நவ.5ம் தேதி, உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத்தில், புனர்நிர்மாணம் செய்யப்பட்ட இடத்தில் ஸ்ரீஆதிசங்கரர் சிலையை திறந்து வைத்து, பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார். அவரது உரையின் தமிழாக்கம் இங்கே…
~~~
தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்
இன்று, அனைத்து மடங்கள், ஜோதிர்லிங்கங்கள் அனைத்தும், அனைத்து சிவாலயங்கள் அனைத்து சக்திபீடங்கள், அனைத்துப் புனித தலங்களிலும், தேசத்தின் ஒப்புயர்வில்லா மஹாபுருஷர்கள், வணங்குதற்குரிய புனிதர்கள், வணக்கத்திற்குரிய சங்கராச்சாரியாரின் பாரம்பரியத்தோடு இணைந்திருக்கும் அனைத்து, மூத்த, முனிபுங்கவர்கள், மேலும் அனைத்து பக்தர்களும் கூட, தேசத்தின் அனைத்து பாகங்களிலும், இன்று, கேதார்நாத்தின் இந்த பவித்திரமான பூமியிலே, இந்த பவித்திரமான சூழலிலே, தூலமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால், ஆன்மரீதியாக, மெய்நிகர் முறையினிலே, தொழில்நுட்பத்தின் வாயிலாக, அவர்கள் அங்கிருந்தபடியே நமக்கு ஆசிகள் அளிக்கின்றார்கள்.
நீங்கள் அனைவரும், ஆதிசங்கராச்சாரியாருடைய சமாதியினுடைய, மீள்நிறுவலினுடைய, சாட்சிகளாக விளங்குகின்றீர்கள். இது பாரதத்தினுடைய, ஆன்மீகப் பெருவளம், மற்றும் பரந்துபட்ட தன்மையினுடைய, மிக அற்புதமானதொரு காட்சி. நம்முடைய தேசம், எத்தனை விசாலமானது என்றால், எத்தனை ரிஷிகளின் மகத்தான பாரம்பரியமுடையது என்றால், ஒருவரை விஞ்சுமளவுக்கு இன்னொரு தவசீலர், இன்றும்கூட பாரத த்தின் அனைத்து இடங்களிலும், ஆன்மீக உணர்வினை விழிப்படையச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இதே போன்று எண்ணற்ற புனிதர்கள், இன்று தேசத்தின் அனைத்து இடங்களிலும் இருக்கின்றார்கள். இங்கேயும் கூட, நம்மோடு இணைந்திருக்கின்றார்கள். ஆனால் அவர்களை எல்லாம், ஒருவேளை நான், அவர்களின் பெயர்களைக் குறிப்பிட வேண்டுமென்றால், அப்போதும் ஒருவேளை, ஒரு வாரக்காலம் கூட குறைவாகவே இருக்கும். அப்படியே ஒன்றிரண்டு பெயர்கள் விடுபட்டுப் போனால், அப்போது நான், என் வாழ்க்கை முழுவதும், ஒரு பாவத்தின் சுமையைச் சுமக்க வேண்டி இருக்கும்.
எனக்கு ஆசை இருந்தாலும் கூட, இந்த வேளையிலே, அனைவரின் பெயர்களையும் குறிப்பிட்டுச் சொல்ல என்னால் இயலவில்லை. ஆனால், நான் அவர்கள் அனைவருக்கும், என் மரியாதை கலந்த வணக்கங்களைக் காணிக்கையாக்குகிறேன். அவர்கள் இந்த நிகழ்ச்சியோடு, எங்கேயிருந்து இணைந்திருந்தாலும், அவர்களின் நல்லாசிகள் நமக்கெல்லாம் மிகப்பெரிய சக்தியளிக்கும், பல பவித்திரமான செயல்களைச் செய்வதற்கு, அவர்களுடைய நல்லாசிகள், நமக்கெல்லாம் சக்தியை அளிக்கட்டும். இதன்மீது எனக்கு, முழுமையான நம்பிக்கை இருக்கிறது.
நமது நாட்டிலே, சொல்லப்படுவது உண்டு, ஆவாஹனம், ந ஜானாமி. ந ஜானாமி, விஸர்ஜனம், பூஜாம் சைவினா ஜானாமி, க்ஷமஸ்வ பரமேஸ்வரம். ஆகையினாலே, நான் இதயபூர்வமாக, மகத்தான புனிதர்களிடத்திலே, மன்னிப்புக் கோருகிறேன், இந்த புண்ணியமான வேளையிலே, தேசத்தின் அனைத்து இடங்களிலிருந்தும் இணைந்திருக்கும், சங்கராச்சாரியார்கள், ரிஷிபுங்கவர்கள், மகத்தான புனிதர்கள் பாரம்பரியத்தைச் சேர்ந்த, அனைத்து சீடர்கள், உங்களனைவருக்கும் இங்கிருதபடியே தலைவணங்கி, உங்கள் அனைவரின் ஆசிகளை வேண்டுகிறேன்.
