
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக திருச்சியில் இன்று பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு பாஜக., ஏற்பாடு செய்திருந்தது. அதில் பேசிய தமிழக பாஜக., தலைவர் கு.அண்ணாமலை, ”தமிழகத்தில் பாஜக., ஆட்சிக்கு வந்தால், ஒவ்வோர் அரசுப் பள்ளிகளையும் மேம்படுத்தி பிஎம்ஸ்ரீ பள்ளிகளாக மாற்றுவோம்,” என உறுதிபடக் கூறினார்.
பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது …
திமுக., மேடையில் ஆபாசப் பேச்சுகள் மட்டுமே இருக்கின்றன. அவர்கள் பேசுவது எல்லாம் ஆபாச பேச்சுகள். அதற்கு கைதட்ட 100 பேர். இப்படி சிலர் கைதட்டுவதால், நாம் சரியான பாதையில் போகிறோம் என்ற மாய உலகத்தில் முதல்வர் அமர்ந்துள்ளார். அங்கு இருக்கும் தொண்டர்கள், ஆபாச பேச்சுக்கு கைதட்டுவதே காரணம். வட மாநிலத்தவர்களை அமைச்சர்கள் விமர்சித்து பேசுகின்றனர். இதற்கும் கைதட்டுகின்றனர். இவர்கள் யாரும் கும்மிடிப்பூண்டியை தாண்டி இந்தியா எப்படி இருக்கிறது என பார்த்தது கிடையாது.
இவர்கள் 1967ல் இருந்த மாய உலகத்தில் மாட்டிக் கொண்டுள்ளனர். தமிழகத்தைக் கடந்து பாரதம் முழுவதும் சென்றால் நாட்டின் வளர்ச்சி பற்றி தெரியும். வட மாநிலங்களில் இருப்பவர்கள் யாரும், நம்மை இழிவாகப் பேசியது இல்லை. எந்த அரசியல்வாதியும் தமிழ் சமுதாயத்தை பற்றி தவறாக பேசவில்லை. ஆனால், திமுக., தலைவர்கள் மட்டும் ஒவ்வொரு மாநிலத்தைப் பற்றியும் தவறாகப் பேசுகின்றனர்.
திமுக.,வினருக்கு அவர்கள், குடும்பத்தினர் மட்டும் ஆட்சியில் உள்ளதால் வெளியே வரவே பயம். மக்களின் மனநிலை தெரியாமல் ஆட்சியில் அமர்ந்துள்ளனர். மக்களுடன் பழகினால்தான் மக்கள் என்ன நினைப்பார்கள் என தெரியும். ஆனால், அண்ணாதுரைக்கு பிறகு, திமுக.,வினர் கூண்டுக்கிளியாக அமர்ந்துள்ளனர். அவர்களுக்கு வெளியே வந்து மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பதே தெரியாது.
தேசிய கல்விக் கொள்கையில் 1 முதல் 5ம் வகுப்பு வரை கட்டாயமாக தமிழ் மொழி தான் கற்றல் மொழியாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி கொண்டு வந்தார். இதனை திமுக.,க்காரன் சொல்ல மாட்டான். இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அவர்கள் இதைக் கொண்டு வரவில்லை. ஆனால் பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். 6,7,8ம் வகுப்புகளில் தாய்மொழியில் கற்றுக் கொடுக்க முயற்சி எடுப்போம்.
திமுக., காங்கிரசுடன் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது, 3வது கட்டாய மொழி ஹிந்திதான் இருந்தது. முதல்முறையாக மும்மொழி கொள்கையில், மூன்றாவது மொழியாக, விருப்பமான மொழியை எடுத்துப் படியுங்கள் என கூறப்பட்டுள்ளது. அதற்காகவே கையெழுத்து இயக்கம் தொடங்கி 28 நாளில் 26 லட்சம் பேர் கையெழுத்து போட்டுள்ளனர்.
