திருவண்ணாமலை தீபத்திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை ஊரின் எல்லையிலேயே பஸ்களை நிறுத்தப் போவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் தீபத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவிற்காக மாவட்ட நிர்வாகம் பல நிர்வாக திட்டங்களை ஏற்படுத்தி உள்ளது. இதன் ஒரு பகுதியாக தீபத் திருவிழா நடைபெறும் பத்து நாட்களும் பேருந்துகள் எதுவும் நகருக்குள் வராது என மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.
வெளியூரிலிருந்து பக்தர்கள் அதிகம் வருவதை தவிர்ப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாகவும், பக்தர்கள் வெளியில் இருந்து அதிக அளவில் வந்தால் தற்போது திருவண்ணாமலையில் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நோய்த்தொற்று, மீண்டும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என்றும், அதனாலேயே இந்த உத்தரவு என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.
இதற்கு முன்பு கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மூன்று நாட்கள் மட்டுமே, அதாவது தேர்த் திருவிழாவில் இருந்து தீபத் திருவிழா வரை மட்டுமே நகரின் எல்லையில் பேருந்துகள் நிறுத்தப்படுவது வழக்கம். ஆனால் தற்போது திருவிழாவின் முதல் நாளில் இருந்தே பேருந்துகள் ஊருக்கு வெளியிலேயே நிறுத்தப் படும் என்று அறிவித்துள்ளதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வெளியூர்களில் இருந்து பக்தர்கள் திருவண்ணாமலைக்கு அதிக அளவில் வந்துவிடுகிறார்கள் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் கவலைப்படுகிறார் ஆனால் உள்ளூரில் இருக்கும் பொது மக்கள் மற்றும் திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கக்கூடிய பொது மக்களுடைய நிலைமை என்னவென்று மாவட்ட ஆட்சியர் கொஞ்சம் கூட எண்ணிப் பார்க்கவேயில்லை.
அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், தனியார் கடைகளில் பணிபுரிபவர்கள், பள்ளிக்கு தினமும் பக்கத்து கிராமங்களில் இருந்து வரும் மாணவர்கள் என திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பேருந்துகளின் மூலம்தான் அம்மக்கள் அன்றாடம் நகருக்கு வந்து செல்கிறார்கள்.
திருவண்ணாமலை கல்லூரிகளுக்கு கிராமப் பகுதிகளில் இருந்து செல்லும் மாணவர்கள் பேருந்துகள் மூலமே தினமும் வந்து செல்கிறார்கள். இவர்கள் எல்லோரும் பஸ்கள் ஊரின் எல்லையிலேயே நிறுத்தப்பட்டு விட்டால் எப்படி அலுவலகங்களுக்கும், பள்ளிகளுக்கும் ,கல்லூரிகளுக்கும் செல்ல முடியும்?
மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்வுக் கூட்டங்களுக்கு மனு கொடுக்க வருபவர்கள் எவ்வாறு வந்து செல்ல முடியும்? திருவண்ணாமலை நகரில் உள்ள தனியார் நிறுவனங்கள், ஜவுளிக் கடைகள் ,மளிகை கடைகள் போன்ற நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இரவு தங்கள் பணியை முடித்து தங்களுடைய கிராமங்களுக்குச் செல்ல வேண்டுமெனில் நகரின் ஒவ்வொரு எல்லைப் பகுதிக்கும் சென்று பஸ் பிடித்து அதன் பின் வெகுநேரம் கழித்து வீடுகளுக்குச் செல்வது என்பது மிக கடினமான சூழலை ஏற்படுத்திவிடும்.
வெளி மாவட்டங்களில் இருந்து தினமும் 10 ஆயிரம் பேர் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்யலாம் என்று அனுமதிக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் பக்தர்கள் கோவிலுக்கு வருவதற்கும் பிறகு சுவாமி தரிசனம் செய்துவிட்டு ஊருக்குத் திரும்புவதும், ஆட்டோ போன்ற சிறு வாகனங்களில்தான்! அவர்கள் இந்த வாகனங்களில் நெருக்கியடித்துக் கொண்டு எந்த இடைவெளியும் இல்லாமல் பயணிக்க வேண்டியிருக்கும்.
தற்போதுள்ள கடினமான பொருளாதார சூழ்நிலையில் பொதுமக்கள் நகர எல்லையில் இருக்கும் பேருந்து நிலையம் செல்வதற்காக அதிகம் செலவிட நேரிடும்! எனவே திருவண்ணாமலை பகுதி மக்கள் நலன் கருதி, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள பத்து நாட்களும் திருவண்ணாமலை எல்லையிலேயே பேருந்து நிறுத்தப்படும் என்ற அறிவிப்பை மறுபரிசீலனை செய்து, விழா நடைபெறும் நாட்களில் மட்டும் அதாவது திருவிழாவிற்கு முன் இரண்டு நாட்களுக்கு மட்டும் பேருந்துகள் எல்லைப்புறத்தில் நிறுத்தலாம் என அறிவித்தால் அது உள்ளூர்வாசிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுக்கிறார்கள்.