தில்லியில் 96 வயதான இந்திய ராணுவத்தில் பிரிகேடியராக பணியாற்றியவர் இறந்த சில மணிநேரங்களில் அவரது மனைவியும் இறந்ததால் இருவரது உடல்களையும் ஒரே தகனமேடையில் வைத்து எரித்தனர்.
இந்திய ராணுவத்தின் 17 ஆவது குமான் ரெஜிமென்ட்டை உருவாக்கியவர் பிரிகேடியர் ஆத்மா சிங். இவர் 1971 ஆம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் போரை வழிநடத்தினார்.
போர் நடந்த போது ஆத்ம சிங் துணை நிலை கலோனலாக பணிபுரிந்த போது அவரது வயிற்று பகுதி மற்றும் கையில் துப்பாக்கியால் 1971-ஆம் ஆண்டு சுடப்பட்டார்.
தனது பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் எம்பிஏ படித்தார். அவருக்கு ஹாக்கி விளையாடுவதும் புத்தகங்களை படிப்பதும் எழுவதும் மிகவும் பிடிக்கும்.
அவருக்கும் அவரது மனைவி சரளா ஆத்மாவுக்கும் (83) கொரோனா தொற்று ஏற்பட்டது.
தொற்றானது கடந்த வாரம்தான் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆத்மா சிங் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றார். அவரது மனைவி சரளா மேதான்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஆத்மா சிங் நேற்றைய தினம் வீட்டில் காலமானார். இவர் காலமான சிறிது நேரத்தில் மனைவி சரளாவும் காலமானார். இறப்பிலும் பிரியாத இவர்களை ஒரே தகனமேடையில் வைத்து எரியூட்டினர்.
இதுகுறித்து அவர்களது மூத்த மகளும் ஹரியானா காங்கிரஸ் எம்எல்ஏவுமான கிரண் சவுத்ரி கூறுகையில் இருவரின் இழப்பால் நான் மிகவும் உடைந்து போயுள்ளேன்.
இருவரும் ஒரே நேரத்தில் இறப்பார்கள் என்பது எங்களுக்கு தெரியும். அந்தளவுக்கு ஒருவரை ஒருவர் விரும்பினர். எனது தாயை இறப்பிலும் பிரியமாட்டேன் என எனது அப்பா அடிக்கடி கூறுவார்.
எனது தந்தை வீட்டில் உயிரிழந்தார். எனது தாய் மருத்துவமனையில் உயிரிழந்தார். இருவரது உடல்களையும் ஒரே தகனமேடையில் வைத்து எரித்தோம்.
எங்கள் தந்தையின் வீரத்தை பற்றி நாங்கள் பேசியதில்லை. ஏனெனில் அவரது சாதனைகள் அனைத்து ரகசிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.
எனது தந்தை எளிமையான மனிதர். அவர் ராணுவத்தை விரும்பினார். போர் புரியும் போது கூட அவர் அது குறித்து எங்களிடம் எதையும் பேச மாட்டார் என்றார்.