நீட் தேர்வுக்கு எதிராக, கவர்னருக்கு எதிராக திமுக., ஆரம்பித்த கையெழுத்து இயக்கத்தில் எத்தனை பேர் கையெழுத்து போட்டுள்ளனர் என தெரியாது’; ஆனால் பாஜக.,வின் கையெழுத்து இயக்கத்தில் இணையதளத்தில் 8,20,336 பேர் கையெழுத்து போட்டுள்ளனர். நேரடியாக 17,89,694 பேர் கையெழுத்து போட்டுள்ளனர். நேற்று மாலை வரை 26,10,033 பேர் கையெழுத்து போட்டு உள்ளனர். இது தமிழகத்தில் அரசியல் புரட்சி. இதே வேகத்தில் போனால், 2 கோடி கையெழுத்தை நோக்கி போயிருப்போம். இன்னும் 74 லட்சம் கையெழுத்து தேவைப்படுகிறது. 8 வது மாநாடு நடக்கும் போது நமது இலக்கான ஒரு கோடியைத் தாண்டி இரண்டு கோடியை நோக்கிச் சென்றிருப்போம்.
திமுக.,வில் யாரும் படித்து அதிகாரத்திற்கு வரவில்லை. உதயநிதி பட்டம் வாங்கியது தெரியாது. எங்கு படித்தார் தெரியாது. கல்வி அமைச்சர் அகில உலக உதயநிதி ரசிகர் மன்றத்தின் தலைவராக உள்ளார். இவர் ஸ்டாலின் பின்னால் செல்வார். இதற்கு பிறகு நேரம் இருந்தால் கல்வியை பார்ப்பார். இவர்களுக்கு கல்வியைப் பற்றி என்ன தெரியும்.
பல வழக்குகளில் சிக்கிய திமுக., அமைச்சர்கள் ஒன்று சேர்ந்து நம் குழந்தைகள் என்ன படிக்கப் போகின்றனர் என முடிவு செய்யப் போகின்றனர். அரசுப் பள்ளிகளில் புதிய கல்விக் கொள்கை வரும்போது உலகத் தரம் வாய்ந்த குழந்தைகள் தயார்படுத்த முடியும். அரசுப் பள்ளிகளில் புதிய கல்விக் கொள்கை வந்தால் உலகத் தரம் வாய்ந்த கல்வி கிடைக்கும். அரசுப் பள்ளியில் படித்தாலும், தனியார் பள்ளியில் படித்தாலும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்பது தான் தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படை நோக்கம்.
ஆனால், திமுக.,வினர் நடத்தும் பள்ளியில் ஒரு கல்வி முறை, அரசுப் பள்ளியில் தரமில்லாத கல்வியைக் கொடுத்து திமுக., தலைவர்களுக்கு போஸ்டர் ஒட்டுவதற்காகத்தான் அரசுப் பள்ளி மாணவர்களை தயார் படுத்துகின்றனர். அனைத்து தனியார் , சிபிஎஸ்இ பள்ளிகளில் மூன்று மொழிகள் படிக்கின்றனர். அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டும் இரண்டு மொழிகள் படிக்கின்றனர். தமிழகம் வளராமல் இருப்பதற்கு அடிப்படைக் காரணம் இங்கிருப்பவர்கள் பேசுவது வேறு யாருக்கும் புரியாது.
அடுத்து பாஜக., ஆட்சிக்கு வரும் போது, தே.ஜ., கூட்டணி ஆட்சியில் அமரும் போது அரசு, தனியார் பள்ளிகளில் சம கல்வி வரும். அரசுப் பள்ளியை மேம்படுத்தி ஒவ்வொரு பள்ளியையும் பிஎம்ஸ்ரீ பள்ளியாக மாற்றுவோம் – என்று பேசினார்.
இன்றைய திருச்சி கூட்டம் குறித்து அண்ணாமலை குறிப்பிட்டிருப்பதாவது…
இன்று மாலை, திருச்சியில், தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்திடவும், ஐந்தாம் வகுப்பு வரை, தமிழ் மொழியினைக் கட்டாயமாக்கிட வலியுறுத்தியும், தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வியை வழங்க மறுக்கும் திமுக அரசைக் கண்டித்தும் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றோம்.
இந்தப் பொதுக்கூட்டத்தை வெகுசிறப்பாக ஏற்பாடு செய்திருந்த, தமிழக பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் திரு கருப்பு முருகானந்தம் அவர்கள், திருச்சி நகர் மற்றும் திருச்சி பெருங்கோட்ட மாவட்டத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுதந்திர இந்தியாவில், இதுவரை இரண்டு முறை, புதிய கல்விக் கொள்கைகள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. காலத்துக்கேற்ப கல்விக் கொள்கையில் மாற்றம் வேண்டும் என்பதற்காக, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், இஸ்ரோவின் தலைவராக இருந்த ஐயா திரு. கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைத்த குழு உருவாக்கியதே, தற்போது கொண்டு வரவுள்ள புதிய கல்விக் கொள்கை.
