September 28, 2021, 1:18 pm
More

  ARTICLE - SECTIONS

  உலக பாரம்பரிய சின்னமான ராமப்பா கோயிலின் சிறப்புகள்!

  கோயிலின் மேம்பாட்டிற்காகவும் வருகை தரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதிகளுக்காகவும் மத்திய அரசு பெரிய அளவில்

  ramappa temple 2 - 1

  தெலங்காணா மாநிலத்தின் ராமப்பா ஆலயம் யுனெஸ்கோவால் உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற ராமப்பா கோயில் உலக பாரம்பரியத்தின் அடையாளமாக மாறியது.

  சீனாவின் புஜோவில் நடந்த உலக பாரம்பரியக் குழுவின் மெய்நிகர் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.

  இரண்டு தெலுங்கு மாநிலங்களில் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற முதல் கோயில் ராமப்பா கோயில். இந்தச் சூழலில் முதல்வர் கே.சி.ஆர், அமைச்சர் கே.டி.ஆர் மற்றும் பல அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதன் பின்னர் ஹைதராபாதையும் ஒரு பாரம்பரிய தளமாக மாற்ற நாங்கள் கடுமையாக உழைப்போம் என்று தெரிவித்தார் அமைச்சர் கே.டி.ஆர்.

  தெலுங்கு மாநிலங்களில் முதல் பாரம்பரிய தளமாக ராமப்பா ஆலயம் சாதனை படைத்துள்ளது. முலுகு மாவட்டத்தில் பாலம்பேட்டா கிராமத்தில் அமைந்துள்ள 800 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயில் கிழக்கு வாரங்கல் மாவட்ட தலைமையகத்திலிருந்து 70 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த தனித்துவமான சிற்பக் கலை சௌந்தர்யம் மிக்க ஆலயம் கி.பி. 1213 ல் காகதிய மன்னர் கணபதிதேவனின் சேனாதிபதி ரேச்சர்ல ருத்ருடு என்பவரால் கட்டப்பட்டது.

  ramappa temple - 2

  ராமப்பாவின் சிறப்புகள் சில:

  மணலால் ஆன அஸ்திவாரம்! மிதக்கும் செங்கற்கள்! கல்லில் மீட்டினால் நாதம் எழும்! கருங்கல்லில் நேர்த்தியான கலை வடிவங்கள்! ஊசி நுழையும் துளையில் நுட்பமான சிற்பங்கள்! வெவ்வேறு வடிவங்களில் நூற்றுக்கணக்கான யானை பொம்மைகள்! வித்தியாசமாகத் தோன்றும் சிற்பக் கலை வைபவங்கள்! உலகைத் திகைப்பூட்டும் பொறியியல் தொழில்நுட்பம். இது போன்ற அம்சங்களால் நம் ராமப்பா கட்டிடம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது.

  உலகம் முழுவதும் 41 பாரம்பரிய நினைவுச் சின்னங்கள். இயற்கை அதிசயங்கள், இவை இரண்டும் கலந்தவை பலப்பல இருந்தாலும் 2020 ஆம் ஆண்டிற்கான 24 பரிந்துரைகள் மட்டுமே யுனெஸ்கோவின் பரிசீலனையில் இருந்தன. அவற்றுள் ராமப்பா கோயில் மட்டுமே நம் நாட்டைச் சேர்ந்தது. காகதியர்களால் கட்டப்பட்ட இந்த அற்புதமான கோயிலின் பதினொரு புகைப்படங்களை யுனெஸ்கோ தனது இணையதளத்தில் பதிவேற்றியுள்ளது.

  ramappa temple 3 - 3

  கோவிலின் முழு விவரம் மற்றும் பரிந்துரைக்கப்பட்டதற்கான காரணங்கள் அதில் உள்ளன. 2021ம் ஆண்டிற்கான நாமினேஷனில் நம் நாட்டைச் சேர்ந்த டோலவீரா கோயில் உள்ளது.

  கோவிட் பரவல் காரணமாக கடந்த ஆண்டு பாரம்பர்யச் சின்ன அங்கீகாரம் கொடுக்க இயலவில்லை. 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கும் ஒரே நேரத்தில் அங்கீகரிப்பு அளிப்பதற்கான வாக்களிப்பு இந்த மாதம் 16 முதல் 23 வரை நடந்தது.

  இதற்கிடையில் ராமப்பாவை உலக பாரம்பரிய தளமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுற்றுலா அமைச்சர் மற்றும் பிற அதிகாரிகளுக்கு மாநில அரசு வேண்டுகோள் விடுத்தது. இன்று இந்த சிறப்பான அங்கீகாரம் குறித்து பாரதம் மகிழ்ச்சியான பதிலைப் பெற்றது. தெலுங்கு மாநிலங்களில் உலக பாரம்பரிய அந்தஸ்தை அடைந்த ஒரே கட்டிடம் என்ற நற்பெயரை ராமப்பா பெற்றுள்ளது.

  யுனெஸ்கோவின் அடையாளம் பெற்றதற்காக தெலங்காணா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். வியத்தகு கற்பனைத் திறனோடும் சிற்பக்கலை நுட்பத்தோடும் காகதிய மன்னர்களால் தெலங்காணாவில் உருவாக்கப்பட்ட ஆன்மீக மற்றும் கலாச்சாரச் செல்வம் பாரத தேசத்திலேயே தனித்துவமானது.

  ramappa temple 1 - 4

  தெலங்காணாவின் வரலாற்று மகிமையையும் ஆன்மீக கலாச்சாரத்தையும் வருங்காலத் தமைமுறைக்கு எடுத்துச் செல்வதில் மாநில அரசு முனைந்து செயல்பட்டு வருகிறது என்று முதல்வர் கூறினார். காகதிய மன்னன் கணபதி தேவனின் சேனாதிபதி ரேச்சார்ல ருத்ருடு நிர்மாணித்த ராமப்பா ஆலயத்தை உலக பாரம்பரிய தளமாக அங்கீகரித்ததற்கு யுனெஸ்கோ உறுப்பு நாடுகளுக்கும் ஒத்துழைப்பளித்த மத்திய அரசிற்கும் முதல்வர் கே.சி.ஆர் நன்றி தெரிவித்தார்.

  தெலங்காணா மக்கட் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் முயற்சிகளுக்கு முதல்வர் பாராட்டு தெரிவித்தார். இனி அடுத்து, ஹைதராபாத் நகரத்தையும் பாரம்பரியச் சின்னமாகக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் கே.டி.ஆர் தெரிவித்தார்.

  யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களைத் தேர்ந்தெடுப்பதன் பின்னணியில் உள்ள முக்கிய நோக்கம் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதும் அந்த பாரம்பரியத்தை எதிர்கால சந்ததியினருக்கு வழங்குவதுமாகும். உலக பாரம்பரிய சின்னத்தை அங்கீகரிப்பதன் மூலம் ராமப்பா கோயில் புதிய சிறப்பைப் பெறுகிறது.

  சிதிலமடைந்து கொண்டிருக்கும் அற்புதமான சிற்ப புதையல் களைப் பாதுகாக்க ஒரு வாய்ப்பு இருக்கும். கோயிலின் வளர்ச்சிக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் நிதியுதவி அளிக்கும், மேலும் இப்பகுதி சுற்றுலாத்துறையால் அபிவிருத்தி செய்யப்படும்.

  இக்கோயில் எற்கெனவே நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் ஏராளமான பக்தர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்த்து வருகிறது. கோயிலின் மேம்பாட்டிற்காகவும் வருகை தரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதிகளுக்காகவும் மத்திய அரசு பெரிய அளவில் பணத்தை ஒதுக்க முடியும். இது கோயிலுக்கும் உள்நாட்டிற்கும் வணிக மற்றும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்தும்.

  இந்த சிறப்பான அங்கீகாரம் குறித்து பிரதமர் மோடி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். “அற்புதமான கோயிலான ராமப்பாவுக்குச் செல்லுங்கள்! அருமை! அனைவருக்கும் வாழ்த்துக்கள்! குறிப்பாக ராமப்பா கோயிலை உலக பாரம்பரிய தளமாக அங்கீகரித்த தெலங்காணா மக்களை வாழ்த்துகிறேன். ராமப்பா கோயில் காகதீயர்களின் கம்பீரமான கட்டடக்கலைத் திறனின் சிறந்த அடையாளம். அற்புதமான இந்த கோயிலுக்குச் செல்லுங்கள். கோவில் சௌந்தரியத்தை நேரடியாகப் பார்த்து அந்த உணர்வை அனுபவியுங்கள்!” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

  ராஜி ரகுநாதன், ஹைதராபாத்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,482FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-