தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மகளிர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையினான மகளிர் டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 28 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கியது.
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 603 ரன் சேர்த்து டிக்ளேர் செய்தது. அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷஃபாலி வர்மா இரட்டை சதம் விளாசி அசத்தினார். அவரைத் தொடர்ந்து, அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 149 ரன் எடுத்தார்.
இதன் பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி 266 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மரிஷேன் கப் 74 ரன் எடுத்தார். இந்தியா தரப்பில் ஸ்நே ராணா 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
தென் ஆப்பிரிக்க அணி ஃபாலோ ஆன் ஆனதைத் தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. அதில் தென்னாப்பிரிக்க அணி 373 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் வோல்வர்ட் மற்றும் ஷுன் லூஸ் இருவரும் சதம் விளாசி அசத்தினார். வோல்வர்ட் 122 ரன், ஷுன் லூஸ் 109 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். இதில் ஸ்நே ராணா 2 விக்கெட் எடுத்தார்.
தென்னாப்பிரிக்க அணி 36 ரன் முன்னிலை பெற்றதால், இந்திய அணிக்கு 37 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 9.2 ஓவர்களில் இலக்கை எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷஃபாலி வர்மா 24 ரன்களுடனும், சுபா சதீஷ் 13 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
போட்டியில் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து பத்து விக்கெட் எடுத்து, தனது அபார பந்து வீச்சால் தென் ஆப்பிரிக்க அணியை சுருட்டிய ஸ்நே ராணாவுக்கு ஆட்ட நாயகர் விருது வழங்கப்பட்டது.