இதன் முக்கியமான அம்சம், ஐந்தாம் வகுப்பு வரை கட்டாயம் தாய்மொழிக் கல்வி. மூன்றாவது மொழியாக, மாணவர்களுக்கு விருப்பமான ஒரு இந்திய மொழி. ஆனால், திமுக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கொண்டு வந்த கல்விக் கொள்கையின்படி, மூன்றாவது மொழி கட்டாயமாக இந்தி மொழியாக இருந்தது.
தமிழக அமைச்சர்களாக இருப்பவர்கள் பின்னணியைப் பார்த்தால் ஒருவர் கூட, எந்தத் தகுதியும் இல்லாதவர்கள்தான். இவர்கள் அனைவரும், நமது குழந்தைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்கிறார்கள். தனியார் பள்ளிகளில் பல மொழிகள் கற்க, மாணவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பை, அரசுப் பள்ளிகளில் இலவசமாகக் கிடைப்பதைத் தடுக்கிறார்கள்.
நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் கொண்டு வந்துள்ள கல்விக் கொள்கை மூலம், நமது குழந்தைகள் விருப்பப்படும் மொழிகளைக் கற்கும் வாய்ப்பு கிடைப்பதோடு, மேல்நிலைப் பள்ளியில், பிரெஞ்ச், ஜெர்மன், ஜப்பான், ஸ்பானிஷ் உள்ளிட்ட உலக மொழிகளையும் அரசுப் பள்ளிகளிலேயே கற்கும் வாய்ப்பை வழங்குகிறது.
அரசுப் பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி வழங்க வேண்டும் என்பதுதான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கம். ஆனால், திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளின் வருமானம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறது திமுக அரசு.
எனவே தான், தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று, தமிழக பாஜக சார்பாக, ஒரு கோடி கையெழுத்துகளை பெறுவோம் என்ற இலக்கோடு சமக்கல்வி கையெழுத்து இயக்கத்தை கடந்த மார்ச் 5 அன்று தொடங்கினோம். நேற்று வரை, 18 நாட்களில், 26 லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள், தங்கள் கையெழுத்திட்டு ஆதரவளித்துள்ளனர்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் புரட்சியாகவே இதனைக் காண்கிறோம். இதற்காக உழைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தமிழக பாஜக சகோதர சகோதரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து, தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று, மக்கள் ஆதரவைப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
நேற்று, சென்னையில் இந்தி கூட்டணிக் கட்சித் தலைவர்களை அழைத்து திமுக ஒரு கூட்டம் நடத்தியது. தமிழகத்தைக் குப்பைக் கிடங்காக மாற்றும் கேரள மாநில முதலமைச்சர், தமிழகத்துக்குத் தண்ணீர் தராமல் வஞ்சிக்கும் கர்நாடக காங்கிரஸ் துணை முதலமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு, சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்திருக்கிறார் முதலமைச்சர் திரு. ஸ்டாலின். விகிதாச்சார அடிப்படையில்தான் தொகுதி மறுசீரமைப்பு நடைபெறும் என்று, நமது பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் உறுதியளித்த பிறகும், தனது அரசியல் லாபத்துக்காகத் தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தமிழக மக்களுக்கு எதிரான இந்த திமுக ஆட்சி வரும் தேர்தலில் நிச்சயம் அகற்றப்படும். தேசிய கல்விக் கொள்கை தமிழகத்தில் நிச்சயம் அமல்படுத்தப்படும். அதற்காக, நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.
பொதுக்கூட்டத்தில், தமிழக பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் திரு நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் திரு பொன் ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் திரு H ராஜா, முன்னாள் மாநிலத் தலைவர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன், மாநில இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தேசிய மகளிர் அணித் தலைவி திருமதி வானதி சீனிவாசன் மற்றும் மாநில நிர்வாகிகள், பல்வேறு மாவட்டத் தலைவர்கள், நிர்வாகிகள், தமிழக பாஜக சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.