
பிரபல தெலுங்கு இயக்குநர் நந்தியாலா ரவி கொரோனா பாதிப்பு காரணமாக காலமானார்.
பிரபல எழுத்தாளரும் இயக்குநருமான நந்தியாலா ரவியின் மரணம் டோலிவுட் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
மெகா ஸ்டார் சிரஞ்சீவி உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் அவரது மருத்துவ சிகிச்சைக்கு உதவியும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவுக்கு ஏகப்பட்ட இந்திய சினிமா பிரபலங்கள் தொடர்ந்து உயிரிழந்து வரும் சோகம் உருவாகி உள்ளது. வெள்ளிக்கிழமையான நேற்று பிரபல தெலுங்கு இயக்குநர் நந்தியாலா ரவி கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தது ஒட்டுமொத்த டோலிவுட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
60 மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் பிரபலங்கள் மட்டுமே கொரோனாவுக்கு இரையாகி வருகின்றனர் என்கிற நிலை மாறி 30 வயது, 40 வயது மற்றும் 50 வயது பிரபலங்களும் கொரோனாவுக்கு உயிரிழந்து வருகின்றனர். கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்த நந்தியாலா ரவி 1981ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி ஆந்திராவில் பிறந்தவர். அவருக்கு வயது 40.
இயக்குநர் நந்தியாலா ரவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அறிந்த உடனே தேவையான அனைத்து உதவிகளையும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி செய்தார். நகைச்சுவை நடிகர் சப்தகிரி மற்றும் தயாரிப்பாளர் ராதா மோகன் தலா ஒரு லட்சம் ரூபாய் மருத்துவ செலவுகளுக்காக வழங்கினர்.
ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நந்தியாலா ரவியின் உடல்நிலை எந்தவொரு சிகிச்சைக்கும் ஒத்துழைக்கவில்லை. அத்தனை பிரபலங்கள் பெரும் முயற்சி எடுத்தும் நந்தியாலா ரவி வெள்ளிக்கிழமை காலை மருத்துவமனையில் காலமானார்.
லக்ஷ்மி ராவே மா இன்டிகி, ஒரே புஜ்ஜிகா மற்றும் பவர் பிளே உள்ளிட்ட படங்களை இயக்கிய நந்தியாலா ரவியின் மரணம் டோலிவுட் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.