இந்து மக்கள் லட்சியத்துடன் ஒன்று திரண்டால், தங்கள் குறிக்கோளில் உறுதியாய் நின்றால்… உரிமைகளைச் சரியாய்ப் பெறலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக… இன்று தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் நடந்த சூரசம்ஹார நிகழ்ச்சி தமிழகத்தின் பக்தர்களுக்கு முக்கியமான ஒரு செய்தியை எடுத்துரைத்துள்ளது.
இன்று முருகன் ஆலயங்களில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்வாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருந்தது. சூரசம்ஹார விழாவுக்கு புகழ்பெற்ற திருச்செந்தூர் கடற்கரையில் மக்கள் பெருமளவில் கூடுவதற்கு அறநிலையத் துறையும் மாநில அரசும் தடை விதித்திருந்தது. கடந்த இரு தினங்களுக்கு முன் திருச்செந்தூர் ஆலய வளாகத்தில் கலையரங்கத்தில் இரவு நேரம் மழைக்கு ஒதுங்கி இருந்த பக்தர்களை போலீசார் விரட்டியடித்தனர். தட்டிக்கேட்ட ஒரு பெண்ணை தரதரவென்று இழுத்துச் சென்று போலீசார் அராஜகத்தில் ஈடுபட்டனர் … இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. மக்கள் மத்தியில் இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது
இதுபோல் தென்காசி மாவட்டத்தில் புகழ்பெற்ற ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சூரசம்ஹார விழாவுக்கும் போலீசார் கெடுபிடிகளை முன்வைத்தனர். தென்காசி மாவட்ட காவல் துறையின் சார்பில் இதற்காக பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டன.
தென்காசி மாவட்ட காவல் துறையின் சார்பில் வைக்கப்பட்ட அறிவிப்பில்… அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திருச்செந்தூர் நடைபெறும் கந்தசஷ்டி விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி வருகின்ற 09.11.2021 செவ்வாய்க்கிழமை மற்றும் 10.11.2021 புதன்கிழமை ஆகிய இரு தினங்களில் நடைபெறவுள்ள சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் விழாக்களுக்கு பொதுமக்கள் காண அனுமதி இல்லை. எனவே பொதுமக்கள் திருக்கோவிலுக்கு செல்வதை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இப்படிக்கு, ஆய்க்குடி காவல் நிலையம், தென்காசி காவல் உட்கோட்டம், தென்காசி மாவட்டம் – என்ற அறிவிப்பு பளிச்சிட்டது. அங்கங்கே டிஜிட்டல் பிளக்ஸ் போர்டுகளும் காவல்துறையின் சார்பில் தடுப்புகளும் அமைக்கப்பட்டு இருந்தன.
ஆயினும், காவல் துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பிளக்ஸ் பேனர்களில், சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. திருச்செந்தூர் கோவிலுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி அனுமதி இல்லை என்பதை தென்காசி மாவட்டம் ஆயக்குடியில் ஏன் வைக்க வேண்டும் என்ற கேள்விகளை பக்தர்கள் எழுப்பினர். பலர் காவல்துறையின் அறியாமையை எண்ணி சிரித்தபடி சென்றனர்!
ஆனால், வழக்கம்போல் ஆய்க்குடி ஸ்ரீ முருகன் கோவில் சூரசம்ஹார விழாவுக்கு பக்தர்கள் இன்று பெருமளவு திரண்டனர். போலீஸார் ஆங்காங்கே ஏற்படுத்தி வைத்திருந்த தடுப்புகளை மீறி பக்தர்கள் பெருமளவில் குவிந்து, தாங்கள் இந்த முறை சூரசம்ஹார நிகழ்வை வழக்கம் போல் நடத்தி பக்தர் தரிசனத்துக்கு திறந்து வைப்போம்… இடம் மாற்ற மாட்டோம், வேறு எங்கும் நடத்தப்படக் கூடாது, பக்தர்கள் முன்னிலையில் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.
தடுப்புகளை அகற்றி விழாவை வழக்கம்போல் நடத்துவதற்கு போலீசாரை வற்புறுத்தியதால் வேறுவழியின்றி போலீசாரும் பக்தர்களை அனுமதித்தனர். விழா வழக்கம்போல் சிறப்பாக நடைபெற்றது. பக்தர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதாலும், பக்தர்கள் உறுதியுடன் இருந்ததாலும், போலீசாரால் தங்கள் கெடுபிடிகளை காட்ட முடியவில்லை!