
பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை இன்று நெல்லை மாவட்டத்தில் 2-வது நாளாக தனது நடைபயணத்தை வள்ளியூர் நம்பியான் விளையில் தொடங்கினார்.
அங்குள்ள பத்திரகாளி அம்மன் கோவில் முன்பு இருந்து நடைபயணத்தை தொடங்கி அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், பூரண கும்ப மரியாதை கொடுத்தும் வரவேற்றனர்.
ஏராளமான சிறுவர், சிறுமிகள் மோடி வேடமணிந்து அவரை வரவேற்றனர். தொடர்ந்து அப்பகுதியில் நடைபயணம் சென்ற அவருக்கு பொதுமக்களும், தொண்டர்களும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக, விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டி வீரன் நினைவு தினத்தை முன்னிட்டு பாளையில் உள்ள அவரது உருவ சிலைக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
1857-ல் முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் தொடங்கியதாக கூறுகிறார்கள். ஆனால் அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு வீரம் விளைந்த இந்த நெல்லை மண்ணில் ஏராளமானோர் இந்திய சுதந்திரத்திற்காக போராடி இருக்கிறார்கள். அதை இளைய தலைமுறை இடையே கொண்டு சேர்ப்பது நம்முடைய கடமை என்றார்.
அதைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் தி.மு.க. குறித்தும், முதலமைச்சர் குறித்தும் அவதூறு பரப்பியதாக உங்கள் மீது முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் புகார் அளித்துள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டபோது அண்ணாமலை கூறியதாவது:-
அரசியலைப் பொறுத்தவரை நாங்கள் தி.மு.க.வின் பொய்யை தோலுரித்துக் காட்டுவதை அவதூறு பரப்புவதாக தி.மு.க.வினர் கூறுகிறார்கள். என்ன அவதூறு பரப்பினேன்? யார் குறித்து அவதூறு பரப்பினேன் என்பதை அவர்கள் சொல்ல வேண்டும்.
நான் பேசியது அவதூறு என்றால், ராமநாதபுரம் மாநாட்டில் பிரதமர் மோடி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது அவதூறு இல்லையா? பாராளுமன்ற திறப்பு விழாவிலே செங்கோலுக்கு பிரதமர் மோடி மரியாதை செய்தது குறித்து அவதூறு கருத்தை பதிவிட்ட அமைச்சர் மனோ தங்கராஜை முதலில் கைது செய்ய வேண்டும்.
தி.மு.க.வின் அவதூறு வழக்குகளை கண்டு பயப்பட போவதில்லை. சில நேரங்களில் தி.மு.க.விற்கு அவர்கள் பாணியிலேயே நாங்கள் பதிலடி கொடுக்க வேண்டி உள்ளது .
நீட் தேர்வு விவகாரத்தில் ஒன்றுமே இல்லாத பிரச்சினையை பெரிதாக்கி அவர்களை தற்கொலைக்கு தூண்டியது தி.மு.க. தான். இந்தியாவில் வேறு எங்கும் நீட் தேர்வு தொடர்பாக தற்கொலைகள் இல்லை.
தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்த காலம் முதல் தற்போது வரை தமிழகத்தில் மட்டும் தான் நீட் தற்கொலைகள் நடைபெறுகின்றன. ஜார்க்கண்டிலேயே பழங்குடியின மாணவர் நீட் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள்.
ஆந்திரத்தில் பின்தங்கிய மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள். நீட் தேர்வில் முதல் 10 இடங்களை பெற்றவர்களில் 4 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். நீட் தேர்வு தொடர்பாக தமிழகத்தில் இனி தற்கொலை நடக்கக்கூடாது என கடவுளை வேண்டிக் கொள்கிறேன் .
நாங்குநேரி சம்பவத்திற்கு போதிய வேலை வாய்ப்பு இல்லாததே காரணம். தென் தமிழகத்தில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். பொறியியல் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை படித்து முடித்துவிட்டு தென் தமிழகத்தில் இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.
தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளித்து பல்வேறு தொழிற்சாலைகளை கொண்டு வர வேண்டும். அப்போதுதான் ஜாதி, கந்து வட்டி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் சின்னத்துரை, அவரது சகோதரி சந்திரா செல்வி ஆகியோரை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
இது குறித்து அண்ணாமலை தமது சமூகத் தளப் பதிவுகளில் குறிப்பிட்டிருப்பதாவது…
இன்றைய காலை #EnMannEnMakkal பயணம், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் சிறப்பாக நடந்தேறியது.சந்திரயான் 3 ஏவுகணையில் பொருத்தப்படும் செமி கிரையோஜெனிக் எனும் இயந்திர சோதனை, இங்கிருக்கும் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் தான் நடைபெற்றது என்பது நம் அனைவருக்குமே பெருமை. இன்று வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடி, பல போர்களில் வெற்றி கண்ட மாவீரன் ஒண்டி வீரனின் 252 ஆவது நினைவுதினம்.
கர்மவீரர் காமராஜர் படிக்கச் சொன்னார். திமுக 24 மணி நேரமும் குடிக்கச் சொல்கிறது.
1972 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ராமநாதபுர கெசட் திருத்திய புது பதிப்பில் கச்சத் தீவு இல்லை. அந்த பதிப்பிற்கு அணிந்துரை வழங்கியவர் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி. 1974 ஆம் ஆண்டு, காங்கிரஸ் கச்சத் தீவை தாரைவார்த்த போது குறைந்தபட்ச எதிர்ப்பைக் கூடத் தெரிவிக்காமல் இருந்தவர் கருணாநிதி. கச்சத் தீவைக் கொடுத்ததை ஆதரித்தது கம்யூனிஸ்ட் கட்சி. கச்சத் தீவை தாரை வார்த்துவிட்டு, இன்று நீலிக் கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
மோடியின் முகவரி : ராதாபுரம்
ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வசதி பெற்ற திருமதி சித்ரா, முத்ரா திட்டத்தின் மூலம் தொழில் முனைவோராக உருவான திரு நித்தியானந்தம்,
PM கிசான் திட்டத்தில் பயன்பெற்ற திரு அன்னப்பாண்டி, உஜ்வாலா திட்டத்தின் மூலம் இலவச சமையல் எரிவாயு பெற்றுப் பயனடைந்த திருமதி காசிலிங்கம், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் மூலம் வீடு பெற்ற திருமதி செல்வி சியாமளா. இவர்கள்தான் மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் முகவரி.
தமிழக மக்களை ஜாதி ரீதியாகப் பிரித்தது கருணாநிதி என்று குற்றம் சாட்டிய அப்பாவு தான் இப்போது இங்கே நடக்கும் கனிம வளக் கொள்ளைக்கு முக்கிய காரணகர்த்தா.
அடைமிதிப்பான்குளத்தில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட கல்குவாரி வெடி விபத்திற்குப் பிறகும், தொடர்ந்து கல்குவாரிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு வருகின்றன. அனுமதி இல்லாத 32 குவாரிகளுக்கு 300 கோடி அபராதம் வசூலித்ததாகக் கூறும் ஊழல் திமுக அரசு, அதன் விவரங்களை வெளியிட முடியுமா? 30 டன் தாங்கும் கிராம சாலைகளில் 70 டன் எடைக்கு மலைகளை உடைத்து கற்களை ஏற்றிச் செல்கிறார்கள்.
நொடிந்து போன BGR நிறுவனத்தை வைத்து 4,442 கோடி ஒப்பந்தம் நிறைவேற்ற முயற்சித்தார்கள். தமிழகத்தை தங்கள் சொந்த ஆதாயத்துக்காக அடகு வைக்க முயற்சித்தார்கள். இந்த BGR முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், ஊழல் திமுக கூட்டணியை தமிழக மக்கள் மொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சி மீண்டும் தொடர தமிழகமும் துணையிருக்கும் என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளது.