திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அனுமதி சீட்டு இல்லாமல் வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் பெரும்பாலானவர்களும் அறநிலையத்துறையையும் மாவட்ட நிர்வாகத்தையும் திட்டியபடியே திரும்பிச் சென்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா புதன்கிழமை நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தீபத் திருவிழாவை முன்னிட்டு நேற்று முதல் வருகிற 23ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நாட்களை தவிர மற்ற விழா நாட்களில் தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிக்கவுள்ளனர்.
இதற்காக, உள்ளூர் பக்தர்கள் 3 ஆயிரம் பேரும், வெளியூர் பக்தர்கள் 10 ஆயிரம் பேரும் தினசரி சுவாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. வெளியூர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு இ-பாஸ் கட்டாயம் பெறவேண்டும் என்றும், உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதிச் சீட்டு பெற வேண்டும் என்றும் நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும், அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்த அறிவிப்பை அடுத்து, பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த போலீஸார், நேற்று கோவிலில் ராஜகோபுரம் வழியாக சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதித்தனர். அப்போது பக்தர்களிடம் சுவாமி தரிசனம் செய்வதற்கான அனுமதிச் சீட்டு மற்றும் இ-பாஸ் உள்ளதா என்பதை சோதித்து பிறகே அனுமதித்தனர்.
அனுமதிச் சீட்டு பெறாமல் வந்தவர்களை சுவாமி தரிசனத்துக்கு என்றில்லாமல், கோவிலுக்கு உள்ளே செல்லக்கூட போலீஸார் அனுமதிக்கவில்லை. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் கோயிலுக்குள் வலம் வரக் கூட முடியாமல் தவித்தனர். அவர்களை உடனே இடத்தைக் காலி செய்யுமாறு போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் கோயிலுக்குள் பக்தர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பக்தர்கள் குறைவாக இருந்ததால் கோயில் வளாகமும் வெறிச்சோடிக் காணப்பட்டது.
திருவிழா நடைபெறும் நாட்களில் கோவிலில் தரிசனத்துக்கு அனுமதிக்காமல், பக்தர்கள் அனுமதிச்சீட்டு இல்லாத காரணத்தினால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே பெரும் மனவேதனையை ஏற்படுத்தியது.
உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதிச்சீட்டு இரு தினங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட நிலையில் நேற்று சரியான வகையில் வழங்கப்படவில்லை என்றும், சுவாமி தரிசனத்துக்கு இ- பாஸ் பெற இணையதளத்தில் பதிவு செய்ய முடியவில்லை என்றும் பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.
பிரதான கோபுர வாசல் அருகே பலர் காலணிகளை அப்படியே விட்டுச் சென்றனர். சிலர் கோபுரவாசல் கடந்து உள்ளே செருப்பு காலுடன் சென்றனர், போலீசார் உள்பட! சிலர் கோபுரத்தின் தெய்வ அம்சம் பொருந்திய சிற்பங்கள் உள்ள மேல் படிநிலை திண்டுகளில், செருப்புகளை வைத்தனர். இதைக் கண்டு பக்தர்கள் பலர் முகம் சுளித்தனர்.
கோயிலில் முறையான ஏற்பாடுகளை நிர்வாகம் இப்போது செய்வதில்லை! கட்டணம் வசூலிப்பதிலும், கோயிலுக்குள் பக்தர்களை விடக்கூடாது என்பதிலும் கவனம் செலுத்தும் நிர்வாகம், விழாக்காலங்களில் கோயிலை முறையாக பராமரிப்பதிலும் கோயில் நடை முறைகளை பாதுகாப்பதிலும் கொஞ்சமும் அக்கறை காட்டுவதில்லை என்று மனம் குமுறினர்!