நண்பர்களே, நமது உபநிஷதங்களிலே, ஆதிசங்கராச்சாரியருடைய, அருட்பொழிவுகளிலே, பல இடங்களிலே, நேதி நேதி, பல இடங்களிலே, நேதி நேதி…. என்றொரு உணர்வுலகினை, நேதி நேதி என்று சொல்லி, ஒரு உணர்வுலகம் விரித்துரைக்கப்பட்டிருக்கின்றது. ராமசரிதமானஸை நீங்கள் பார்த்தீர்கள் என்று சொன்னால், அதிலும் கூட இதே உணர்வு தான் பிரதிபலிக்கின்றது. வேறுவிதமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.
ராம்சரிதமானஸில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்றால், அதாவது, அபிகத் அகத் அபார், அபிகத் அகத் அபார். நேதி நேதி நித் நிகம கஹ். अबिगत अकथ अपार नेति नेति नित निगम कह. நேதி நேதி நித் நிகம கஹ். அதாவது, சில அனுபவங்கள், எத்தனை தெய்வீகமானது, எத்தனை முடிவில்லாதது என்றால், அவற்றை, சொற்களில் வடிப்பது என்பது இயலாத காரியம். பாபா கேதார்நாத்தின் திருவடி நீழலை அடைவதற்கு, எப்போது நான் வந்தாலும், இங்கிருக்கும் ஒவ்வொரு துகளோடும் கலந்து கரைகிறேன். இங்கே வீசும் தென்றல், இமயத்தின் சிகரங்கள், இதோடு பாபா கேதாரின் சான்னித்தியம், எத்தகையதொரு, அற்புதமான உணர்வை நோக்கி என்னை இட்டுச் செல்கின்றது, என்பதை விளக்க என்னிடம் சொற்கள், முற்றிலும் இல்லை. தீபாவளி என்ற, பவித்திரமான நாளன்று, நேற்று நான் எல்லையிலே, நம்முடைய வீரர்களோடு இருந்தேன். இன்றோ நான் வீரர்களின் பூமியிலேயே இருக்கிறேன்.
நான் பண்டிகைகளின் மகிழ்வுகளை, நம்முடைய தேசத்தின் வீரம்நிறை இராணுவத்தினரோடு பகிர்ந்தேன். நாட்டுமக்களின் அன்புநிறை செய்தியினை, நாட்டுமக்கள் அவர்களிடம் கொண்ட அர்ப்பணிப்பு, நாட்டுமக்கள் அவர்களுக்கு அளித்த ஆசிகள், 130 கோடி ஆசிகளைத் தாங்கி, நேற்று நான் நமது இராணுவ வீரர்களிடம் அளிக்கச் சென்றேன். ஆனால் இன்றோ, எனக்கு, கோவர்த்தன் பூஜை நாளன்று, குஜராத் மாநில மக்களுக்கு இன்று புத்தாண்டு. கோவர்த்தன் பூஜை நாளன்று, கேதார்நாத் பாபாவினை, தரிசிக்கும் பூஜிக்கும் நற்பேறு கிடைத்திருக்கிறது.
பாபா கேதாரை தரிசிப்பதோடு கூடவே, இன்று நான், ஆதி சங்கராச்சாரியாருடைய சமாதித் தலத்திலே, என்னால் சில கணங்களைக் கழிக்க முடிந்தது. ஒரு திவ்வியமான அனுபவம் என், உள்ளத்திலே நிறைந்தது. எதிரில் அமர்ந்திருக்கும் போது உணர முடிந்தது, ஆதி சங்கரரின் கண்களிலிருந்து, அந்த தீட்சணிய நோக்கு, அந்த ஒளித் திரள், பெருகிக் கொண்டிருக்கிறது. இது மகத்தான பாரதத்திற்கு நம்பிக்கை ஊட்டுகிறது. சங்கராச்சாரியாரின் சமாதி, மீண்டும் ஒரு முறை, மேலும் அதிக திவ்விய சொரூபத்தோடு, கூடவே, நம்மிடையே திகழ்கின்றது.
