
சந்திரயான்- 3 விண்கலம் வரும் 23ஆம் தேதி மாலை நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே மாலை 5.45 மணியளவில் நிலவில் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாலை 6.04 மணிக்கு தரையிறங்கும் என நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய நிறுவனம் நிலவுக்கு அனுப்பிய விண்கலம் லூனா-25 தோல்வியில் முடிந்த நிலையில், நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கும் முதல் நாடு என்ற பெருமையைப் பெறும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது.
முன்னதாக, நிலவின் தென்துருவத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக ரஷியா, லூனா-25 என்ற விண்கலத்தை கடந்த 10-ம் தேதி விண்ணில் செலுத்தியது. இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்துக்கு போட்டியாக ரஷிய விண்கலம் அனுப்பியதாகக் கூறப்பட்டது.
குறிப்பாக, சந்திரயான்-3 விண்கலம் 23-ம் தேதி நிலவில் தரை இறங்க திட்டமிட்டிருந்த நிலையில் அதற்கு முன்பாக 21-ம் தேதி லூனா-25 விண்கலத்தை நிலவில் தரையிறக்க ரஷிய விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.
சுமார் 47 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுக்கு ரஷியா அனுப்பிய லூனா-25 விண்கலம் கடந்த 17-ம் தேதி வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது. தொடர்ந்து லூனா-25 விண்கலனின் உயர குறைப்புகளை விஞ்ஞானிகள் செய்து வந்தனர். இந்நிலையில், திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், நிலவில் தரை இறக்குவதற்கு முந்தைய சுற்றுவட்டப் பாதையில் விண்கலத்தை செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், ரஷியாவின் லூனா 25 விண்கலம் நிலவில் மோதியதாக ரஷியா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நேற்று லூனா 25 விண்கலத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நிலவில் மோதியதாக தகவல் வெளியாகியுள்ளது. லூனா-25 விண்கலத்துடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த ரஷிய விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது.