரம் என்ற வீதத்தில் நான்கு மாணவர்களின் பெற்றோரிடத்தில் இருந்து ரூ. 1 லட்சம் வரை அபராதமாக வசூலித்திருக்கின்றனர்.
தற்போது கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரம் அடைய தொடங்கியிருக்கின்றன. இதனால் நாட்டின் குறிப்பிட்ட சில மாநிலங்களில் மீண்டும் ‘பாஸ்’ முறை நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையால் பொதுபோக்குவரத்து வாகனங்களைப் பயன்படுத்தினால் கொரோனா வைரஸ் பாதிக்குமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் கிளம்பிய வண்ணம் இருக்கின்றது.
இந்த நிலையிலேயே சிலர் தங்களின் பிள்ளைகளை பள்ளிக் கூடங்களுக்கு அவர்களே சென்று விட்டு வருகின்றனர். இருப்பினும், ஒரு சிலர் சற்றும் சிந்திக்காமல் சிறுவர்களிடத்தில் வாகனத்தைக் கொடுத்து பள்ளிக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இது சிறுவர்களுக்கு பேராபத்தை விளைவிக்கும் என்பதை பலர் உணர்வதில்லை.
எனவேதான் இதுபோன்ற விதிமீறல்களைக் குறைக்கும் நோக்கில் பல அதிரடி நடவடிக்கைகளைப் போக்குவரத்து துறை எடுத்து வருகின்றது. அந்தவகையில், உரிய உரிமம் இன்றி இருசக்கர வாகனங்களை இயக்கிய பெற்றோர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட்டிருக்கின்றது