இதோடு கூடவே, சரஸ்வதிக் கரையோரம், படித்துறையும் உருவாக்கப்பட்டு விட்டது. மேலும், மந்தாகினியிலே, உருவாக்கப்பட்டிருக்கும் பாலம் மூலம், கருட் சட்டி, இந்தப் பாதையும் எளிதாக்கப்பட்டிருக்கிறது. அதோடு கருட் சட்டியோடு எனக்கு விசேஷமான தொடர்பும் இருந்திருக்கிறது. இங்கே ஒன்றிரண்டு பழைய நபர்கள் இருக்கிறார்கள், அடையாளம் தெரிந்து கொள்வார்கள். (சிரிப்பு) ப்ரிஜ் பாய் உங்களைப் பார்த்தது…. எனக்கு சந்தோஷமாக இருக்கிறது.
சாதுக்கள் என்னமோ இருக்கின்றார்கள் ஆனால் பழைய ஆட்கள் மறைந்து விட்டார்கள். சிலர் இந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டார்கள், ஆனால் வேறு சிலரோ, பூமியை விட்டே சென்று விட்டார்கள். நம்முடைய மந்தாகினி கரையோரத்திலே, வெள்ளத்திலிருந்து பாதுகாப்புக்காக, எழுப்பப்பட்டிருக்கும் சுவரானது, இதனால் பக்தர்களின் பயணம், மேலும் பாதுகாப்பானதாக அமையும். தீர்த்த புரோகிதர்களுக்காக, கட்டப்பட்டிருக்கும் புதிய வீடுகளால், அவர்களுக்கு, அனைத்துக் காலங்களிலும் வசதியாக இருக்கும்.
பகவான் கேதார்நாத்துக்கு சேவையை, அவர்களால், இனி சுலபமாக சுளுவாகச் செய்ய முடியும். நான் முன்பேயே கூட பார்த்திருக்கிறேன். சில வேளை, இயற்கைப் பேரிடர் ஏற்படும் போது யாத்ரீகர்கள் இங்கே சிக்கிக் கொள்வார்கள். அப்போது இந்த புரோகிதர்களின் வீடுகளில் தான், அறைகளில் மக்கள் மணிக்கணக்காக அடைந்து கிடப்பார்கள். நானே கூட பார்த்திருக்கிறேன், நம்முடைய புரோகிதர்கள், தாங்கள் வெளியே, குளிரிலே நடுங்கிக் கொண்டிருப்பார்கள்.
ஆனால் வந்திருக்கும் அவர்களுடைய யஜமானர்கள், அவர்களை கரிசனத்தோடு கவனித்துக் கொள்வார்கள் நான் இதை எல்லாம் பார்த்திருக்கிறேன். அவர்களுடைய, பக்தி உணர்வை நான் கவனித்திருக்கிறேன். இப்போது, இந்த இடர்களிலிருந்து அவர்களுக்கு விடுதலை கிடைக்கப் போகிறது.
நண்பர்களே, இன்று இங்கே, யாத்ரீ சேவைகள், மற்றும் வசதிகளோடு இணைந்த, பல திட்டங்களுக்கான, அடிக்கல் நடப்பட்டிருக்கிறது. சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள், மத்திய அரசின் கட்டுமானமாகட்டும், யாத்ரீகர்களின் மற்றும் இந்தப் பகுதிவாழ் மக்களின் வசதிகளின் பொருட்டு, நவீன மருத்துவமனையாகட்டும், அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாகட்டும், மழைக்காலத் தங்குமிடங்களாகட்டும், இந்த வசதிகள் அனைத்தும், பக்தர்களின் வசதிக்கு, வழிவகையினை அளிக்கும். அவர்களுடைய தலயாத்திரையை, இப்போது, கஷ்டங்களிலிருந்து விடுவித்து, கேதாருடன் இணைத்து, ஜய் போலேநாத்தின், திருவடிகளில் மனமுருகிக் கரைய, யாத்ரீகர்களுக்கு ஒரு சுகமான அனுபவத்தை அளிக்கும்.
நண்பர்களே, பல ஆண்டுகள் முன்பாக, இங்கே ஏற்பட்ட பேரழிவு, அது கற்பனையே செய்ய முடியாதது. நான் அப்போது குஜராத்தின் முதல்வராக இருந்தேன். ஆனால், என்னால் செயல்படாமல் இருக்க முடியவில்லை. நான் இங்கே உடனடியாக விரைந்து வந்தேன். நான் என்னுடைய கண்களால், அந்தப் பேரழிவைப் பார்த்தேன். அந்த வலியை உணர்ந்தேன்.
