
வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்… – கூடாது என்கிறது உச்ச நீதிமன்றம்!
– ஸ்ரீராம் –
இது சற்றே விநோதமான வழக்கு. 2013ல் இருந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இதில் கடந்த வியாழக்கிழமை மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல், மூத்த வழக்கறிஞர் கே கே வேணுகோபால் இந்திய ராணுவத்தினர் தங்களுடைய ஆயுதங்களைக் கொண்டு செல்லக்கூட சரியான சாலை வசதி இல்லை….. ஆயுத தளவாடங்கள் இல்லாமல் எல்லையில் நமது ராணுவம் வெறுங்கையுடன் நிற்கச் சொல்கிறீர்களா? என உச்ச நீதிமன்ற நீதிபதிகளைப் பார்த்து காட்டமாகக் கேள்வி எழுப்பி இருக்கிறார்! ஆனாலும் கூட உச்ச நீதிமன்றம் அசைந்த பாடு இல்லை.
என்னதான் நடக்கிறது?
விஷயம் இது தான். பனி மலைச் சிகரங்கள் புவி வெப்பமடைதல் காரணமாக உருகி வருகிறது. பூகோள ரீதியாக இந்த உலகின் மூன்றில் ஒரு பங்கு நமது தேசத்தின் எல்லையில் உள்ள இமயமலைத் தொடரும், இந்தச் சிக்கலில் இருக்கிறது. இப்படியான சூழ்நிலையில் அங்கு எந்த விதமான கட்டுமானப் பணிகளும், உள் கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தக் கூடாது என NGO அமைப்பு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வழக்காடி வருகின்றனர்!
அதாவது 2013ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. எதிர் மனுதாரராக நம் மத்திய அரசு வழக்காடி வருகின்றது. சரியாகச் சொன்னால் NGO கேட்டதற்கு இணங்க தீர்ப்பு சொல்லிவிட்டு, அந்த தீர்ப்பு மீதான தடை கோரி வழக்கு மட்டும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுள்ளது.
சரி… இதனால் என்ன என்பவர்களுக்காக…
இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு காரணமாக நம்முடைய எல்லையில் எந்த ஒரு சாலை மேம்பாட்டுத் திட்டங்களையும் முன்னெடுக்க முடியவில்லை! குறைந்த பட்சம் சாலை அகலப்படுத்தும் பணியும்கூட நடைபெற முடியாத அளவுக்கு, இந்தத் தீர்ப்பு தடை செய்கிறது.
முன்பு பரவாயில்லை…! ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் சீனாவை ஒட்டி அமைந்துள்ள சாலை விரிவாக்கம் கூட நடக்கக்கூடாது என்கிறது இந்தத் தீர்ப்பு. கேட்டால் சூழலியல் மாசு என்கிறார்கள்.
இதில் என்ன கூத்து என்றால், இந்தியன் ரோடு காங்கிரஸ் – IRC – கூட குறைந்த பட்சம் 7.5 மீட்டர் சாலை வசதியாவது அத்தியாவசியத் தேவை எனக் கேட்டு போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அந்த NGO அமைப்பின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதும், யார் யார் இயக்குகிறார்கள் என்பதும் உலகம் அறிந்த பரம ரகசியம்.
உதாரணமாக நம்மூர் பீட்டா அமைப்பு போல என்று வைத்துக் கொள்ளுங்கள். சரி இதனால் என்ன பாதிப்பு என்றால்… உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் சொன்னது போல, நமது ராணுவ வாகனங்கள் செல்வதற்குக் கூட முறையான சரியான சாலை வசதிகள் இல்லை! பிரமோஸ் ஏவுகணை 42 அடி நீளம் கொண்டது. தற்போதுள்ள மிகக் குறுகிய சாலையில் இதனை எப்படி எல்லைக்கு எடுத்துச் செல்ல முடியும்! இது ஏதோ ஒரு இடத்தில் மாத்திரமே என்று இல்லை, எல்லை நெடுகிலும் இதே கதை தான்.!
