
டெல்லி, மும்பை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு தென்காசியில் இருந்து புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட வேண்டும் என்று மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம், தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாசாமி கோரிக்கை மனு அளித்தார்.
இது குறித்து அவர் குறிப்பிட்டபோது, இன்று புதுடெல்லியில் மாண்புமிகு இரயில்வே அமைச்சர் திரு.அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை சந்தித்து, தென்காசி மற்றும் தென்தமிழக தொழில், சுற்றுலா வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கத் தேவையான நான்கு முக்கிய ரயில் கோரிக்கைகளை அளித்தேன். அவற்றை கனிவோடு கவனிப்பதாக உறுதியளித்தார்… என்றார்.
அவர் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது…
தென்னிந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப மையமான தென்காசிக்கு மேம்பட்ட ரெயில் சேவைகள் வழங்குவதற்கான அவசர தேவையை தாங்கள் கருணையுடன் கவனிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பண்டையகால பாண்டிய அரசின் தலைநகராக விளங்கிய தென்காசி மற்றும் செங்கோட்டை ஆகிய வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்கள், சங்க இலக்கியப் பாரம்பரியமும், பிரசித்திபெற்ற காசி விஸ்வநாதர் கோயில் போன்ற இந்து புனிதத் தலங்களும் உள்ள பகுதிகளாக உள்ளன.
தென்காசி, சிவகாசி, ராஜபாளையம், செங்கோட்டை போன்ற பகுதிகள் தொழில், தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் ஆன்மிகத்தில் வேகமான வளர்ச்சியைக் கண்டு வருகின்றன. இருப்பினும், முக்கிய நகரங்களுக்கு நேரடி ரயில் சேவைகள் இல்லாததால் மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
— ராஜபாளையம், சிவகாசி வழியாக தென்காசிக்கும் பெங்களூருக்கும் இடையே புதிய ரயில்.
— தென்காசி மற்றும் மதுரை வழியாக 06003/04 & 06029/30 சிறப்பு ரயில்களை முறைப்படுத்துதல்.
— 12651/12652 தமிழ்நாடு சம்பார்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயில் ராஜபாளையம் மற்றும் தென்காசி வழியாக, திருநெல்வேலி வரை நீட்டிப்பு.
— தென்காசியை மும்பையுடன் இணைக்கும் வகையில் 11021/11022 சாளுக்ய எக்ஸ்பிரஸ் நீட்டிப்பு.