
இந்தியா ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட், நாக்பூர், இரண்டாம் நாள் 10.02.2023
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்னுக்கு ஆல் அவுட் (லபுசேன் 49, ஸ்மித் 37, ஜதேஜா 5/47, அஷ்வின் 3/42) இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஏழு விக்கட் இழப்பிற்கு 321 ரன் (ரோஹித் ஷர்மா 120, ரவீந்தர் ஜதேஜா 66*, அக்சர் படேல் 52*, மர்பி 5/82)
நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது, இன்று இரண்டாம் நாள் ஆட்டம். நேற்றைய ஆட்ட நேர இறுதியில் அஷ்வின் ரன் எதுவும் எடுக்காமலும் ரோஹித் ஷர்மா 56 ரன்களோடும் களத்தில் இருந்தனர். இந்திய அணி ஒருவிக்கட் இழப்பிற்கு 77 ரன் எடுத்திருந்தது.
இன்று அஷ்வினும் ரோஹித்தும் தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அடிக்க வேண்டிய பந்தை அடித்து, பிற பந்துகளை பொறுமையாக ஆடினார்கள்.
அஷ்வின் இன்று 20 ஓவர்கள் வரை விளையாடி 23 ரன் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் புஜாரா (7 ரன்), கோலி (12 ரன), சூர்யகுமார் யாதவ் (8 ரன், இது அவருக்கு முதல் டெஸ்ட்) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பின்னர் ரோஹித் ஷர்மாவுடன் ரவீந்தர் ஜதேஜா இணைந்தார்.
ரோஹித்தும் ஜதேஜாவிம் ஆறாவது விக்கட்டுக்கு 61 ரன் கள் சேர்த்தனர். இச்சமயத்தில் ரோஹித் 212 பந்துகளில் 15 ஃபோர், 2 சிக்சருடன் 120 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர் ஆட வந்த பரத் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் அக்சர் படேல் ஜதேஜாவுடன் இணைந்து அணியின் ஸ்கோரை 321 ரன்னுக்கு உயர்த்தினார்.
ஆட்டநேர முடிவில் இநதிய அணி ஏழு விக்கட் இழப்பிற்கு 321 ரன் கள் எடுத்துள்ளது. ஜதேஜா 66 ரன்களுடனும் அக்சர் படேல் 52 ரன்களுடனும் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை விட 144 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இன்னமும் மூன்று நாட்கள் ஆட்டம் உள்ளது. இப்போதே இந்தியாவின் வெற்றி ஏறத்தாழ உறுதி என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒரு வேளை இந்திய அணி இன்னமும் 100 ரன் சேர்க்க முடிந்தால் இன்னிங்ஸ் வெற்றியும் கிடைக்கலாம்.