
கொல்கத்தா 3வது டி20 போட்டி:
இந்தியா அபார வெற்றி!
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
ஞாயிறன்று நடந்த மூன்றாவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 73 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இப்போட்டியை 3-0 என்ற கணக்கில் வென்றது. இன்றைய ஆட்டத்தில் கே.எல். ராகுல், அஷ்வின் ஆகியோருக்குப் பதிலாக யஜுவேந்திர சாஹலும் இஷான் கிஷனும் ஆடினர்.
ரோஹித் ஷர்மாவும் இஷான் கிஷனும் அதிரடியாக முதல் ஆறு ஓவரில் 69 ரன் எடுத்தனர். அடுத்த ஓவரின் இரண்டாவது பந்தில் இஷான் (21 பந்துகளில் 29 ரன், ஆறு ஃபோர்) ஆட்டமிழந்தார்.
அந்த ஓவரிலேயெ சூர்யகுமார் யாதவ் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஆட வந்த ரிஷப் பந்த் நாலு ரன் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் 12ஆவது ஓவரில் ரோஹித் (31 பந்துகள், 56 ரன், மூன்று சிக்சர்கள், ஐந்து ஃபோர்) ஆட்டமிழந்தார்.
ஷ்ரேயாஸ் ஐயரும் வெங்கடேஷ் ஐயரும் சுதாரித்து ஆடினார்கள். ஆயினும் 220 ரன் எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி 160 எட்டுவார்களா? என சந்தேகம் எழுந்தது. ஹர்ஷல் படேலும் (இவர் அரியானா டி20 அணியில் தொடக்க ஆட்டக்காரராக வருகிறார்) தீபக் சஹாரும் முறையே 18, 21 ரன் எடுத்ததனால் இந்திய அணி இருபது ஓவர் முடிவில் ஏழு விக்கட் இழப்பிற்கு 184 ரன் எடுத்தது.
பின்னர் ஆடவந்த நியூசிலாந்து அணியில் கப்திலைத் தவிர வேறு யாரும் சரியாக விளையாடவில்லை. முதல் ஆறு ஓவரில் அந்த அணி மூன்று விக்கட்டுகளை இழந்து 37 ரன் எடுத்தது. கப்தில் 33 பந்துகளில் நாலு சிக்சர், நாலு ஃபோர்களுடன் 51 ரன் எடுத்தார். அக்சர் படேல் மூன்று ஓவர் வீசி, 9 ரன் கொடுத்து 3 விக்கட்டுகள் வீழ்த்தினார். வெங்கடேஷ் ஐயரும் சிறப்பாக பந்துவீசினார்.
இறுதியில் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அக்சர் படேல் ஆட்ட நாயகனாகவும், ரோஹித் ஷர்மா இத்தொடரின் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார். அடுத்து இரண்டு டெஸ்ட் பொட்டிகள் நடைபெற உள்ளன. முதல் டெஸ்ட் கான்பூரில் வருகின்ற 25ஆம் தேதி தொடங்க உள்ளது.