- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
முப்பதாம் நாள்
ஐபிஎல் 2024 – 20.04.2024
டெல்லி கேபிடல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
ஹைதராபாத் அணி (266/7, ட்ராவிஸ் ஹெட் 89, ஷபாஸ் அகமது 59, அபிஷேக் ஷர்மா 46, நிதீஷ் குமார் ரெட்டி 37, குல்தீப் யாதவ் 4/55) டெல்லி அணியை (19.1 ஓவரில் 199, ஜேக் ஃப்ரேசர் மகுருக் 65, அபிஷேக் போரல் 42, ரிஷப் பந்த் 44, ப்ருத்வி ஷா 16, நடராஜன் 4/19, மார்கண்டே 2/26, நிதீஷ் குமார் ரெட்டி 2/17) 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இன்று டெல்லியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் ட்ராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவரும் டெல்லி அணியின் பந்துவீச்சாளர்களை நாலாபக்கமும் சிதறடித்தனர். முதல் ஓவரில் 19 ரன், இரண்டாவது ஓவரில் 21 ரன், மூன்றாவது ஓவரில் 22 ரன், நாலாவது ஓவரில் 21 ரன், ஐந்தாவது ஓவரில் 20 ரன், ஆறாவது ஓவரில் 22 ரன் என பவர்பிளே ஓவர்களில் விக்கட் இழப்பின்றி 125 ரன் அடித்தனர்.
இது இதுவரையில் செய்யப்படாத சாதனையாகும். இதற்கு முன்னர் 2017ஆம் ஆண்டு பெங்களூரு கொல்கொத்தா ஆடிய ஆட்டத்தில் கொல்கொத்தா அணி விக்கட் இழப்பின்றி 105 ரன் எடுத்ததுதான் சாதனையாக இருந்தது.
ட்ராவிஸ் ஹெட் இன்று 16 பந்துகளில் 50 ரன் அடித்தார். 4.6 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 100 ரன் அடித்தது. இது டி20 ஆட்டங்களின் சாதனையாகும். இதற்கு முன்னர் சென்ற ஆண்டு தெ ஆப்பிரிக்க அணி 5.3 ஓவரில் 100 ரன் அடித்தது சாதனையாக இருந்தது. பவர்பிளே ஓவர்களில் 10 ஃபோர் மற்றும் 10 சிக்சர்கள் அடிக்கப்பட்டன.
பத்தாவது ஓவர் முடிவில் அணியின் ஸ்கோர் 158/4 ஆக இருந்தது. ஆனால் அதற்குப் பின்னர் டெல்லி அணி பந்துவீச்சாளர்கள் ரன்ரேட்டைக் குறைக்கும் வண்ணம் பந்துவீசினர். ட்ராவிஸ் ஹெட் (32 பந்துகளில் 89 ரன், 11 ஃபோர், 6 சிக்சர்) அபிஷேக் ஷர்மா (12 பந்துகளில் 46 ரன், 2 ஃபோர், 6 சிக்சர்), மர்க்ரம் (1 ரன்), கிளாசன் (15 ரன்), நிதீஷ் குமார் ரெட்டி (27 பந்துகளில் 37 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்), ஷபாஸ் அகமது (29 பந்துகளில் 59 ரன், 2 ஃபோர், 5 சிக்சர்), அப்துல் சமது (8 பந்துகளில் 13 ரன்) என அனைத்து பேட்டர்களும் சிறப்பாக ஆடியதால் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 26 ரன் எடுத்தது.
267 ரன் என்ற அடையக்கூடிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த டெல்லி அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான ப்ருத்வி ஷா (5 பந்துகளில் 16 ரன்) முதல் நாலு பந்துகளையும் ஃபோர் அடித்தார்; ஆனால் ஐந்தாவது பந்தில் ஆட்டமிழந்தார்.
இரண்டாவது ஓவரில் மற்றொரு தொடக்க வீரரான டேவிட் வார்னரும் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் அபிஷேக் போரலும் (22 பந்துகளில் 42 ரன், 7 ஃபோர், ஒரு சிக்சர்) ஜேக் ஃப்ரேசர் மகுர்க் (18 பந்துகளில் 65 ரன், 5 ஃபோர், 7 சிக்சர்) இருவரும் இணைந்து அதிரடி ஆட்டம் ஆடினர். அதற்குப் பிறகு ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் (10 ரன்), லலித் யாதவ் (7 ரன்), அக்சர்படேல் (6 ரன்), அன்ரிக் நோர்ஜே (பூஜ்யம்), குல்தீப் யாதவ் (பூஜ்யம்) என பிற பேட்டர்கள் சரிவர ஆடாததால் ரிஷப் பந்த் (35 பந்துகளில் 44 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்) 19.1 ஓவர் வரை ஆடியும் டெல்லி அணி வெற்றி பெற முடியவில்லை. 19.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து அந்த அணி 199 ரன் மட்டுமே எடுத்தது.
ஹைதராபாத் அணியின் ட்ராவிஸ் ஹெட் தனதுசிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.
நாளை இரண்டு ஆட்டங்கள் நடைபெறும். முதல் ஆட்டம் கொல்கொத்தாவில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே பகலிரவு ஆட்டமாக நடைபெறும்.
இரண்டாவது ஆட்டம் முல்லன்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் இடையே நடைபெறும்.
20.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல்
அணி | ஆ | வெ | தோ | புள்ளி | நெட் ரன் ரேட் |
ராஜஸ்தான் | 7 | 6 | 1 | 12 | 0.667 |
ஹைதராபாத் | 7 | 5 | 2 | 10 | 0.914 |
கொல்கொத்தா | 6 | 4 | 2 | 8 | 1.399 |
சென்னை | 7 | 4 | 3 | 8 | 0.529 |
லக்னோ | 7 | 4 | 3 | 8 | 0.123 |
மும்பை | 7 | 3 | 4 | 6 | -0.133 |
டெல்லி | 8 | 3 | 5 | 6 | -0.477 |
குஜராத் | 7 | 3 | 4 | 6 | -1.303 |
பஞ்சாப் | 7 | 2 | 5 | 4 | -0.251 |
பெங்களூரு | 7 | 1 | 6 | 2 | -1.185 |