புது தில்லி: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரேணுகா சவுத்ரியின் அலட்சியத்தால், ‘ஏர் இந்தியா’ விமானம் 45 நிமிடம் கால தாமதமாகப் புறப்பட்டது. இதுகுறித்து விரிவான விசாரணைக்கு ஏர் இந்தியா உத்தரவிட்டுள்ளது. தெலங்கானா மாநில காங்கிரஸ் எம்.பி., ரேணுகா சவுத்ரி, தில்லியிலிருந்து ஐதராபாத் செல்வதற்காக, ஏர் இந்தியா விமானத்தில் முன்பதிவு செய்திருந்தார். நேற்று இரவு 7:00 மணிக்குப் புறப்பட வேண்டிய விமானம், ரேணுகா சவுத்ரி வராததால் புறப்படத் தாமதமானது. விமான நிலைய அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் அவர் பெயரைச் சொல்லி பல முறை அழைத்தும் அவர் வரவில்லை. வெகுநேரம் இவ்வாறு காத்திருந்ததால், விமானத்தில் பயணம் செய்ய அமர்ந்திருந்த பயணிகள் எரிச்சல் அடைந்தனர். இந்த விமானத்தில் மத்திய அமைச்சர் ஒருவரும், உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரும் பயணித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து, ஏர் இந்தியா நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்த போது, ரேணுகா சவுத்ரி ஏற்கெனவே விமான நிலையத்துக்கு வந்துவிட்டார். அவரின் உடைமைகளும் விமானத்தில் ஏற்றப்பட்டுவிட்ட நிலையில், கடைசி நேரத்தில் அவர் வெளியே ஷாப்பிங் செய்யச் சென்றுவிட்டார். அவரின் உடைமைகள் ஏற்கெனவே ஏற்றப்பட்டு விட்டதால், வேறுவழியின்றி, ரேணுகா சவுத்ரி வரும் வரை விமானத்தை இயக்க முடியாமல் போனது. இதனால், விமானம் புறப்படுவதில் 45 நிமிட கால தாமதம் ஏற்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்த ஏர் இந்தியா நிறுவனம் உத்தரவிட்டுள்ளது என்றார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ரேணுகா சவுத்ரி மறுத்துள்ளார்.

