
ஐ.பி.எல் 2025 – இன்று இரண்டு ஆட்டங்கள் – 23.03.2025
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
முதல் ஆட்டம் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி (286/6, இஷான் கிஷன் ஆட்டமிழக்காமல் 106, ட்ராவிஸ் ஹெட் 67, கிளாசன் 34, நிதீஷ்குமார் ரெட்டி 30, அபிஷேக் ஷர்மா 24, துஷார் தேஷ்பாண்டே 3/44, தீக்ஷனா 2/52, சந்தீப் ஷர்மா 1/51) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை (242/6, துருவ் ஜுரல் 70, சஞ்சு சாம்சன் 66, ஷிம்ரோன் ஹெட்மயர் 42, ஷுபம் துபே 34, சிமர்ஜீத் சிங் 2/46, ஹர்ஷல் படேல் 2/34, ஷமி 1/33, ஆடம் சாம்பா 1/48) 44 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவா தலையா வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் சன்ரைசர்ஸ் அனி முதலில் மட்டையாட வந்தது. சன்ரைசர்ஸ் அணியின் முக்கியமான மட்டையாளர்கள் அனைவரும் மிகவும் சிறப்பாக ஆடினர். அபிஷேக் ஷர்மா (11 பந்துகளில் 24 ரன்), ட்ராவிஸ் ஹெட் (31 பந்துகளில் 67 ரன், 9 ஃபோர், 3 சிக்சர்), இஷான் கிஷன் (ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 106 ரன், 11 ஃபோர், 6 சிக்சர்) நிதீஷ் குமார் ரெட்டி (15 பந்துகளில் 30 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்), ஹென்றி கிளாசன் (14 பந்துகளில் 34 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்) ஆகியோர் ஸ்ட்ரைக் ரேட் 200க்கும் அதிகமாக வைத்து ஆடினர். 20 ஓவர் முடிவில் அந்த அணி 6 விக்கட் இழப்பிற்கு 286 ரன் எடுத்திருந்தது. ஓவருக்கு 14.3 என்ற ரன் ரேட்.
இந்தக் கடினமான இலக்கை அடைய, இரண்டாவதாக ஆட வந்த ராஜஸ்தான் அணி தொடக்கத்தில் யசஷ்வீ ஜெய்ஸ்வால் (1 ரன்), ரியான் பராக் (4 ரன்), நிதீஷ் ராணா (11 ரன்) ஆகியோரை ஐந்தாவது ஓவருக்குள் இழந்தது. அதன் பின்னர் சஞ்சு சாம்சன் (37 பந்துகளில் 66 ரன், 7 ஃபோர், 4 சிக்சர்) மற்றும் துருவ் ஜுரல் (35 பந்துகளில் 70 ரன், 5 ஃபோர், 6 சிக்சர்) சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை ஒரு நல்ல நிலைமக்குக் கொண்டு வந்தனர். ஆனாலும் எடுக்கவேண்டிய ரன்ரேட் மிக, மிக அதிகமாக இருந்தது. அச்சமயத்தில் 14ஆவது ஓவரில் சஞ்சு மற்றும் 15ஆவது ஓவரில் ஜுரல் இருவரும் ஆட்டமிழந்தனர். அவர்களுக்குப் பின்னர் ஆட வந்த ஷிம்ரோன் ஹெட்மயர் (23 பந்துகளில் 42 ரன், 1 ஃபோர், 4 சிக்சர்) ஷுபம் துபே (11 பந்துகளில் 34 ரன், 1 ஃபொர், 4 சிக்சர்) ஆகியோர் சிறப்பாக ஆடியபோதும் 20 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 242 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. அதனால் ராஜஸ்தான் அணி 44 ரன் கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
சன்ரைசர்ஸ் அனியின் இஷான் கிஷன் ஆட்ட நாயனாக அறிவிக்கப்பட்டார்.
இரண்டாவது ஆட்டம் : மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்
மும்பை அணியை (155/9, திலக் வர்மா 31, சூர்யகுமார் யாதவ் 29, தீபக் சாஹார் 28, நூர் அகமது 4/18, கலீல் அகமது 3/29, எல்லீஸ், அஷ்வின் தலா ஒரு விக்கட்) சென்னை அணி (19.1 ஓவர்களில் 158/6, ரச்சின் ரவீந்திரா ஆட்டமிழக்காமல் 65, ருதுராஜ் கெய்க்வாட் 53, விக்னேஷ் புதூர் 3/32, தீபக் சாஹார் மற்றும் வில் ஜேக்ஸ் தலா ஒரு விக்கட்) நான்கு விக்கட் வித்தியாசத்தில் வென்றது.
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசத்தீர்மானித்தது. மும்பை அணியின் தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா ரன் எதுவும் எடுக்காமல் முதல் ஓவர் நாலாவது பந்தில் ஆட்டமிழந்தார். ஐந்தாவது ஓவருக்குள் ரியன் ரிக்கில்டன் (13 ரன்), வில் ஜேக்ஸ் (11 ரன்) இருவரும் ஆட்டமிழந்தனர். சூர்யகுமார் யாதவ் (29 ரன்), திலக் வர்மா (31 ரன்) இருவரும் சென்னை அணியின் சுழல்பந்துவீச்சாளர்களை சமாளித்துக் கொண்டிருந்தபோது நூர் அகமது பந்தில் சூர்யகுமார் ஆட்டமிழந்தார். தோனி ஓர் அற்புதமான ஸ்டம்பிங்கில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த மட்டையாளரிகளில் தீபக் சாஹர் தவிர பிறரால் அதிரடியாக ரன் சேர்க்க முடியவில்லை. சென்னை அணியில் நூர் அகமது நாலு விக்கட்டுகளையும் கலீல் அகமது 3 விக்கட்டுகளையும் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் அந்த அணி 9 விக்கட் இழப்பிற்கு 155 ரன் எடுத்திருந்தது.
156 என்ற இலக்கை அடைய சென்னை அணி கொஞ்சம் சிரமப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ரச்சின் ரவீந்திரா (65 ரன்) மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் (53 ரன்) ஆகியோரைத்தவிர ஏனையோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆயினும் மும்பை பந்துவீச்சாளர்களால் ரன்னையும் கட்டுப்படுத்த முடியவில்லை; விக்கட்டுகளையும் எடுக்க முடியவில்லை. இதனால் சென்னை அணி 19.1 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 158 ரன் எடுத்து 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணியை வென்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த நூர் அகமது ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.