
பன்றி மூக்கு கொண்ட அரிய வகை தவளை இனமான ‘பர்ப்பிள்’ இன தவளை ‘கேரள மாநில தவளை’யாக அறிவிக்க தற்போது கோரிக்கை எழுந்து வருகிறது.
உடல் ஆமை போன்றும் மூக்கு பன்றி போன்றும் அமைந்துள்ள இந்த அரிய இன தவளை கடந்த 2003ம் ஆண்டு கேரள மாநிலம் இடுக்கியில் கண்டுபிடிக்கப்பட்டது.
வாழ்நாள் முழுவதும் பூமிக்கு அடியில் வாழ்கின்றன இந்த தவளைகள், மழைக்காலங்களில் மட்டும் வெளியில் வந்து இனப்பெருக்கம் செய்யும். சில நாட்கள் மட்டுமே இத்தவளைகள் வெளியில் வாழும். பின்னர் பூமிக்குள் சென்றுவிடும்.
கேரள மாநிலத்தில் பெரியாறு, புலிகள் சரணாலயத்திலும் தமிழகத்தில் ஆனைமலை புலிகள் சரணாலயப் பகுதிகளிலும் இந்த வகையான தவளை இனம் காணப்படுகிறது.

இந்த தவளை மருத்துவ இனம் என்று கூறி, வேட்டையாடப்பட்டு வருவதால், இவ்வினம் அழிந்துபோகும் நிலை உருவாகியுள்ளது. அழிந்து வரும் இனங்களின் பட்டியலிலும் இத்தவளை சேர்க்கப்பட்டுள்ளது.
இத்தகைய அரிய இனத்தினை பாதுகாக்க, இந்த பர்ப்பிள் இன தவளையை, ‘கேரள மாநில தவளை’யாக அறிவிக்க வேண்டும் என்று கேரள வனத்துறை அம்மாநில அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது