- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இருபத்தியெட்டாம் நாள் ஐபிஎல் 2024 – 18.04.2024
பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
மும்பை அணி (192/7, சூர்யகுமார் யாதவ் 78, ரோஹித் ஷர்மா 36, திலக் வர்மா 34, ஹர்ஷல் படேல் 3/31, சாம் கரன் 2/41) பஞ்சாப் அணியை (19.1 ஓவரில் 183, அஷுத்தோஷ் ஷர்மா 61, ஷஷாங்க் சிங் 41, ஹர்பிரீத் ப்ரார் 21, உதிரிகள் 21, கோயட்சி 3/32, பும்ரா 3/21) 9 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இன்று முல்லன்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. மும்பை அணியில் இன்று தொடக்க வீரர் இஷான் கிஷன் (8 ரன்) மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா (25 பந்துகளில் 36 ரன், 2 ஃபோர், 3 சிக்சர்) 11.4ஆவது ஓவரில் அவுட்டானார். அவருக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் (53 பந்துகளில் 78 ரன், 7 ஃபோர், 3 சிக்சர்), திலக் வர்மா (34 ரன்), ஹார்திக் பாண்ட்யா (10 ரன்), டிம் டேவிட் (7 பந்துகளில் 14 ரன்), ரொமாரியோ ஷெப்பர்ட் (1 ரன்), என குறைந்த அளவில் ரன்களே எடுத்தனர்.
பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர்களான ஹர்ஷல் படேல் மற்றும் சாம் கரண் இருவரும் சிறப்பாக பந்துவீசினர். 20 ஓவர் முடிவில் மும்பை அணி ஏழு விக்கட் இழப்பிற்கு 192 ரன் எடுத்தது.
193 ரன் என்ற அடையக்கூடிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் இன்றும் ஆடவில்லை. தொடக்க வீரர்களாக சாம் கரணும் பிரப்சிம்ரன் சிங்கும் இறங்கினர். பிரப்சிம்ரன் சிங் (பூஜ்யம் ரன்) முதலாவது ஓவர் மூன்றாவது பந்திம் ஆட்டமிழந்தார். சாம் கரண் (6 ரன்) இரண்டாவது ஓவர் ஆறாவது பந்தில் அவுட்டானார்.
சாம் கரணுக்கு முன்னர 1.4ஆவது ஓவரில் ரில்லீ ரோஸ்கோ (1 ரன்) ஆட்டமிழந்தார். பவர்பிளே ஓவர்கள் முடிவதற்குள் லியம் லிவிங்க்ஸ்டோன் (1 ரன்) 2.1 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். இப்படி முக்கியமான பேட்டர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் பஞ்சாப் அணி தோல்வியைத் தழுவும் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் ஷஷாங்க் சிங் (41 ரன்) மற்றும் அஷுத்தோஷ் ஷர்மா (61 ரன்) இருவரும் சிறப்பாக ஆடி பஞ்சாப் அணி வெற்றிபெறக்கூடிய ஒரு சூழலை ஏற்படுத்தினர்.
15 ஓவர்கள் முடிவில் அந்த அணியின் ஸ்கோர் 147/7 என இருந்தது. 16ஆவது ஓவரை மத்வால் வீசினார். அந்த ஓவரில் அஷுத்தோஷ் ஷர்மா மூன்று சிக்சர்கள் அடித்து வெற்றி இலக்கை 18 பந்துகளில் 25 ரன் என ஆக்கினார்.
17ஆவது ஓவரை பும்ரா வீசினார். அந்த ஓவரில் மூன்று ரன் கள் மட்டுமே கொடுக்கப்பட்டது. அதற்கடுத்த ஓவரை கோயட்சி வீசினார். அதில் அஷுத்தோஷ் ஷர்மா ஆட்டமிழக்க, ஆட்டம் மீண்டும் மும்பை கைக்கு வந்தது. அந்த ஓவரில் 2 ரன் கள் மட்டுமே கொடுக்கப்பட்டது. இருப்பினும் 12 பந்துகளில் 23 ரன் எடுக்க வேண்டும் என்ற நிலை. 19ஆவது ஓவரை பாண்ட்யா வீசினார். அதில் அவர் 11 ரன்கள் கொடுத்து ஒரு விக்கட்டும் எடுத்தார்., இதனால் கடைசி 20ஆவது ஓவரில் 6 பந்துகளில் 12 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை.
மத்வால் வீசிய அந்த ஓவரில் ரபாடா இரண்டாவது பந்தில் ரன் அவுட் ஆனார். இதனால் மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக பந்துவீசினார், எனவே அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
நாளை டெல்லியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.
18.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல்
அணி | ஆ | வெ | தோ | புள்ளி | நெட் ரன் ரேட் |
ராஜஸ்தான் | 7 | 6 | 1 | 12 | 0.667 |
கொல்கொத்தா | 6 | 4 | 2 | 8 | 1.399 |
சென்னை | 6 | 4 | 2 | 8 | 0.726 |
ஹைதராபாத் | 6 | 4 | 2 | 8 | 0.502 |
லக்னோ | 6 | 3 | 3 | 6 | 0.038 |
டெல்லி | 7 | 3 | 4 | 6 | -0.074 |
மும்பை | 7 | 3 | 4 | 6 | -0.133 |
குஜராத் | 7 | 3 | 4 | 6 | -1.303 |
பஞ்சாப் | 7 | 2 | 5 | 4 | -0.251 |
பெங்களூரு | 7 | 1 | 6 | 2 | -1.185 |