யாரெல்லாம் இங்கே வந்தார்களோ, அவர்கள் நினைத்தார்கள், இதுவா நாம் வரும் கேதார் இதுவா நம்முடைய கேதார் தலம்?? இது மீண்டும், பழைய நிலைக்குத் திரும்புமா? ஆனால் எனக்குள்ளே ஒரு குரல் ஒலித்தது. இது முன்பை விடச் சிறப்பாக மேன்மை நிறைய மீண்டு வரும் என்று. என்னுடைய இந்த நம்பிக்கைக்கு, பாபா கேதாரே காரணம். ஆதி சங்கர ருடைய சாதனையே காரணம். ரிஷிகள் முனிவர்களின் தவவலிமையே காரணம். ஆனால் இதோடு கூடவே, கட்சில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு கட்சை மீட்டெழுப்பிய, அனுபவமும் என்னிடத்திலே இருந்தது.
அந்த வகையிலே என்னிடம் நம்பிக்கை இருந்தது. ஆனால் இன்று, அந்த நம்பிக்கை என் கண்முன்னால், மெய்யாவதைக் காணும் போது, இதை விட வாழ்க்கையில் வேறென்ன நிறைவு வேண்டும்? இதையெல்லாம் நான் என் பாக்கியமாகவே கருதுகிறேன். இதே பாபா கேதாரும், புனிதர்களின் நல்லாசிகளும், இந்த பவித்திரமான பூமியும், இந்த புனித மண்ணானது, இதன் காற்றானது, ஒரு காலத்தில் என்னை உருவாக்கியிருக்கிறது. இதற்கு ஒரு, சேவை செய்யக்கூடிய பெரும்பேறு கிடைப்பது என்பது, வாழ்க்கையில் இதை விட வேறு என்ன புண்ணியம் தேவை சொல்லுங்கள்.
இந்தப் பழமையான பூமியிலே, பழமையோடு கூடவே, நவீனத்தின் இந்த இணைவு, வளர்ச்சியின் இந்தப் பணிகள், பகவான் சங்கரரின் இணையில்லா கருணையின் விளைவே ஆகும். மனிதன் மெச்சிக் கொள்ளக் கூடாது, மனிதன் மெச்சிக் கொள்ளக் கூடாது. இறைவனின் அருளாலே தான், இவை நடந்திருக்கின்றன. இந்தப் புனிதமான முயல்வுகளுக்காக, உத்தராகண்ட் அரசாங்கத்திற்கு, நம்முடைய ஆக்கமும் ஊக்கமும் நிறைந்த இளம் முதல்வர், தாமிஜி அவர்களுக்கு, மேலும் இந்தப் பணிகளுக்காகப், பொறுப்பேற்றுக் கடமையாற்றிய அனைவருக்கும், இன்று, நான் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.
இவர்கள், கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு, இந்தக் கனவுகளை நனவாக்கியிருக்கிறார்கள். நான் நன்கறிவேன், பனிபொழிவுக்கு இடையேயும் கூட இங்கே, பணியாற்றியிருக்கிறார்கள் இங்கே ஆண்டு முழுவதும் பணியாற்றுவது கடினம். மிகக் குறைவான நேரமே மிஞ்சியிருக்கும். ஆனால், பனிப்பொழிவுக்கு இடையேயும் கூட. என்னுடைய சகோதர சகோதரிகள் அனைவரும், மலைகளைச் சாராத வேறிடங்களிலிருந்து வந்தவர்கள், அவர்கள், இதை இறைப்பணியாக சிரமேற்கொண்டு, பனிப்பொழிவிற்கு இடையேயும் கூட, மைனஸ் வெப்பநிலைக்கு இடையேயும் கூட, பணியைத் துறந்து செல்லவில்லை பணியில் ஈடுபட்டார்கள். இதனால் தான் இந்தப் பணி நிறைவேறியிருக்கிறது.
என்னுடைய மனம் இதிலே ஈடுபட்டிருந்த படியால் ட்ரோன்கள் தொழில்நுட்பம் வாயிலாக, என்னுடைய அலுவலகத்திலிருந்து, இந்த இடம் முழுவதையும், ஒருவகையில் மெய்நிகர் பயணத்தை நான் மேற்கொண்டேன். தொடர்ந்து இதை நுணுக்கமாக கவனித்து வந்தேன். எந்த அளவு வேலை ஆகியிருக்கிறது, கடந்த மாதத்திற்குப் பிறகு இந்த மாதம் என்ன முன்னேற்றம்? தொடர்ந்து கவனித்து வந்தேன்.
