ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு கொட்டும் மழையில் திறக்கப்பட்டது.
நாளை கேரளாவில் ஆடி கற்கடக மாத பிறப்பு என்பதால் நாளை முதல் ஐயப்பனுக்கு பூஜைகள் நடைபெறும்.
தமிழகத்தில் ஆடி மாதம் வரும் புதன்கிழமை பிறக்கிறது. கேரளாவில் ஒரு நாள் முன்கூட்டியே நாளை ஆடி மாதப் பிறப்பு துவங்குவதால் நாளை முதல் ஐந்து நாட்களுக்கு சபரிமலை சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் உதயஸ்தமன பூஜை, படி பூஜை உட்பட பல்வேறு பூஜை வழிபாடுகள் தொடங்கி நடைபெறும்.
கொட்டும் மழையால் தற்போது பம்பை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது பக்தர்கள் மழையில் நடந்து சபரிமலைக்கு பம்பையில் இருந்து நடை பயணம் செல்கின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடைபெறும் மாதாந்திர பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
இந்நிலையில் ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி கோவில் நடையை திறந்தார். இன்று வேறு பூஜைகள் எதுவும் நடைபெறாது.
நாளை(16-ந்தேதி) முதல் அனைத்து பூஜைகளும் வழக்கம்போல் நடைபெறும். இதனால் பக்தர்கள் நாளை முதல் வருகிற 20-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த முறையும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு முறையே பின்பற்றப்படுகிறது.
இதனால் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படு கிறார்கள். கோவில் நடை திறந்திருக்கும் 5 நாட்களும் தினமும் அதிகாலை 5.20 மணி முதல் காலை 10 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மாதாந்திர பூஜை முடிந்து 20-ந்தேதி இரவு கோவில் நடை சாத்தப்படுகிறது.
கேரளாவில் கடந்த இரு நாட்களாக மீண்டும் தென்மேற்கு பருவமழை அதிக அளவில் பெய்து வருகிறது. இதனால் சபரிமலை வனப்பகுதி பெரியார் புலிகள் வனச் சரணாலய பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் பம்பை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது பக்தர்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.