இது தொடர்பாக, சென்னை காவல் ஆணையர் சார்பில் வெளியிடப் பட்ட அறிக்கை:
சென்னை பெருநகரத்தில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறினாலும், வாகன சோதனையின் போது நிற்காமல் போனாலும் கூட போக்குவரத்துக் காவல் அதிகாரிகள் துரத்திப் பிடிக்கக் கூடாது என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. அவ்வகையான உத்தரவு எதையும் சென்னை பெருநகர காவல் ஆணையர் வழங்கவில்லை.
குற்றம் செய்பவர்கள் மற்றும் சட்டத்தை மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது காவல் துறையின் கடமையாகும். அதன்படி அனைத்து நடவடிக்கைகளையும் காவல் துறையினர் எடுப்பர்.
அனைத்துப் பிரிவுகளையும் சார்ந்த காவல் அதிகாரிகளும் காவலர்களும் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் பரிவோடும் கனிவோடும் நடந்து கொள்ள வேண்டும் என்றும், அதே போல், சட்டத்தை மீறுபவர்களிடமும் கூட உறுதியான ஆனால் மனித நேயத்தோடு கூடிய நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்றே அறிவுறுத்தப் பட்டுள்ளது
இவ்வாறு அந்த பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப் பட்டிருந்தது.
முன்னதாக, சென்னையில் போக்குவரத்து காவலர்கள் தன்னிச்சையாக வாகனங்களை நிறுத்தி ஆவணங்கள் தணிக்கை செய்யக்கூடாது என்றும், போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை எக்காரணத்தை கொண்டும் துரத்தி சென்று பிடிக்கக்கூடாது என்றும், போக்குவரத்து காவலர்கள் சீருடையிலோ அல்லது சாதாரண உடையிலோ இருசக்கர வாகனம் ஓட்டும்போது கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும், மீறினால் கடும் நடவடிக்கை என்றும் சென்னை காவல் ஆணையர் கூறியதாக செய்தி வெளியானது.



