15 + 6 =? தவறான பதிலுக்கு மதிப்பெண் அல்ல; மணப்பெண்ணும் கிடைக்கவில்லை: நின்றது திருமணம்

Published:

marriage-bride-groomகான்பூர்: உத்தரப் பிரதேச மாநிலத்தின் வடக்குப்  பகுதியில் உள்ள கான்பூருக்கு அருகில், 15 ஐயும் 6 ஐயும் கூட்டினால் என்ன வரும் என்று கேள்வி கேட்டார் மணப்பெண். 16 என தவறான பதில் அளித்ததால், மணமகனுக்கு மதிப்பெண் அல்ல… மணப்பெண்ணே கிடைக்காமல் திருமணம் பாதியில் நின்றது. மணமகனை உதறிய அப் பெண், மணமேடையில் இருந்து வெளியேறினார். கான்பூர் அருகே உள்ள ரசூல்பாத் கிராமத்தில் கடந்த புதன்கிழமை ஓர் இல்லத்தில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மணமேடைக்கு மணமகளும் மணமகனும் அழைத்து வரப்பட்டனர். மணமகன் அதிகம் படித்தவர் என்று, மணமகன் வீட்டார் தரப்பில் மணமகள் வீட்டாரிடம் கூறியிருந்தார்கள். ஆனால், அந்த மணமகனைப் பார்த்தால், சந்தேகமாக இருந்துள்ளது மணமகளுக்கு. உடனே அங்கேயே அவனை சோதித்துப் பார்க்க எண்ணியிருக்கிறார். கூட்டல் கணக்கில் இருந்து துவங்குவோமே என்று எண்ணி, மணமகனிடம் ஒரு சிறிய கணக்கைக் கேட்டுள்ளார். அது ஒன்றும் அப்படிப் பெரிதானது அல்ல….. 15-ஐயும் 6-ஐயும் கூட்டினால் எவ்வளவு வரும்? என்பதுதான் அந்தக் கேள்வி. திடீரெனக் கேட்கப்பட்ட இந்தக் கேள்வியால் மணமகன் திக்குமுக்காடிப் போயுள்ளார். அவர் அளித்த 16 என்ற தவறான பதில், மணமகளுக்கு பெருத்த அதிர்ச்சியை அளித்துள்ளது. உடனே மணமேடையை விட்டு விறுவிறுவெனக் கீழே இறங்கினார், நேராக வீட்டுக்குள் சென்று விட்டார். திருமண வீட்டில் கூடியிருந்தவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏன்  ஏன் என்று எல்லோரும் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்துள்ளனர். தனது மகளை நோக்கி ஓடினார் தந்தை. மணப் பெண்ணோ, அமைதியாக பொறுமையாக, தான் கேட்ட கேள்வியையும் அதற்கு மணமகன் சொன்ன பதிலையும் கூறி, இந்தத் திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்று கூறியிருக்கிறார். உடனடியாக திருமணம் நிறுத்தபட்டது. இது குறித்து மணப்பெண்ணின் தந்தை மொகர் சிங் கூறியபோது…. “மணமகன் நன்கு படித்திருப்பதாக அவர் வீட்டார் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் ஒரு சிறிய கணக்குக்குக்கூட அவரால் பதில் சொல்ல முடியவில்லை. இந்தக் கூட்டல் கணக்கை 1-ஆம் வகுப்பு குழந்தைகூட மனசில் போட்டு பதிலைச் சொல்லிவிடும். படிப்பறிவில்லாததால் அந்த மணமகனை ஏற்க என் பெண்ணுக்கு விருப்பமில்லை. இவ்விவகாரத்தில் மணமகன் வீட்டார் பொய் கூறியுள்ளனர். எனவே திருமணத்தை நிறுத்துகிறோம்” என்றார். இதனால், மணமகன் வீட்டாருக்கும் மணமகள் வீட்டருக்கும் இடையே பரிமாறப்பட்ட பரிசுப் பொருட்கள் மற்ரும் நகைகள் திரும்பப் பெறப்பட்டன.  இந்தச் சம்பவம் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சியைக் காட்டுவதாக திருமணத்துக்கு வந்தவர்கள் கூறிச் சென்றுள்ளனர். இந்தத் திருமணம் நின்றதில் ஏமாற்றமடைந்து போலீஸாரை அணுகியுள்ளனர் மணமகன் வீட்டார். ஆனால் உள்ளூர் போலீஸ் அதிகாரி ராகேஷ் குமார், அந்தப் பெண்ணைப் பாராட்டியதுடன், இங்கே பெரும்பாலான திருமணங்கள் பெரியவர்களால் பேசி முடிக்கப் படுகின்றன. அப்போது பெண்ணும் பையனும் பார்த்துக் கொள்ளும் வாய்ப்புகள் அமைவதில்லை. அதனால் ஏற்பட்டுள்ள பிரச்னை இது என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img