நான் கேதார்நாத் கோவிலின், ராவல்கள் அனைவருக்கும், புஜாரிகள் அனைவருக்கும், நான் இன்று சிறப்பான நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். ஏனென்றால் அவர்களுடைய ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் காரணமாக, அவர்களுடைய ஆக்கப்பூர்வமான முயல்வுகள் காரணமாக, அவர்கள் பாரம்பரியம் குறித்த வழிகாட்டுதல் அளித்தார்கள், இதன் காரணமாக, நம்மால் இந்த, பழமையான பாரம்பரியத்தையும் காக்க முடிந்தது, மேலும் நவீனத்தையும் இணைக்க முடிந்தது. நான் இதன் பொருட்டு, இந்த பூஜாரிகள் இந்த ராவல் குடும்பத்தாருக்கு, இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.
ஆதி சங்கராச்சாரியார் எனும் போது, நம்முடைய அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள், சங்கராச்சாரியார் குறித்து, அனைத்து அறிஞர்களுமே கூறியிருக்கிறார்கள். சங்கரோ, சங்கர:, சாக்ஷாத். அதாவது, ஆச்சாரியர் சங்கரர், சாக்ஷாத் பகவான் சங்கரரின் சொரூபமாவார். இந்த மகிமை, இந்த, தெய்வநிலையை, நீங்கள், அவருடைய வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும், அனுபவித்து உணர இயலும் அதை சற்று நீங்கள் கவனித்தால், அனைத்து விஷயங்களும் புலனாகும். சின்னஞ்சிறு வயதிலே பாலகனாக இருந்த போது, அற்புதமான ஞானம், பாலகனாக இருந்ததிலிருந்தே, சாத்திரங்கள் ஞானம் விஞ்ஞானம் பற்றிய, நீடித்த ஆய்வு.
மேலும் எந்த வயதிலே, ஒரு சாதாரண மனிதன், சாதாரண ரூபத்திலே, உலகியல் பற்றிய விஷயங்களைப் புரிந்து கொள்ளத் தொடங்கும் போது, சற்றே விழிப்பு தொடங்கும் வயதிலே, அந்த வயதிலே, அந்த வயதிலே, அவர் வேதாந்தங்களின் ஆழங்களை, மறைபொருள் உண்மைகளை, முழுமையாக தெளிவதென்பது, இதை விளக்குவதென்பது, தங்குதடை இல்லாமல் செய்திருக்கிறார். இது, சங்கரரின் உள்ளே, சாக்ஷாத், சங்கரரின் உள்ளே சாக்ஷாத், சங்கரத்துவத்தின், விழிப்புநிலையைத் தவிர வேறெதுவாகவும் இருக்க இயலாது. இது சங்கர தத்துவத்தின் விழிப்புநிலை தான். இங்கே, சம்ஸ்கிருதம் மற்றும் வேதங்களின், பெரியபெரிய அறிஞர்கள், இங்கேயும் அமர்ந்திருக்கிறார்கள். மேலும் மெய்நிகர் வடிவிலும் நம்மோடு, இணைந்தும் இருக்கிறார்கள்.
உங்களுக்குத் தெரியுமா, அதாவது சங்கரரின், சம்ஸ்கிருதத்தில் பொருள் மிக எளிமையானது. சங்கரன் என்ற சொல்லுக்கு சம்ஸ்கிருதப் பொருள், சங்கரோதி சங்கர:. அதாவது, யார் நலன் பயக்கிறாரோ, அவரே சங்கரன். இந்த நன்மையைக் கூட, ஆச்சாரியர் சங்கரர், நேரடி அனுபவமாகச் அளித்திருக்கிறார். அவருடைய வாழ்க்கை முழுவதும், எத்தனை அசாதாரணமானதாக விளங்கியதோ, அதே அளவுக்கு அது, மனித சமுதாயத்தின் நலனுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. பாரதம் மற்றும் உலகத்தின் நலனுக்காகவே, எப்போதும், தன்னுடைய உணர்வுகளை அவர் அர்ப்பணித்திருந்தார்.
பாரத நாடு, விருப்புவெறுப்பு என்ற வலையில், சிக்கிக் கொண்டு, தன்னுடைய ஒருமைப்பாட்டை இழந்து கொண்டிருந்த போது, அப்போது, மகான்களுடைய தொலைநோக்குப் பார்வையைப் பாருங்கள்!!, அப்போது சங்கராச்சாரிய ஸ்வாமி கூறினார். ந மே த்வேஷ ராகௌ, ந மே த்வேஷ ராகௌ, நமே லோப மோஹௌ. மதோ நைவ, மே நைவ. மாத்ஸர்ய பாவ.
அதாவது, விருப்புவெறுப்புகள், பேராசை மோகம், பொறாமை கர்வம், இவை அனைத்தும், நம்முடைய இயல்பு கிடையாது. பாரதம் சாதி பிரிவுகள் என்ற எல்லைகளைத் தாண்டி சிந்திக்கக் கூடிய, ஐயங்கள் சந்தேகங்களை விடுத்தெழும்பக் கூடிய, தேவை மனித சமூகத்திற்கு இருந்த போது, அப்போது, சமூகத்திலே விழிப்புநிலை மலர்ந்தது.
