
வசீம் ரிஸ்வி என்ற முஸ்லிமாக இருந்தவர், ஜிதேந்த்ர நாராயண் ஸ்வாமி என்ற காஃபிர் ஆகிவிட்டார் இப்போது. இந்நிலையில், வக்பு வாரிய முன்னாள் தலைவர் வசீம் ரிஸ்வி என்றுமே ஒரு முஸ்லிமாக இருந்ததில்லை என்று சிலர் சமூகத் தளங்களில் அவர் குறித்து விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேச ஷியா வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவர் வசீம் ரிஸ்வி, இஸ்லாம் மதத்தை விட்டு வெளியேறி இந்து மதமான சனாதன தர்மத்துக்கு மாறினார். மேலும் தனது பெயரை ஜிதேந்திர நாராயண் சிங் தியாகி எனவும் மாற்றிக் கொண்டார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஷியா வக்பு வாரிய தலைவராக இருந்தவர் வசீம் ரிஸ்வி. இவர், குர்ஆனில் இருந்து சில வசனங்களைக் கூறி, அவை வன்முறையைப் போதிப்பதாகவும், அந்த வசனங்களை நீக்க வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். இது அம்மாநிலத்தில் மட்டுமின்றி நாடு முழுதும் இஸ்லாமியர்கள் மத்தியில் சர்ச்சையானது.
வன்முறையை தூண்டும் வகையில் குர்ஆனில் இடம்பெற்றுள்ள சில போதனைகளை நீக்க வேண்டும் எனக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வசீம் ரிஸ்வி வழக்கு போட்டார். இதனால் அவர் மீது எதிர்ப்புகள் வலுத்தன.
தொடர்ந்து, நபி குறித்த விமர்சனக் கருத்துகளுடன் ஒரு புத்தகம் எழுதினார். இதை அடுத்து அவருக்கு கொலை மிரட்டல்கள் வரத் தொடங்கின. அவர் இஸ்லாம் மதத்திலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப் பட்டது.
இந்நிலையில், இஸ்லாம் மதத்தில் இருந்து, தாய் மதமான ஹிந்து மதத்திற்கு மாற முடிவு செய்தார் வசீம் ரிஸ்வி. அதன்படி, காஜியாபாத்தில் உள்ள தஸ்னா தேவி கோயிலுக்குச் சென்று, தாம் இந்து மதத்துக்கு மாற முடிவு செய்துள்ளதாகக் கூறினார். இதை அடுத்து, கோயில் தலைமை பூசாரி நரசிங்கானந்த் சுவாமிகள் அவருக்கு தாய் மதம் திரும்புவதற்கான சடங்குகளைச் செய்தார்.
சாதுக்கள் பலர் முன்னிலையில் நடந்த இந்த சடங்கின்போது, வசீம் ரிஸ்விக்கு பூணூல் அணிவிக்கப்பட்டது. இந்துவாக மதம் மாறிய வசீம் ரிஸ்விக்கு ஜிதேந்திர நாராயண் சிங் த்யாகி என பெயர் சூட்டுவதாக நரசிங்கானந்த் ஸ்வாமிகள் அறிவித்தார்.
சனாதன தர்மத்துக்கு மாறிய பின்னர் ஜிதேந்திர நாராயண் சிங் தியாகி காவி உடை அணிந்தபடி கோயிலில் யாகம் வளர்த்து பூஜை செய்தார். ‘இஸ்லாம் மதத்திலிருந்து நீக்கப்பட்ட பிறகு எனது தலைக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பரிசுத்தொகை அதிகரிக்கத் தொடங்கியது; இன்று இந்து மதத்துக்கு மாறியிருக்கிறேன்; இனி இந்து மத வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன் என ஜிதேந்திர நாராயண் சிங் தியாகி கூறினார்.

