
ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
28ஆம் நாள் – தென் ஆப்பிரிக்கா vs நியூசிலாந்து
புனே – 01.11.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
தென் ஆப்பிரிக்க அணி (357/4, வான் டெர் டுஸ்ஸென் 133, டி காக் 114, டேவிட் மில்லர் 53, டிம் சௌதீ 2/77) நியூசிலாந்து அணியை (35.3 ஓவரில் 167, கிளன் பிலிப்ஸ் 60, வில் யங் 33, டேரில் மிட்சல் 24, கேசவ் மஹராஜ் 4/46, மார்கோ ஜேன்சன் 3/31) 190 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
தென் ஆப்பிரிக்க அணியின் வான் டெர் டுஸ்ஸென் (133 ரன்), டி காக் (114 ரன்) இருவரும் அடித்த சதங்கள் மற்றும் டேவிட் மில்லர் அடித்த 53 ரன் ஆகியவற்றால் அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் நாலு விக்கட் இழப்பிற்கு 357 ரன் எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணி ஆடத் தொடங்கிய பின்னர் நேரம் செல்லச் செல்ல தங்களது ரன் அடிக்கும் வேகத்தை அதிகரித்தனர்.
முதல் 10 ஓவர்களில் 43 ரன்; அடுத்த 11 முதல் 20 ஓவர்களில் 51 ரன்; 21 முதல் 30 ஓவர்களில் 61 ரன்; 31 முதல் 40 ஓவர்களில் 83 ரன்; 41 முதல் 50 ஓவர்களில் 119 ரன் என அந்த அணி ரன் சேர்த்தது. இந்த உலகக் கோப்பைப் போட்டியில் க்விண்டன் டி காக் தனது நாலாவது சதத்தை அடிக்கிறார்.
ஒரே உலகக் கோப்பைப் போட்டியில் அதிக சதம் அடித்த பெருமை ரோஹித் ஷர்மாவுக்கு (2019 பொட்டியில் 5 சதங்கள்) உரியது. அதற்கு அடுத்த இடத்தில் 4 சதங்களோடு இலங்கையின் சங்ககரா, டி காக் இருவரும் உள்ளனர். ஒரு உலகக் கோப்பைப் போட்டியில் அதிக சிக்சர் (ஏழு ஆட்டங்களில் 78 சிக்சர்) அடித்த அணியாக தென் ஆப்பிரிக்க அணி விளங்குகிறது.
பதிலுக்கு நியூசிலாந்து அணி ஆடவந்தபோது அவர்கள் முதலில் இருந்தே வெற்றிக்கான ஆட்டத்தை ஆடவில்லை. வில் யங் (33 ரன்), டேரில் மிட்சல் (24 ரன்), கிளன் பிலிப்ஸ் (60 ரன்) ஆகிய மூவரைத் தவிர மற்ற எவரும் இரட்டை இலக்கத்தைத் தொடவே இல்லை. தென் ஆப்பிரிக்கா வென்றது ஒரு ஆச்சரியமான விஷயமே இல்லை.
நியூசிலாந்து அணியின் தலைவர் லேதம் எதற்காக முதலில் பந்துவீசத் தீர்மானித்தார் என்பதே ஒரு பெரிய கேள்வி. இதில் காயம் காரணமாக வீரர்கள் முழு உடல் தகுதியுடன் இல்லை. நீஷம், ஹென்றி இருவரும் காயத்துடம் பேட் செய்ய வந்தனர். இறுதியில் 35.3 ஓவரில் நியூசிலாந்து 167 ரன் எடுத்து 190 ரன் கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஆட்டநாயகனாக வான் டெர் டுஸ்ஸென் அறிவிக்கப்பட்டார். நியூசிலாந்து அணியின் தோல்வி மற்ற அணிகளின் அரையிறுதி வாய்ப்பினை பிரகாசமாக்கியிருக்கிறது.
தென் ஆப்பிரிக்கா 12 புள்ளிகள் மற்று அதிக ரன்ரேட்டுடன் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது. நாளை மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய, இலங்கை அணிகள் விளையாடுகின்றன.