ஆதி சங்கராச்சாரியார் கூறினார், ந மே ம்ருத்யு ஷங்கா, ந மே ஜாதி பேத:. அதாவது, மரணம் பற்றிய அச்சங்கள், சாதி பிரிவுகள் என்ற வேறுபாட்டோடு, நமது பாரம்பரியத்திற்கு, எந்த தொடர்பும் கிடையாது. சம்பந்தமில்லை. நாம் யார்? நம்முடைய தத்துவம் கோட்பாடுகள் என்ன?
இதைத் தெரிவிப்பதற்காக, ஆதி சங்கரர் கூறினார். சிதானந்த ரூப, சிதானந்த ரூப, சிவோஹம் சிவோஹம். சிதானந்த ரூப, சிவோஹம் சிவோஹம். அதாவது, ஆனந்த ரூபமானவர்கள், நாமே தான். ஜீவாத்மாவிலிருந்தே பரமாத்மாவை எய்த வேண்டும். மேலும் அத்வைத சித்தாந்தம், சில வேளைகளில் அத்வைத சித்தாந்தத்தை விளங்க வைக்க, பெரிய பெரிய உரைகள் தேவைப்படுகின்றன. நான் அத்தனை பெரிய அறிஞன் கிடையாது. நான் எளிமையான மொழியிலே விஷயங்களைப் புரிந்து கொள்கிறேன்.
நான் ஒரு விஷயத்தைக் கூறுவேன். எங்கே இருமை இல்லையோ, அது தானே ஒருமை. சங்கராச்சாரியாரிய ஸ்வாமி, பாரதத்தின் உணர்விலே, மீண்டும் உயிர்ப்பினை ஊட்டினார். மேலும் நம்முடைய, பொருளியல் ஆன்மீக மேன்மைக்கான, நல்வழி அளித்தார் சக்தியளித்தார். அவர் கூறினார், ஞான விஹீன:, பாருங்கள் ஞானத்தைப் போற்றும் எத்தனை பெரிய பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் நாம்.
ஞான விஹீன:, சர்வ மதேன், முக்திம், ந பஜதி, ஜன்ம சதேன. அதாவது, துக்கம், கஷ்டம், மற்றும் கடினங்களிலிருந்து விடுதலை பெற, நம்மிடம் ஒரே ஒரு வழி தான் உண்டு. அது என்னவென்றால், ஞானம். பாரதநாட்டின் ஞானம் மற்றும் விஞ்ஞானம், இவற்றின் கண்ணோட்டம், காலத்திற்கப்பாற்பட்ட பாரம்பரியம். இதைத் தான், ஆதிசங்கராச்சாரிய ஸ்வாமி, மீண்டும் மீட்டுயிர்ப்பித்தார். உணர்வைக் கூட்டினார்.
நண்பர்களே, ஒரு காலத்திலே, அப்போது ஆன்மீகத்தை, தர்மத்தை, வெறும், சடங்குகளோடு இணைத்து, அவற்றோடு சில, தவறான கருத்துக்களையும் கற்பனைகளையும் இணைத்துப் பார்க்கும் நிலை இருந்தது. ஆனால் பாரத நாட்டின் சித்தாந்தம், மனித சமூகத்தின் நலன் பற்றியே பேசுவது. வாழ்க்கையினை, நிறை நிலையோடு, முழுமையான வகையிலே ஹோலிஸ்டிக் முறையிலே தான் பார்க்கிறது. ஆதி சங்கராச்சாரிய சுவாமி சமூகத்திற்கு, இந்த சத்தியத்தை உரைத்துக் காட்டும் பணியை ஆற்றினார்.
அவர், பவித்திரமான மடங்களை நிறுவினார். நான்கு தலங்களை நிறுவினார். 12 ஜோதிர்லிங்கங்களை, மீட்டுயிர்ப்பிக்கும் பணியைச் செய்தார். அவர், அனைத்தையும், தியாகம் செய்து, தேசம், சமூகம், மற்றும் மனித சமூகத்திற்காக, வாழக்கூடியவர்களின் வல்லமையான பாரம்பரியத்தை, கட்டியெழிப்பினார்.
