விடுதலைப் புலிகளை இறுதிப் போரில் அழிக்க, சிங்கள ராணுவத்துக்கு காட்டிக் கொடுத்து உதவியவர்கள் முஸ்லிம்களே என்று இலங்கை ரியல் அட்மிரல் ரவீந்திர விஜய குனவர்த்தன ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
முஸ்லிம் மக்கள் இல்லாவிட்டால் இந்த நாட்டில் யுத்தத்தை முடித்திருக்க முடியாது. முஸ்லிம் மக்கள் நமக்கு வழங்கிய உளவுத் துறை சார்ந்த மிகப்பெரிய ஒத்துழைப்பின் காரணமாகவே நம்மால் யுத்தத்தில் வெற்றிபெற முடிந்தது. எனவே அவர்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலை குறித்து நான் கவலை அடைகின்றேன்… என்று கூட்டுப் படைகளின் முதன்மை ரியல் அட்மிரல் ரவிந்தீர விஜய குணவர்த்தன கூறியுள்ளார்.
கண்டி பகுதியில் அவசர நிலைப் பிரகடனம் அறிவிக்கப் பட்டுள்ளதால், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர ராணுவத்தினர் தங்களது குறைந்த பட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி, நடவடிக்கையை மேற்கொள்ள முயற்சி எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசு சார்பில் எடுக்கப் பட்ட அமைதி நடவடிக்கைகள் குறித்துக் கூறுவதற்காக, கொழும்பில் சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார் ரவீந்திர விஜய குணவர்த்தன. அப்போது அவர் கூறுகையில்,
இது இனவாத வன்முறை ஆகும். யுத்தமில்லை. எனவே எங்களின் அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும். தற்போதுள்ள அவசரகால நிலையின் கீழ் இந்த விவகாரத்தில் தலையிட எங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, எங்களுக்குள்ள குறைந்தபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொண்டு நிலைமையை கட்டுக்குள் வைத்திருப்போம்.
தற்போது ராணுவத்தினர் அனைத்துப் பகுதிகளிலும் களமிறக்கப் பட்டுள்ளனர். எனவே நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் ஒரு விஷயத்தைச் சொல்லியாக வேண்டும்.
இன்று நாம் உயிரோடு இருப்பதற்குக் காரணம், யுத்தத்தின் போது முஸ்லிம் மக்கள் உயிர்த் தியாகத்துடன் நமக்கு வழங்கிய ஒத்துழைப்புதான். அவர்களின் ஒத்துழைப்பினால்தான் யுத்தத்தை முடித்தோம். முஸ்லிம் மக்களின் மொழி அறிவு நமக்கு நல்ல ஒத்துழைப்பாக இருந்தது. இன்று வீதிகளில் குண்டு வெடிக்காமல் இருப்பதற்கு முஸ்லிம் மக்களே காரணம். எனவே அவர்களின் நிலை குறித்த விவகாரத்தில் நான் கவலை அடைகிறேன்… என்று கூறியுள்ளார் இலங்கை கூட்டுப் படைகளின் தளபதி ரவீந்திர விஜய குணவர்த்தன.