திரிபுராவில் மேலும் ஒரு லெனின் சிலை உடைக்கப் பட்டுள்ளது. பீடத்தில் இருந்து சரிக்கப் பட்டு கீழே கிடந்தது இந்தச் சிலை. இது குறித்து செய்தி நிறுவங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக, திரிபுராவில் கால் நூற்றாண்டு கம்யூனிஸ அடக்குமுறை ஆட்சியில் இருந்து திரிபுரா மக்களை விடுவித்துள்ளதாகக் கூறி பாஜக.,வினர் வெற்றிக் கொண்டாட்டங்களை நடத்தினர். மொத்தமுள்ள 60 இடங்களில் பாஜக., கூட்டணி 43 இடங்களில் வென்றது. பாஜக., மட்டுமே 35ல் வென்று தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. இதனால் பாஜக.,வினர் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
திரிபுராவில் கம்யூனிஸ்ட் கட்சியினரின் வன்முறை வெறியாட்டங்களுக்கு பாஜக., தொண்டர்கள் சிலர் தங்கள் இன்னுயிரைப் பறி கொடுத்துள்ளனர். 18 வருடங்களுக்கு முன்னர் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மலைவாழ் மக்களுக்கான சமூக சேவைப் பிரிவான வனவாசி கல்யாண் ஆச்ரமத்தின் பொறுப்பாளர்கள் 3 பேர் அங்கே கடத்திக் கொல்லப் பட்டார்கள். அப்போது அவர்களை மீட்க மாநில அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல், வன்முறையாளர்களுக்கு ஆதரவு அளித்தது. அன்றில் இருந்து அங்கே பாஜக.,வினர் பெரும் நெருக்கடிகளுக்கும் மரண பயத்துக்கும் மத்தியில் கட்சிப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதுவரை ஒரு கவுன்சிலர் பதவி கூடப் பெற்றிராத பாஜக.,வுக்கு 35 எம்.எல்.ஏ., பதவியை அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள் மக்கள் என்றால், அவர்களுக்கு கம்யூனிஸ்ட்களின் மீதான வெறுப்புணர்வு எவ்வளவுக்கு வளர்ந்திருக்கிறது என்பதும், காங்கிரஸைப் புறக்கணித்து கம்யூனிஸ்ட்களுக்கு மாற்று பாஜக.,தான் என்று தேர்வு செய்ததுள்ளதையும் சொல்லி பாஜக..,வினர் தங்கள் மீது மக்கள் வைத்த நம்பிக்கையைக் கொண்டாடி வருகிறார்கள்.
இதனால், கடந்த கால் நூற்றாண்டாக திரிபுராவில் கோலோச்சிய இடதுசாரிகளின் முகமாக இருக்கும் வெளிநாட்டுக்கு வால்பிடிக்கும் கொள்கைகளை தூக்கி எறிய முயற்சி செய்து வருகிறார்கள். திரிபுரா மாநிலத்தை தேசிய நீரோட்டத்தில் இணைக்க எவ்வளவு பாடு பட்டுள்ளோம் என்று பிரதமர் மோடி கூறியதை நினைவுகூரும் பாஜக.,வினர், திரிபுராவில் தேசியம் நிலைத்து, நாட்டுப் பற்று வளர வேண்டுமானால், பிரிவினை சக்திகளை வேரறுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். இவை எல்லாம் பாஜக., ஆதரவாளர்களின் சமூக வலைத்தளப் பக்கங்களில் பரவலாக விவாதிக்கப் படுகின்றன.
இதன் ஒரு பகுதியாகத்தான் லெனின் சிலை உடைப்பு என்று கருதப் படுகிறது. ஏற்கெனவே 2014ல் வைக்கப்பட்ட லெனின் சிலை ஒன்றை உடைத்து அது சமூக மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் பெரும் சலசலப்பையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்போது மீண்டும் ஒரு சிலை உடைக்கப் பட்டுள்ளதாக ஏ.என்.ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.