ஆக்ஸிஜன் பேருந்து: அரசு விரைவு நடவடிக்கை!

இந்தியா சற்றுமுன்
O2 bus
O2 bus

கொரோனா தொற்றால் ஆபத்தான நிலையில் இருப்போரை காப்பாற்ற கர்நாடகாவில் ஆக்சிஜன் இருக்கைகளுடன் கூடிய பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

இதன் காரணமாக மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அம்மாநிலத்தில் ஆக்சிஜன் கலன் பொருத்தப்பட்ட பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அம்மாநில முதல்வர் எடியூரப்பா பேருந்து சேவையை அறிமுகம் செய்து வைத்தார்.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் இனியும் கர்நாடகாவில் மரணங்கள் நிகழக்கூடாது என்ற நோக்கத்தில் ஆக்சிஜன் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைக்கு வெளியே ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடும் கொரோனா நோயாளிகளை காப்பாற்றும் வகையில் இந்த பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக 20 மாநகராட்சி பேருந்துகள் ஆக்சிஜன் பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ளன.

ஒவ்வொருபேருந்திலும் 8 ஆக்சிஜன் சிலிண்டர் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் தவிக்கும் நோயாளிகளையும், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் தவிப்போரையும் இந்தபேருந்து விரைந்து சென்று காப்பாற்றும் என அம்மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக பெங்களூருவில் அரசு மருத்துவமனைகளில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்துக்குள் மாநிலம் முழுவதும் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என எடியூரப்பா கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.