
ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
27ஆம் நாள் – வங்கதேசம் vs பாகிஸ்தான்
கொல்கொத்தா – 31.10.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
வங்கதேச அணியை (45.1 ஓவர்களில் 204, மகமத்துல்லா 56, லிட்டன் தாஸ் 45, ஷாகிப் அல் ஹசன் 43, ஹசன் மிராஸ் 25, ஷஹீன் ஷா அஃப்ரிதி 3/23, முகம்மது வாசிம் 3/31, ரவுஃப் 2/36) பாகிஸ்தான் அணி (32.3 ஓவரில் 205/3, அப்துல்லா ஷஃபீக் 68, ஃபகர் ஜமான் 81, முகம்மது ரிஸ்வான் 26*, ஹசன் மிராஸ் 3/60) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற வங்கதேச அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு பந்தவீச்சு சரியான முறையில் அமைந்தது. இந்த உலகக் கோப்பைப் போட்டியில் இது மிகவும் தாமதமாக நடந்துள்ளது.
ஷாஹீன் புதிய பந்தில் சிறப்பாகப் பந்துவீசினார். முதல் ஓவரிலேயே டான்சிட் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். அவர், ஆடவர் ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் ஆனார். அவரது இரண்டாவது ஓவரில் வங்கதேச வீரர் ஷண்டோவை கேட்ச் மூலம் அவுட்டாக்கினார். இதன் மூலம் வங்கதேச அணி 6/2 என்ற நிலைக்கு வந்தது.
இப்திகரும் சிறப்பாக பந்து வீசினார். ஹரிஸ் தொடக்க ஓவர்களில் பவுண்டரிகளை விட்டுக்கொடுத்தார். இது ஒரு நல்ல சகுனமல்ல. ஆனால் அவர் மீண்டும் பந்துவீச் வந்தபோது சிறப்பாக பந்துவீசினார்.
பவர்பிளேயில் முழுவதுமாக ஆடிய ஒரே வங்கதேச அணி வீரர் லிட்டன்தாஸ் மட்டுமே. அவரும் ஒரு குறுகிய ஆட்டத்திற்குப் பின்னர் அவுட்டானார். மஹ்முதுல்லா அவருக்கு ஜோடியாக ஆடினார். மற்றும் பங்களாதேஷை பாதுகாப்பை நோக்கி வழிநடத்தினார். கடினமான வேலைகளைச் செய்ய தன்னால் இயன்றவரை முயற்சித்த ஷகிப்பை சிறிது நேரம் அவர் போக்கிற்கு ஆட அனுமதித்தார். ஆனால் வங்கதேச அணியின் கடைசி வீரர்கள் ஷார்ட் பந்தில் வீழ்ந்தனர்.
வங்கதேச அணி 45.1 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 204 ரன்கள் எடுத்தது.
அதன் பின்னர் ஆட வந்த பாகிஸ்தான் அணி எளிதாக 32.3 ஓவரில் மூன்று விக்கட்டுக்கு 205 ரன் எடுத்து வெற்றிபெற்றது. ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் நான்காவது முறையாக பாகிஸ்தான் 100 பந்துகளுக்கு மேல் மீதமிருக்கையில் வெற்றி பெற்றிருக்கிறது.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் அந்த அணி இன்று சிறப்பாகச் செயல்பட்டது. இன்று அணிக்குத் திரும்பிய ஃபகார் ஜமான் 74 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 81 ரன்கள் அடித்து அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தார். டாஸ்கின் பந்தில் அவர் அடித்த அந்த பயங்கரமான சிக்ஸர் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று. ஷபீக் தகுந்த ஆதரவை வழங்கினார்.
தொடக்க ஆட்டக்காரர்கள் 128 ரன்களை, ஒரு பந்துக்கு ஒரு ரன் வீதத்தில் எடுத்தனர். விக்கெட்டு எடுத்த ஒரே பந்து வீச்சாளராக மெஹிடி இருந்தார். ஃபகரும் பாபரும் பெரிய ஷாட்கள் அடிக்க முயன்று அவுட்பீல்டில் கேட்ச் ஆனார்கள். ஆனால் ரிஸ்வான், இப்திகார் இருவரும் இறுதிவரை ஆடி 32.3 ஓவரில் அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தனர்.
இந்த தோல்வியால் வங்கதேசம் உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றப்பட்டது. ஆட்டநாயகனாக ஃபகர் ஜமான் அறிவிக்கப்பட்டார்.
இந்த வெற்றியுடன் பாகிஸ்தான் அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளது. நாளை நியூசிலாந்து அணி தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்த்து புனேயில் விளையாடுகிறது.