ஐ.பி.எல் 2021 – 05.10.2021 – மும்பை vs ராஜஸ்தான்
~ முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ~
ஷார்ஜாவில் நடந்த 51ஆவது ஆட்டத்தில் மும்பை அணி ராஜஸ்தான் அணியை மிகப் பிரமாதமான முறையில் வெற்றி கண்டது. பூவாதலையாவில் வென்ற மும்பை அணியின் தலைவர் ரோஹித் ஷர்மா ராஜஸ்தான் அணியை மட்டையாடச் சொன்னார்.
எப்போதும் அதிக ரன் எடுக்கக்கூடிய ஜெய்ஸ்வால், லூயிஸ், சஞ்சு சாம்சன் மூவரும் சொற்ப ரங்களுக்கு அவுட்டாயினர். மும்பை அணியின் பந்து வீச்சாளர்கள் அனைவருமே மிகச் சிறப்பாக பந்துவீசினர்.
ஏழாவது ஓவர் முதல் பதினெட்டாவது ஓவர் வரை ராஜஸ்தான் அணியினர் ஒரு ஃபோரோ அல்லது சிக்ஸோ அடிக்க முடியவில்லை. இருபது ஓவர் முடிவில் ஒன்பது விக்கட் இழப்பிற்கு ராஜஸ்தான் 90 ரன் எடுத்தது.
பின்னர் விளையாட வந்த மும்பை அணி ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தது. ரோஹித் 13 பந்தில் 22 ரன்; இஷான் கிஷன் 25 பந்தில் 50 ரன் (அதில் 10 பந்துகளில் ரன் எடுக்கவில்லை); சூரியகுமார் யாதவ் எட்டு பந்தில் 13 ரன் எடுத்தனர்.
மும்பை அணி 8.2 ஓவரில் இரண்டு விக்கட் இழப்பிற்கு 94 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கொல்கொத்தா அணியும் மும்பை அணியும் இப்போது 12 புள்ளிகளுடன் முறையே நான்காவது, ஐந்தாவது இடத்தில் இருக்கின்றன.
இரண்டு அணிகளும் இன்னமும் ஒரு ஆட்டம் ஆடவேண்டும். மும்பை அணி அடுத்துவரும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
அந்த ஆட்டத்தில் வெற்றியும் பெறவேண்டும்; ரன்ரேட்டையும் அதிகரிக்க வேண்டும். அபோதுதான் நான் காம் இடம் பெற்று அடுத்த சுற்றுக்குப் போக இயலும்.