மத்திய அரசு உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ், கேதார்நாத், முக்திநாத் போன்ற புண்ணிய தலங்களுக்கு சாலை வசதி செய்து தர இருக்கிறது என்று புரளி கிளப்பி பிரச்னை செய்ய ஒரு கூட்டம் அலைந்து கொண்டு இருக்கிறது. இன்னொரு புறம் எல்லைக்கு வீரர்கள் செல்ல தாமதப் படுத்தும் விதமாகவே இன்றளவும் அங்கு சாலை வசதி இருக்கிறது. இதன் காரணமாகத்தான் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உத்தராகண்ட் மாநிலத்தில் ஓர் இடத்தில் சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் உள்நுழைந்து அட்டகாசம் செய்து விட்டு கிளம்பி சென்றது என்கிற செய்தியின் நிஜ பின்னணி இது தான் என்கிறார்கள்.
ஆனால் உச்ச நீதிமன்றம் இதனை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வில்லை! அவர்கள்….. காடு அழிப்பு கூடாது… நகர் விரிவாக்கம் கூடாது… அதீத கரியமில வாயு கூடாது… என பல கூடாதுகளைச் சொல்கிறார்கள்! போதாக்குறைக்கு இதனால் பனிச்சரிவு ஏற்படும், சூழியல் மாற்றம் ஏற்பட்டு விடும் எனும் NGO வாதத்தை ஏற்கிறார்கள்.
இடியாப்பச் சிக்கலை உண்டாக்கி இருப்பதோடு காலம் தாழ்த்துவதில் குறியாக இருக்கிறார்கள் என்கிற ரீதியில் செய்தி சொல்கிறது மத்திய அரசு தரப்பு.
இதற்கேற்றார்போல NGO தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கொலின் ஙோன்சால்வெஸ் தனது வாதத்தில் விடாப்பிடியாக நிற்கிறார்.

இதனால் மினிஸ்ட்ரி ஆஃப் ரோட் ட்ரான்ஸ்போர்ட் அன்ட் ஹைவேஸ் (MoRTH) சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சார்தாம் ஹைவே ப்ராஜெக்ட் அந்தரத்தில் நிற்கிறது. சார்தாம் எனப்படும் நான்கு முக்கிய தலங்களான கங்கோத்திரி யமுனோத்திரி கேதார்நாத் பத்ரிநாத் ஆகிய தலங்களுக்கு செல்லக்கூடிய 900 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்தச் சாலை இணைப்பை செயல்படுத்த, 12,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டது.
புதன் கிழமையன்று, உச்ச நீதிமன்றம், நாட்டின் பாதுகாப்புத் தேவைகளின் மிகப்பெரிய மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, பல ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்தப் படும் லட்சியத் திட்டமான சார்தாம் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அனுமதித்தால், அதைச் செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு கூடுதல் பாதுகாப்புகளை பரிந்துரைக்குமாறு மத்திய அரசையும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தையும் கேட்டுக் கொண்டது. .
செப்டம்பர் 8, 2020 உத்தரவை மாற்றியமைக்கக் கோரிய மத்திய அரசின் மனுவை நீதிமன்றம் விசாரித்தது. சீன எல்லை வரை செல்லும் 5.5 மீட்டர் நீளமுள்ள சார்தாம் நெடுஞ்சாலைத் திட்டம் குறித்த 2018 ஆம் ஆண்டு சுற்றறிக்கையைப் பின்பற்றுமாறு சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தை (MoRTH) கேட்டுக் கொண்டது.
ரிஷிகேஷ் முதல் மானா, ரிஷிகேஷில் இருந்து கங்கோத்ரி மற்றும் தனக்பூரிலிருந்து பித்தோராகர் வரையிலான தேசிய நெடுஞ்சாலைகளை இருவழிப் பாதையாக உருவாக்குவதற்கான உத்தரவு மற்றும் வழிமுறைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று MoD தனது வேண்டுகோளை முவைத்திருந்தது.
இந்த பனிமலைப் பகுதிகளில் அமைந்துள்ள மிகப்பழைய ஒற்றைச் சாலையில் எதிர் வரும் வாகனங்களுக்கு இடம் விடக் கூட வசதியில்லை! மொத்தமே பழங்கால பனிரெண்டு அடியில் உள்ள சாலை மட்டுமே இங்கு உள்ளது என்கிறார்கள். இந்தச் சாலையை வைத்துக் கொண்டு எப்படி பிரமோஸ் ஏவுகணை கொண்ட கனரக வாகனங்களை இந்தச் சாலையில் இயக்குவது என கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்?!
பதில் சொல்வதற்கு தான் இங்கு யாரும் இல்லை. வழக்கு, வழக்கம் போல ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.!