மேடையிலேயே மரித்த மகா கலைஞர்; கலாமண்டலம் கீதநந்தன் ஆசானின் அதிர்ச்சிகரமான முடிவு!

Published:

ஓட்டந்துள்ளல் கலைஞர் கலாமண்டலம் கீதநந்தன் ஆசான், ஜன.28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு கேரளத்தில் உள்ள அவிட்டத்தூர் மகாவிஷ்ணு ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆடிக் கொண்டிருந்த போது மயங்கிச் சரிந்து உயிரிழந்தார்.

5 ஆயிரத்துக்கும் அதிகமான மேடைகளில் நிகழ்ச்சிகளை நாடு முழுவதும் சென்று நடத்தியிருக்கிறார் 58 வயதாகும் கீதநந்தன். கேரளத்தின் புகழ்பெற்ற ஓட்டந்துள்ளல் கலையினை பலருக்கும் கற்றுக் கொடுத்து வந்தார். திரிசூர் இரிஞ்ஜாலக்குடாவில் மேடையில் ஆடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கிச் சரிந்தார். அவரை உடனே அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்பட்டது.

மலையாளத்தில் படங்கள் பலவற்றில் நடித்துள்ளார். கமலதளம் படத்தின் மூலம், தனது கலைத் துறையை வைத்து சினி உலகுக்கு அறிமுகமானவர். பின்னாளில் தூவல் கொட்டாரம், மனசினக்காரே, நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வக, இரட்டக் குட்டிகளுடே அச்சன் என பல்வேறு படங்களில் முத்திரை பதித்தவர்.

பாலக்காட்டைச் சேர்ந்தவர். கேரளத்தின் செருத்துருத்தியில் வசித்து வந்தார்.
மனைவி ஷோபனா, மற்றும் சனல்குமார், ஸ்ரீலக்ஷ்மி என வாரிசுகளுடன் வாழ்ந்துவந்தார். அவர்களும் துள்ளல் கலைஞர்களாகத் திகழ்கின்றனர்.

துள்ளல் கலையை பிரபலப்படுதியவர் கீதநந்தன். இன்று கேரளத்தின் மாணவர்கள் பலரும் துள்ளல் கலையை பெரு விருப்புடன் கற்கின்றனர் என்றால் அதற்குக் காரணமாக விளங்கியவர் இவரே. பின்னாளில் துள்ளல் கலையைக் கற்றுக் கொடுக்க கலாமண்டலத்தில் அமைக்கப் பட்ட அமைப்பின் துறைத் தலைவராக இருந்து பயிற்றுவித்தார்.

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

மேடைகள் பல கண்டவர். 1984ல் பிரான்ஸின் பாரீஸ் நகரில் மிகப் பெரும் அளவில் நிகழ்ச்சியை நடத்தியவர். வீரச்ருங்கால, துள்ளல் கலாநிதி உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர். துள்ளல் கலையுடன் இசை சேர்ந்து அளிக்கும் துள்ளல்பாத கச்சேரி என்ற நவீன கலையின் முதல் கலைஞராகத் திகழ்ந்தவர்.

1974ல் கலாமண்டலத்தில் துள்ளல் கலைத் துறையின் மாணவராகச் சேர்ந்தார். மிகவும் ஏழ்மையான, கௌரவமிக்க குடும்பத்தில் இருந்து வந்தவர். அவருடைய தந்தையாரால் கலாமண்டத்தில் கட்டணத்தைச் செலுத்த இயலாத நேரத்தில் மெட்ரோமேன் எனப் புகழப் படும் ஈ.ஸ்ரீதரன் கட்டணம் அளித்து அவருக்கு ஊக்கமளித்தார். இதனை தனது பேஸ்புக் பக்கத்தில் நன்றியுடன் நினைவு கூர்ந்திருக்கிறார் கீதநந்தன்.

இவரது மறைவுக்கு கேரள முதல்வர் பினரயி விஜயன், கலாசாரத் துறை அமைச்சர் ஏகே பாலன், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img