
ஒடிசா பாலாசோர் பகுதியில் மிக மோசமான வகையில் ரயில் விபத்து நடந்த பகுதியில், ரயில்வே அமைச்சரின் தொடர்ந்த மேற்பார்வையால், அடுத்த 51 மணி நேரத்தில், மீண்டும் ரயில் சேவை தொடங்கியுள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் என்ற இடத்தில் சரக்கு ரயில், கோரமண்டல், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்கள் அடுத்தடுத்து மோதி ஏற்பட்ட விபத்தில், சுமார் 280 பேர் உயிரிழந்தனர். 900க்கும் அதிகமானோர் காயங்களுடன், சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த ரயில் விபத்து நடந்த பகுதியில் இரு தினங்களாக தங்கி, நிலைமையைக் கண்டறிந்து, தகுந்த கட்டளைகளைப் பிறப்பித்து உடனிருந்து விடாமுயற்சியுடன் பணியில் ஈடுபட்ட மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மீட்புப் பணிகள் முடிந்து, தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று மாலையே ரயில் பாதை சீரமைப்புப் பணிகள் முடிந்து ரயில் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் இருப்பதாகத் தெரிவித்தார்.
இதை அடுத்து, நாட்டையே உலுக்கிய இந்த கோரமான ரயில் விபத்து நடந்த பகுதியில் ரயில் பாதைகள் துரித கதியில் சீரமைக்கப்பட்டு 51 மணி நேரத்தில் சரக்கு ரயில் இயங்கத் தொடங்கியது. இது குறித்த, வீடியோவை அஸ்வினி வைஷ்ணவ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். முதல் சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கிச் சென்றதும், கையெடுத்து வணங்கிய வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.