புதுதில்லி:
திரிபுராவின் நீண்டகால முதல்வராக இருந்த மாணிக் சர்க்காரை வாயாரப் புகழ்ந்துள்ளார் பாஜக.,வின் ராம் மாதவ். சென்ற மாதம் வரை, அவர் மாணிக் சர்க்கார் குறித்து இத்தகைய கருத்தைக் கொண்டிருக்கவில்லை. ஆனால், மாணிக் சர்க்கார் தேர்தலில் தோற்று, அதன் பின் அவர் நடந்து கொண்ட விதம் குறித்து அறிந்து தான் அவர் மீதான தன் கருத்தோட்டத்தை மாற்றிக் கொண்டுள்ளாராம்.
திரிபுராவின் புதிய முதல்வராக பாஜக.,வின் பிப்லவ் குமார் தேவ் பொறுப்பேற்கிறார். முதல்வராகப் பொறுப்பேற்கும் விழாவுக்கு தனிப்பட்ட முறையில் அழைப்பதற்காக, அழைப்பிதழை எடுத்துக் கொண்டு, மாணிக் சர்க்கார் இருப்பிடத்துக்கு சென்றுள்ளார் ராம் மாதவ். கருத்தோட்டங்களின் வேறுபாடுகளைக் கடந்து, முந்தைய முதல்வராக இருந்த மாணிக் சர்க்காரின் ஆசியுடன் அடுத்து தொடர இருக்கும் பிப்லவ் குமார் தேவ் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார் ராம் மாதவ்.
மாணிக் சர்க்காரின் எளிமையையும், நாட்டிலேயே மிகவும் ஏழ்மையான முதல்வராக அவர் வாழ்ந்தது குறித்தும் அவர் மீதான தன் நல்லெண்ணத்தை வெளிப்படுத்திய ராம் மாதவ், இதுகுறித்து தனது டிவிட்டர் பதிவிலும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, தேர்தலில் தோற்றவுடன், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த கையுடன், முதல்வர் இல்லத்தை காலி செய்துவிட்டு, எந்த வித நெருக்குதலும் இல்லாமல் வெளியேறிய அவரது பெருந்தன்மையை வியந்து பாராட்டியுள்ளார்.
“அவரது இயல்புக்கு ஏற்ப, முதல்வர் பதவியில் இருந்து விலகியதும், உடனே முதல்வர் இல்லத்தைக் காலி செய்துவிட்டு, கட்சியின் அலுவலகத்துக்கு குடி பெயர்ந்தார். மற்ற தலைவர்களிடம் இது போன்ற செயல்பாடுகளை நாம் காண முடியாது” என்று பதிவிட்டார் ராம் மாதவ்.
முதல்வராகப் பதவி ஏற்கவுள்ள பிப்லப் குமார் தேவும், ராம் மாதவும் நேற்று சிபிஎம் கட்சி அலுவலகத்துக்குச் சென்றனர். அங்கே மாணிக் சர்க்காரைக் கண்டு, அவரிடம் பதவியேற்பு விழாவுக்கான அழைப்பிதழைக் கொடுத்து, தனிப்பட்ட முறையிலும் மாணிக் சர்க்காருக்கு அழைப்பு விடுப்பதாகக் கூறினர்.
இது குறித்து பிப்லப் குமார் தேபும் தனது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியைத் தெரிவித்திருந்தார்…
Invited Ex CM Sh. Manik Sarkar ji & CPM Tripura Secretary Bijan Dhar ji at CPM State Office in presence of @rammadhavbjp ji to swearing ceremony tomorrow. pic.twitter.com/we4CRXx4Ho
— Biplab Kumar Deb (@BjpBiplab) March 8, 2018