
நோயாளிகளின் வீட்டிற்கே நேரடியாக ஆனந்தய்யா மருந்து வந்து சேரப்போகிறது. அதற்கான ஏற்பாடுகள் கிடுகிடுவென யுத்தகதியில் நடந்து வருகின்றன.
நெல்லூர் மாவட்டம் கிருஷ்ண பட்டினத்தில் ஆனந்தய்யா மூலிகை மருந்து விநியோகத்திற்கு ஆந்திரா அரசாங்கத்தோடு கூட ஹைகோர்ட்டும் க்ரீன் சிக்னல் அளித்துள்ளதால் மருந்து தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
கொரோனா பாதித்தவர்களுக்கும் மற்றும் முன்னெச்சரிக்கையாகவும் மக்களுக்கு மூலிகை மருந்து அளிப்பதற்காக வன மூலிகைகள், மூல பதார்த்தங்கள் சேகரிப்பதில் ஆனந்தய்யா போர்கால நடவடிக்கைகளைப் போல் துரிதமாக பணிபுரிந்து வருகிறார்.
மூலிகை மருந்து தயார் செய்யும்படி அதிகாரிகள் குறிப்பிட்டதால் மருந்து விநியோகத்திற்கான அறிவிப்பு செய்யும் வரை யாரும் கிருஷ்ணபட்ணம் கிராமத்திற்கு வரவேண்டாம் என்று ஆனந்தய்யா கேட்டுக் கொண்டுள்ளார். மூலிகைகளை சேகரிப்பதற்கும் தயாரிப்பதற்கும் தனக்கு ஐந்து நாள் பிடிக்கும் என்றும் ஜூன் ஏழாம் தேதி முதல் மருந்து வினியோகம் நடக்கும் என்றும் கூறியுள்ளார்.
மருந்து அளிப்பதில் முதல் முக்கியத்துவம் நெல்லூர் மாவட்டம் சர்வப்பள்ளி தொகுதிக்கே என்று ஆனந்தய்யா குறிப்பிட்டார். அதோடுகூட மருந்து வினியோகிக்கும் நேரத்தில் கோவிட் நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அது அவ்வாறு இருக்கையில்… செவ்வாயன்று மதியம் ஆனந்தய்யாவோடு நெல்லூர் மாவட்ட கலெக்டர் சக்ரதர்பாபு மூலிகை மருந்து வினியோகம் தொடர்பாக கலந்து ஆலோசித்தார். அதன்பிறகு கலெக்டர் சக்ரதர்பாபு பேசுகையில், ஐகோர்ட்டு நிபந்தனைபடி மருந்து விநியோகத்திற்கான நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தெரிவித்தார். கொரோனா பாசிடிவ் நோயாளிகளுக்கு மூலிகை மருந்து விநியோகத்தில் முதல் உரிமை தரப் போவதாக கூறினார்.

விரைவில் ஆன்லைன் மூலம் ஆனந்தய்யா மருந்தை அனைவருக்கும் அளிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சொன்னார். அதாவது ஆனந்தய்யாவின் மூலிகை மருந்து வீட்டுக்கே நேராக வரப்போகிறது. டோர் டெலிவரி மூலம் ஆனந்தய்யாவின் மூலிகை மருந்தைப் பெற முடியும்.
இனி மூலிகை மூலப்பொருள்களை சேகரித்து நான்கைந்து நாட்களில் விநியோகம் ஆரம்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.
ஆன்லைன் முறையில் மட்டுமே மருந்து கொடுக்கப்படும் என்றும் நேராக வெளியிடங்களில் இருந்து யாரும் மருந்துக்காக வரவேண்டாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தார்கள். தேவையான இடங்களுக்கு தாமே மூலிகை மருந்து எடுத்துச் சென்று அளிப்போம் என்று அதிகாரிகள் கூறினார்கள்.
