
முதல்வர் கேசிஆர் மாநில மக்களுக்கு தெலங்காணா உதய தின நல்வாழ்த்துகளை தெரிவித்தார். இன்று அரசு விடுமுறை நாள்.
2014 ஜூன் இரண்டாம் தேதி தெலங்காணா மாநிலம் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து பிரிந்து தனி மாநிலமாக மாறியது. அன்று முதல் ஆண்டுதோறும் ஜூன் 2 மாநில உதய தினமாகக் கொண்டாடப்படுகிறது.
கலை நிகழ்ச்சிகள் சொற்பொழிவுகள் அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகள் மூலம் தெலங்காணாவின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் தனி மாநிலம் பெற மேற்கொண்ட தியாகங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இன்று புதன்கிழமையோடு மாநிலம் தோன்றி ஏழு ஆண்டுகள் நிறைவடைகின்றன.
சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கொரோனா காரணமாக நிகழ்ச்சிகள் ஆடம்பரமின்றி நடத்தப் படுகின்றன.
முதல்வர் கேசிஆர் உரையாற்றுகையில், “போராட்டங்கள், தியாகங்கள், பலி தானங்கள் மூலம் தனி மாநிலத்தை சாதித்தோம்” என்று தெரிவித்தார். “பாரத தேசம் கர்வப்படும் விதமாக தெலங்காணாவை வழிநடத்தி வருகிறோம். ஏழு ஆண்டுகளில் ஸ்திரத்தன்மையைப் பெற்று போராட்ட கால முழக்கங்களை ஒன்றொன்றாக அமல்படுத்தி வருகிறோம். பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக நிற்கும் நிலையில் உள்ளோம்.

மாநில வளர்ச்சியின் மூலம் அன்று நிகழ்த்திய தியாகங்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும். வேளாண் தொழில் புனர்நிர்மாணமே லட்சியமாகக் கொண்டு முன்னேறி வருகிறோம். கிராமிய அமைப்பை வலிமை மிக்கதாக செய்வதில் வெற்றி பெற்றுள்ளோம். பொது மக்களின் ஒன்றிணைந்த ஒத்துழைப்பே இதற்கு காரணம்” என்று கூறி முதல்வர் மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
“மக்களின் விசுவாசமும் ஆதரவுமே எங்களை தைரியமாக முன்னோக்கி நடத்துகிறது. தெலங்காணா மாநிலத்தை ‘தங்கத் தெலங்காணா’வாக மாற்றும் வரை ஓயமாட்டோம்” என்று முதல்வர் சந்திரசேகர ராவு தெரிவித்தார்.
‘கன் பார்க்’கில் முதல்வர் கேசிஆர் அமர வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் கொடியேற்று விழா நடைபெறும். குறைந்த எண்ணிக்கையிலேயே பங்குபெறுவோர் அனுமதிக்கப்படுவர்.
ஒரு வார காலம் மாநிலம் முழுவதும் கோலாகலமாக கொண்டாட்டங்கள் நடப்பது வழக்கம். இதற்கென்று அரசாங்கம் பிரத்தியேக நிதி ஒதுக்குவது உண்டு. ஹைதராபாத் பப்ளிக் கார்டனில் நடத்தும் கொண்டாட்டத்தில் இதுவரை சாதித்த முன்னேற்றங்கள், நலத் திட்டங்களை அமல்படுத்தும் முறைகள் போன்றவை குறித்து ஆண்டுதோறும் மாநில அவதார தினத்தில் முதல்வர் மக்களுக்கு எடுத்துரைப்பது வழக்கம். ஆனால் கொரோனா பரவலால் கொண்டாட்டங்களை ஆடம்பரமின்றி நடத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் ஏதோ ஒரு பொதுநல திட்டத்தை அரசு அறிவிப்பது வழக்கம். ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக மாநில நிதி நிலை குறைந்ததால் இந்த முறை எந்த புது திட்டமும் அறிவிக்கப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலைமை எப்படி இருந்த போதிலும் தனி மாநிலம் பெற நடத்திய போராட்டங்களை நினைவுகூர்ந்து மக்கள் கர்வத்தோடு மாநில உதய தினத்தன்று வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றனர். பிரதமர் நரேந்திரமோடி தெலங்காணா மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
தெலங்கானா உதய தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோதியும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
அதேபோல், தெலங்காணா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தராஜனும் தமது வாழ்த்துகளை மாநில மக்களுக்குத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.