இன்று அவருடைய அதிஷ்டானம், பாரதம், மற்றும் பாரதீயத்தினுடைய, ஒருவகையிலே பார்த்தால், சீர்மையான, அடையாளமாக ஆகியிருக்கின்றது. நம்மைப் பொறுத்த மட்டில், தர்மம் என்றால் என்ன?, தர்மம் மற்றும் ஞானத்திற்கிடையான தொடர்பு என்ன?,
ஆகையினாலே தான் கூறப்பட்டிருக்கிறது, அதாதோ ப்ரும்ம ஜிக்யாஸா. அதாதோ ப்ரும்ம ஜிக்யாஸா. இத்தகைய மந்திரத்தை அளிக்கும், உபநிஷதம் சார்ந்த பார்ம்பரியம், அது என்ன? அப்படியானால் நாம், ஒவ்வொரு கணமும், வினா எழுப்பக் கற்றுக் கொடுக்கிறது. ஆகையால் தான், பாலன் நசிகேதஸ் யமனுடைய அரசவைக்குள் நுழைந்து, யமனை நேருக்கு நேராகப் பார்த்து வினா எழுப்புகிறான். யமனிடமே வினா எழுப்புகிறான். மரணம் என்றால் என்ன? மரணத்தை விளக்குங்கள் என்றான்.
கேள்வி கேட்பது, ஞானத்தைப் பெறுவது, அதாதோ ப்ரும்ம ஜிக்யாஸ:. நம்முடைய இந்த சீர்மரபினை, நம்முடைய மடங்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உயிர்ப்பித்து அளித்துள்ளன. இதை மேலும் வளமாக்கி வருகின்றன. சம்ஸ்கிருதத்திலே சம்ஸ்கிருத மொழியிலே, வைதிக கணிதம் போன்ற விஞ்ஞானமாகட்டும், இந்த மடங்கள் தாம், நமது சங்கராச்சாரியாரின் இந்தப் பார்ம்பரியம் தான், இவை அனைத்தையும் பாதுகாப்பாய் வைத்து, அடுத்தடுத்த தலைமுறையினருக்கு, பாதை துலக்கும் பணியைச் செய்திருக்கின்றன. எனக்குப் புரிகிறது, இன்றைய காலகட்டத்திலே, ஆதி சங்கராச்சாரியாருடைய சித்தாந்தம், மேலும் அதிக, போற்றக்கூடியதாகி இருக்கிறது.
நண்பர்களே, நம் நாட்டிலே பல நூற்றாண்டுகளாக, நான்கு தலங்களுக்கு யாத்திரை செல்வது மகத்துவமானது. பனிரெண்டு ஜோதிர்லிங்கங்களை தரிசிப்பது, சக்தி பீடங்களை தரிசிப்பது, எட்டு விநாயகர்களை தரிசிப்பது, இந்த யாத்திரைகள் அனைத்தின் பாரம்பரியம், இந்த தீர்த்த யாத்திரை, நம் நாட்டிலே, வாழ்நாளின் அங்கமாகவே கருதப்பட்டு வந்துள்ளது. இந்த தீர்த்த யாத்திரை, நமக்கெல்லாம் வெறும் கேளிக்கை சுற்றுலாவாக கருதப்படுவதில்லை.
இது பாரதநாட்டை இணைக்கக்கூடிய, பாரதம் பற்றிய நேரடி அனுபவமளிக்கும், ஒரு உயிர்ப்புள்ள பாரம்பரியம். நமது நாட்டிலே, ஒவ்வொருவருக்கும், அது யாராக இருந்தாலும், அவருடைய விருப்பமாக இருக்கும், வாழ்நாளிலே குறைந்தபட்சம் ஒரு முறையாவது, 4 தலங்களுக்குக் கண்டிப்பாகச் செல்ல வேண்டும் என்பது. பனிரெண்டு ஜோதிர்லிங்கங்களை ஒருமுறையாவது தரிசிக்க வேண்டும். அன்னை கங்கையில் ஒரு முறையாவது முங்கிக் குளிக்க வேண்டும்.
முன்பெல்லாம், நாம் வீட்டிலே, குழந்தைகளுக்குத், தொடக்கம் முதலே கற்பித்தோம் பாரம்பரியம் இருந்தது. குழந்தைகளுக்கு வீடுகளிலே கற்பிக்கப்பட்டு வந்தது. சௌராஷ்ட்ரே சோமநாத ச, ஸ்ரீசைலே மல்லிகார்ஜுனம். சிறுவயதில் கற்பிக்கப்பட்டது. த்வாதஸ ஜோதிர்லிங்கங்களின் இந்த மந்திரம், வீட்டில் இருந்தபடியே, ஒரு பெரிய பாரதம் ஒரு விசாலமான பாரதம் பற்றிய, ஒவ்வொரு நாளும் யாத்திரை மேற்கொள்ளச் செய்தது. சிறுவயது முதற்கொண்டே, தேசத்தின், இந்தப் பல்வேறு பாகங்களோடு, இணைவு, ஒரு இயல்பான கலாச்சாரமாகவே ஆகி விட்டிருந்தது.
