செங்கோட்டையில் தத்ரூபமாய் அரங்கேறும் சூரசம்ஹாரம்.
சூரபத்மன் சிவபக்தன். பல ஆயிரவருஷங்கள் தவமிருந்து சாகா வரமாக சிவனின் அம்சத்தால் மட்டுமே அழிவு வர வரம் வாங்கினான். சிவபக்தன் என்பதால், சிவனால் நமக்கு மரணமில்லை என்பதால் மரணமில்லா வாழ்வு வந்ததாக கர்வத்தால் எல்லோரையும் கொடுமை செய்தான். தேவர்கள், முனிவர்கள் முறையிட்டால் சிவ அம்சமாக தோன்றினார் சுப்பிரமணியசுவாமி. துஷ்டனை அழித்து, தர்மத்தை நிலைநிறுத்தி, இறைபக்தி முக்கியமன்று பிற உயிர்களுக்கு தீங்கு செய்தால், சிவபக்தி, பூஜைகள்,தவங்கள் வீண் என்று உணர்த்தி அகந்தை கொண்டாடிய அசுராதிகளை வதம் செய்தார்.🙏
யாராலும் தன்னை ஜெயிக்க முடியாது என்று அகந்தையிலிருந்த சூரன் , ஒரு சிறுபாலகன் போருக்கு வந்ததைக் கண்டு நகைத்தான். இறுமாந்தான். போர்களத்தில் தம்பியர் இழந்து கடை நிமிடத்தில் தேவர்கள் சேனாபதியாய் வந்திருந்த கார்த்திகேயனின் திறம் அறிந்து தெளிகிறான்.
அப்பொழுது அவன் இறைவனை, முருகனை நோக்கி இரு கை கூப்பி தலைமேல் வைத்து ஓலமிட்டு அழுகிறான்.
கச்சியப்ப சிவாசார்யார் எழுதியுள்ள
கந்தபுராணத்தில் யுத்தகாண்டத்தில் உள்ள இப்பாடல்கள் அவன் இறுதியில் உருகி தொழுவதை விளக்குகிறது.
இதில் குறிப்பிட்ட சில பாடல்களை சஷ்டியன்று சூரசம்காரத்தின் பொழுது மகாசூரன் முருகனை வலம் வந்து ஓலமிடுவதாக ஒர் காட்சி அரங்கேறும்.
செங்கோட்டையில் நடைபெறும் சூரசம்காரவிழாவில் இந்நிகழ்ச்சி நடைபெறும்.
வேல் பூஜை முடிந்து , சிவசக்தியிடம்
அனுமதிப் பெறுவதில் தொடங்கும் சம்கார நிகழ்வு,
யானை சூரனும், சிங்கசூரனும் அடிப்பட்ட பின்பு தேரடியில் மகாசூரன் கைக்கூப்பி நிற்க ஓதுவார் அவர்கள் இதனை பாடுவார்கள். மனதை உருக்கி, நம்மை பக்தி பரவசத்தில் ஆழ்த்தும் அப்பாடல்கள்…
முதலில் விநாயகர் காப்பு:
திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணி யாவுரை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவோம்
பின்..
ஆறுமா முகத்து வள்ளல்
அருள்பணி தலைக்கொண்டு ஏகி மாறிலா முதல்வன் தந்த
வையமது அழைத்து வெம்கால்
தாறுசேர் கோலும் நாணும்
தாங்கினன் கடாவியுய்ப்ப
ஏறினான் அதன்மேல் ஐயன்
இமையவர் யாரும் ஆர்த்தார்.
ஆறுமுகப் பெருமான் அருள் செய்த கட்டளைப் படி வாயுவாற் கொண்டுவந்த தம்தேர் மீது ஏறி அருளினார். தேவர்கள் யாவரும் ஆர்ப்பரித்தனர்.
முண்டக மலர்ந்ததென்ன மூவிரு முகமும் கண்ணும்
கொண்ட நிரையும் செம்பொன் மௌலியும் கோலமார்பும்
எண்டகு கரம் ஈராரும் இலங்கு எழிற் படைகள் யாவும்
தண்டையும் சிலம்பும் ஆர்க்கும் சரணமும் தெரியக் கண்டான்.
உடல் சினம்மொடு சூரன் ஒருவனாய் அங்கண் நின்றான்
அடல் வலி கொண்ட வாளி அந்தர நெறியால் மீண்டு
புடை உறு சரங்களோடு பொள்ளெனத் தூணி புக்க
சுடர் நெடுந் தனிவேல் அண்ணல் அவன் முகம் நோக்கிச் சொல்வான்.
சூரபத்மன் மாறுபட்டு பெரும் சினத்துடன் நிற்க காம்புகள் நீண்டு வான்வழி சென்று ஏனைய பாணங்களோடும் அம்பு கூட்டினுட் புகுந்தன. வெற்றி வேலாயுத பெருமான் சூரபத்மனை முகத்தை பார்த்து பின்வருமாறு கூறினார்
வெம்புயலிடையிற் தோன்றி
விளிந்திடு மின்னு வென்ற
விம்பரி லெமது முன்னம்
எல்லையற்ற இவ்வுருவம் கொண்டாய்
அம்பினிலவற்றை யெல்லாம்
மட்டன மழிவில்லாத
நம்பெரு வடிவங் கொள்வ
நன்று கண்டிடுதி யென்றான்
முகில் திரையில் தோன்றி வருகின்ற மின்னலைப்போல் யுத்த தலத்தில் என் முன்னே பல மாய வடிவங்களை கொண்டாய் அவற்றை எல்லாம் யாம் என் பானங்களினாளேயே அடித்தோம் இனி எமது என்றுமுள்ள பரமேஷ்வர வடிவத்தை கொள்கின்றோம் தரிசித்து கொள் அதனால் உனக்கு மேலும் பெரிய நன்மை உண்டாகும் என்றார்.
கூறி மற்றினைய தன்மை குரைகடல் உலகம் திக்கு
மாறிலா புவனம் அண்டம் வானவர் உயிர்கள் யாவும்
ஆறுமுகத்தை வள்ளல் மேனியில் அமைந்ததன்றி
வேறிலை அன்ன ஆங்கோர் பெருவடிவங் கொண்டான்.
கந்த வேட் பெருமான் திருவாய் மலர்ந்தருளி எல்லா பிரபஞ்ச பொருட்களும் தன் திருமேனியில் அமைந்தது இருக்கின்றது என்று பரமேஸ்வர வடிவத்தை காட்டினார்.
பின் முருகனின் பரமேஸ்வர வடிவம் வர்ணிக்கப்படுகிறது.
செஞ்சுடர் அநந்த கோடி
செறிந்தொருங்கு குதித்த தென்ன விஞ்சிய கதிர் கான்றுள்ள
வியன்பெரு வடிவை நோக்கி
நெஞ்சந் துளங்கி விண்ணோர்
நின்றனர் நிமல மூர்த்தி
அஞ்சன்மின் அஞ்சன்மின் என்று அருளினன் அமைந்த கையான்.
அனந்த கோடி சூரியப் பிரகாசமான செவ்வொளி வீசிய பரமேஸ்வர வடிவத்தைக் கண்டு தேவர்கள் மனம் நடுங்கி நின்றார் கள். எம்பிரான் அஞ்சாதே அஞ்சாதே என்று திருவருள் செய்தார்.
கோலமா மஞ்ஞை தன்னிற்
குலவிய குமரன் றன்னைப்
பாலனென் றிருந்தேன் அந்நாள்
பரிசிவை யுணர்ந்திலேன் யான் மாலயன் றனக்கும் ஏனைய
வானவர் தமக்கும் யாவர்க்கும் மூலகாரணமாய் நின்ற
மூர்த்தியிம் மூர்த்தி யன்றோ!
அழகிய மயில் வாகனத்தின் மீது எழுந்தருளிய பெருமானை அரசு வீற்றிதருந்த முன்னாளில் ஒரு சிறு பாலன் என்று எண்ணியிருந்தேன் இப்பொழுது பார்க்கின்ற மூர்த்தியே இச்சிறுவன் என்பதை அறியவில்லை. இப்பொழுது பார்க்கும்போது இந்திராதி தேவர்கள் யாவருக்கும் மூல காரணமாய் இருக்கின்ற இந்த மூர்த்திதான் அந்த சிவகுமாரன் என்ற உண்மை விளங்குகிறது.
சூழ்தல் மீண்டும் தாள்கள்
தொழுதிடல் வேண்டும் அங்கை
தாழ்தல் வேண்டும் சென்னி துதித்திடல் வேண்டும் தாலும்
ஆழ்தல் வேண்டும் தீமை என்று நான் இவர்க்கு ஆளாகி
வாழ்தல் வேண்டும் நெஞ்சம் தடுத்தது மானம் ஒன்றே
என் கால்கள் இப்பெருமானை வலம் வர விரும்புகின்றது. கைகள் வணங்க விரும்புகின்றது. தலை தாழ்ந்து வணங்க விரும்புகின்றது. நா துதிக்க விரும்புகின்றது. மனம் கீழ் படுத்தும் பால் செயல்களை விடுத்து இவருக்கு ஆட்பட்டு வாழ்தலை விரும்புகின்றது மானம் ஒன்று தடுத்தது இவற்றையெல்லாம்.
நண்ணினார்க்கு இனியாய் ஓலம் ஞான நாயகனே ஓலம்
பண்ணவர்க்கு இறையே ஓலம் பரஞ்சுடர் முதலே ஓலம்
எண்ணுவதற்கு அரியாய் ஓலம் யாவையும் படைத்தாய் ஓலம்
கண்ணுதல் பெருமான் நல்கும் கடவுளே ஓலம் ஓலம்
சார்ந்தவர்கள் எல்லாம் இனிமை செய்பவரே அபயம் ஞான போதான மூர்த்தியே அபயம் குருத்துவ தலைவரே அபயம் பேரொளிப்பொருளே அபயம் சிந்தனைக் கரியாய் அபயம் எல்லாவற்றையும் தோற்றுவித்தாய் அபயம் சிவகுமாரரே அபயம் அபயம்
தேவர்கள் தேவே ஓலம்
சிறந்த சிற்பரனே ஓலம்
மேவலர்க்கு இடியே ஓலம்
வேற்படை விமலா ஓலம்
பாவலர்க்கு எளியாய் ஓலம்
பன்னிருபுயத்தாய் ஓலம்
மூவருமாகி நின்ற
மூர்த்தியே ஓலம் ஓலம்
தேவர்கள் தேவரே அபயம் மேதக்க சிற்பர னே அபயம் பகைவருக்கு இடியே அபயம் வெற்றி வேலாயுத பெருமானே அபயம் புலவர்களுக்கு எளியாய் அபயம் பன்னிருபுயத்தவரே அபயம் மும்மூர்த்திகளுமாய் நின்ற முதல்வரே அபயம் அபயம்
மூவர்கள் முதல்வன் வந்தான் முக்கணான் குமரன் வந்தான்
மேவலர் மடங்கல் வந்தான் வேற்படை வீரன் வந்தான்
ஏவரும் தெரிதல் தேற்றாது இருந்திடும் ஒருவன் வந்தான்
தேவர்கள் தேவன் வந்தான் என்றென சின்னமெல்லாம்
காளங்கள் யாவும் மூவருள் முதல்வன் வந்தான் முக்கண்ணன் மைந்தன் வந்தான் மேவலர் மடங்கல் வந்தான் வெற்றிவேல் வீரன் வந்தான் தேவாதி தேவன் வந்தான் என்று ஒலித்தன
பன்னிரு கரத்தாய் போற்றி பசும்பொன் மயிலாய் போற்றி
முன்னிய கருணை ஆறுமுகப் பரம்பொருளே போற்றி
கன்னியர் இருவர் நீங்காக் கருணை வாரிதியே போற்றி
என்னிரு கண்ணே எண்ணிலிருக்கும் மாமணியே போற்றி
இறுதியும் முதலும் இல்லா
இப்பெரு வடிவம் தன்னை
கறை விட முறஞ் சூரன்
கண்டு விம் மிதத்தினிற்ப
வறிவரு உணர்தல் தேற்றா
ஆறுமா முகத்து வள்ளல்
சிறிதுநல் உணர்ச்சி நல்க
வினையென செப்ப லுற்றான்
நஞ்சை ஒத்த சூரபத்மன் அடிமுடி ஏற்ற விஸ்வரூபத்தை கண்டு அதிசயித்து நிற்க ஞானவான்கள் தாமும் முத்து அறிதற்கரிய ஆறுமுக பெருமான் ஞானத்தைக் கொடுக்க பின்வருமாறு கூறுகிறான்.
கிள்ளையின் வதன. மற்ற
கேழ்கிளர் பசுங்காய் தூக்கித்
தள்ளரு நிலைத்தாய் நின்ற
மாவுருச் சாய்தலோடு
முள்ளுறு சினமீக் கொள் எல்லை தொல்லுருவம் எய்தி
வள்ளுறை யுடைவாள் வாங்கி
மலைவது கருதி யார்த்தான்
சூரபத்மன் கிளியின் மூக்கு போன்ற பசிய காய்கள் தூங்கிய தன் மாவடிவு துணிந்து வீழ்தலும் சிற்றமேற்கொண்டு தன் உண்மை வடிவம் எய்தி கூரிய உரை உடைவாளை எடுத்து. வேலோடு போராட எண்ணி ஆர்த்தான்
செங்கதிர் அயில் வாள் கொண்டு செருமுயன் றுருமி னார்த்ததுத் துங்கமொ டெதிர்ந்து சீறுஞ்
சூருரங் கிழித்துப் பின்னும்
அங்கம திரு கூறாக்கி
அலைகடல் வரைப்பில் வீட்டி
யெங்கணும் மறைகள் ஆர்ப்ப
வெஃகம் வான் போயிற்றம்மா
கூறிய வாட் படை கொண்டு பொரு தொழில் முயன்று இடிபோல் ஆர்த்து எதிர்த்து சூரபத்மன் அது மார்பை வேலாயுதம் ஆனது பிளந்து பின்னிருந்து சூயன் பதுமன் என்பவரது இரு உடலையும் வேறுபடுத்தி கடலில் எறிந்து விட்டு மீண்டும் வேதம் முழங்க வான்வழி பாய்ந்தது.
புங்கவர் வழுத்திச் சிந்தும்
பூமழை இடையி னேகி
அங்கியின் வடிவ நீங்கி
அருளுருக் கொண்டு வான்றோய் கங்கையிற் படிந்து மீண்டும்
கடவுளரிடுக்கண் டீர்த்த
வெங்கடம் பெருமான் செங்கை
யெய்தி வீற்றிருந்த தவ்வேல்
அவ்வேற் படை தேவர்கள் துதித்துத் தொழுகின்ற பூமழை ஊடாகச் சென்று அக்னி வடிவத்தை மாற்றி அனுகிரக வடிவம் உற்று ஆகாய கங்கையைத் தரித்த ஆறுமுகப் பெருமானது திருக்கரத்தில் மீண்டும் அமைந்தது
ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியார் எல்லாம்
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால் ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட மன்றுளார் அவர் வான்புகழ் நின்றதெங்கும் நிலவி உலகெலாம்.