கண்ணில் விடும் சொட்டு மருந்து குறித்து இன்னும் அறிக்கை வரவில்லை என்றும் கோர்ட்டு தீர்ப்பு மற்றும் அரசாங்கத்தின் வழிமுறையின் படி நடவடிக்கை எடுத்துக் கொள்வோம் என்றும் கலெக்டர் கூறினார். அதனால் நெல்லூர் மாவட்டத்தோடு கூட பிற இடங்களிலிருந்தும் மருந்துக்காக யாரும் வரவேண்டாம் என்றும் அவ்வாறு வந்தால் தடுத்து நிறுத்தவேண்டி வரும் என்றும் சக்ரதர்பாபு மக்களை கேட்டுக் கொண்டார்.
இதுவரையிலேயே கிருஷ்ணபட்ணம் பஞ்சாயத்து எல்லையில் 144 சட்டம் அமல் படுத்தி உள்ளார்கள்.
மருந்துக்காக மக்கள் மிகப் பெரிய அளவில் வந்து கூடுவதால் அவர்களில் யாருக்காவது கொரோனா பாசிடிவ் இருந்தால் பிறருக்கும் பரவும் வாய்ப்பு இருப்பதாலும் ப்ரோட்டோகால் பிரச்சினைகளும் வரும் வாய்ப்பு இருப்பதாலும் அரசாங்கம் ஆனந்தய்யா மருந்து விஷயத்தில் புதியதாக ஒரு தீர்மானத்திற்கு வந்துள்ளது. ஆன்லைனில் இந்த மருந்தை அனுப்பும்படியாக முயற்சிகளை ஆரம்பித்துள்ளார்கள்.
இதற்காக பிரத்யேகமாக ஒரு மொபைல் ஆப் கூட வடிவமைத்து வருகிறார்கள். ஆனால் ஆனந்தய்யாவின் சொந்த தோட்டத்தில் மருந்து தயார் செய்வதற்கு அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. இப்படிப்பட்ட திறந்த இடத்தில் மருந்து தயாரிப்பது நல்லது அல்ல என்று அதிகாரிகள் ஆனந்தய்யாவிடம் கூறியதாக தெரிகிறது.
ஆனால் ஏற்கெனவே தன் தோட்டத்தில் இந்த மருந்து தயாரிப்பதற்கு ஆனந்தய்யா அனைத்து ஏற்பாடுகளும் செய்து இருக்கையில் அதிகாரிகள் இவ்வாறு அதற்கு அனுமதி அளிக்காமல் சிவிஆர் பவுண்டேஷனில் மருந்து தயாரிக்கும்படி கூறியுள்ளார்கள்.
அதுமட்டுமின்றி தன் தோட்டத்தில் ஆனந்தய்யா ஏற்கெனவே ஏற்பாடு செய்திருந்த சமையல் பாத்திரங்கள் மற்றும் அதற்கு வேண்டிய கருவிகளை சிவிஆர் பவுண்டேஷனுக்கு அதிகாரிகள் அனுப்பி விட்டதாகத் தெரிகிறது.
கிருஷ்ணபட்ணம் போர்ட்டில் உள்ள சிவிஆர் காம்ப்ளக்ஸில் ஆனந்தய்யா மருந்து தயார் செய்வார் என்றும் அதற்காக பிரத்தியேகமாக இந்த கட்டிடத்தை ஒதுக்கி உள்ளதாகவும் கூறுகிறார்கள். ஆனால் இந்த நடவடிக்கைகள் குறித்து பல விமர்சனங்கள் வருகின்றன.
ஆனந்தய்யா தனிமையில் ஏகாந்தமான மன அமைதியுடன் மருந்து தயார் செய்து விநியோகிக்க அரசாங்கம் ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் இவ்வாறு அனைத்து விஷயத்திலும் தலையிட்டு ஆணையிடுவது சரியல்ல என்றும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி இனிமேலாவது ஆனந்தய்யாவை சுதந்திரமாக விடவேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.