இந்த நம்பிக்கை, இந்த எண்ணப்பாடு, கிழக்கு முதல் மேற்கு வரை வடக்கு முதல் தெற்கு வரை, பாரதத்தை ஒரு, உயிர்ப்புள்ள தேசமாக மாற்றி அமைத்தளித்தது. தேசிய ஒருமைப்பாட்டின், பலத்தை பெருக்கி அளிக்கும், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற மகத்தான நோக்கு, இயல்பான வாழ்க்கையின் அங்கமாக விளங்கியது. பாபா கேதார்நாத்தை தரிசித்த பிறகு, ஒவ்வொரு பக்தரும், ஒரு புதிய ஆற்றலைப் பெற்றுச் செல்கிறார்.
நண்பர்களே, ஆதி சங்கராச்சாரியரின் மரபினை, இந்தச் சிந்தனையை இன்று தேசம், தனக்களிக்கப்பட்ட, ஒரு உத்வேகமாகவே பார்க்கிறது. இப்போது, நமது கலாச்சாரத்தினை, நம்முடைய இந்த மரபினை, நம்பிக்கையின் மையங்களை, அதே கௌரவமிகு பார்வையோடு காணப்படுகிறதென்றால், எப்படி, அது பார்க்கப்பட வேண்டுமோ அப்படி. இன்று, அயோத்தியிலே, பகவான் ஸ்ரீ இராமனுடைய மகத்தான ஆலயம், மகோன்னதமாக எழுப்பப்பட்டு வருகின்றது. அயோத்தி நகருக்கு, அதன் பெருமிதம், பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் உரித்தாகியிருக்கிறது.
இப்போது இரண்டு நாட்கள் முன்பாக, அயோத்தியில் தீபங்களின் திருவிழா, அருமையாக நடந்தது. இதை உலகம் முழுவதும் கண்டு களித்தது. பாரதத்தின் பண்டைய கலாச்சார வடிவம், எப்படி இருந்திருக்கும், அதை இன்று, நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. இதைப் போலவே, உத்திர பிரதேசத்திலேயே, காசிக்கும் புத்துயிர் ஊட்டப்பட்டு வருகிறது. விஸ்வநாத் தலத்தின், பணிகள் அதிவிரைவு கதியிலே, இப்போது முழுமையை நோக்கி முன்னேறி வருகிறது. பனாரஸிலே, சாரநாத், அருகிலே குஷி நகர். போத் கயா. இந்த அனைத்து இடங்களிலுமே, சர்வதேச அளவிலான ஒரு புத்த சுற்று, யாத்திரீகர்களின் கவனத்தை ஈர்க்க, உலக அளவிலான புத்த யாத்ரீகர்களின் கவனத்தைக் கவரும் வகையில், மிக விரைவான வகையிலே பணிகள் நடக்கின்றன.
பகவான் இராமனோடு இணைந்த, அத்தனை புனிதத் தலங்களையும், இவற்றையும் இணைத்து, ஒரு முழு அளவிலான சுற்றை ஏற்படுத்தும் பணியும் கூட, இன்று நடந்து வருகிறது. மதுரா பிருந்தாவனத்திலும் கூட, வளர்ச்சியோடு கூடவே, இந்த இடங்களின் தூய்மை புனிதத்தன்மை, ஆகியவற்றை, புனிதர்களின் வழிகாட்டுதலின்படி நிறைவேற்றிவரும் பணிகள், பழமை தொடங்கி நவீனம் நோக்கி, உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த அளவுக்கு, ஏன் நடைபெற்று வருகிறது என்றால், ஏனென்றால் இன்றைய பாரதம், ஆதி சங்கராச்சாரியர் போன்ற நம்முடைய, மகான்களின் சொற்களின் மீது நம்பிக்கை வைத்து, அவற்றுக்கு பெருமை சேர்க்கும் விதமாக முன்னேறி வருகிறது.
நண்பர்களே, இந்த வேளையிலே, நம்முடைய தேசம், சுதந்திரத்தின் அமிர்த மஹோத்சவத்தையும் கொண்டாடி வருகிறது. தேசம், தன்னுடைய எதிர்காலத்திற்காக, தன்னுடைய மீள்நிறுவலுக்காக, புதிய உறுதிப்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. அமிர்த மஹோத்சவத்தின் உறுதிப்பாடுகளில் ஒன்றாக, ஆதி சங்கராச்சாரியார