
பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகளை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் தொடங்கியது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயர் சூட்டப்பட்டது. சிந்தூர் என்பது, குங்குமத்தைக் குறிக்கும். பெண்களின் குங்குமத்தைப் பறித்த பயங்கரவாதிகளை இல்லாமல் செய்யும் பாரத ராணுவத்தின் செயலாக இதற்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
பகல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த ஆபரேஷன் சிந்தூர் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு நீதி நிலைநாட்டப்பட்டது- ஜெய்ஹிந்த் என்றூ, இந்திய ராணுவம் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளது.
கோட்லி, பஹ்வால்பூர், முசாபராபாத் உள்ளிட்ட இடங்களில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முன்னதாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாத்தில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது.
இந்த தாக்குதல் குறித்து அறிக்கை வெளியிட்ட இந்திய ராணுவம், ‘பாகிஸ்தான் ராணுவத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும், மிகுந்த நிதானத்துடன் இலக்குகளை தேர்ந்தெடுத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், பொதுமக்கள் அல்லது பாகிஸ்தான் ராணுவம் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை, பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து 9 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது தலைமையகங்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதை பாகிஸ்தானும் உறுதிப் படுத்தியுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷஃபா ஷெரீப், ஐந்து இடங்களில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
முரிடிக் என்ற இடத்தில் உள்ள பயங்கரவாதிகளின் முகாமை குண்டுவீசி அழித்தது இந்திய ராணுவம். மேலும், தாக்குதலுக்கு தயார் என்றும், வெற்றிக்கான பயிற்சி இது என்றும் இந்திய ராணுவம் வீடியோ பதிவு வெளியிட்டுள்ளது.
பாரதத்தின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில், சுற்றுலா சென்ற அப்பாவிப் பொதுமக்கள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாதிகளை ராணுவம் தேடி வருகின்றது. இருப்பினும், பயங்கரவாதிகளை உற்பத்தி செய்து மற்ற நாடுகளுக்கு அனுப்பி கொண்டிருக்கும் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத முகாம்களின் மீது தாக்குதல் நடத்தி அவற்றை முற்றிலும் அழிப்பதே இந்தியாவின் பணி என்று குறிப்பிடப்பட்டது. அதன்படி பஹல்காம் தாக்குதல் நடைபெற்ற இரண்டே வாரங்களில் இந்தியா பதிலடிகொடுத்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்திய நிலையில், எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. எனினும் எல்லைப் பகுதியில் பதிலடி தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. இதனிடையே, பாகிஸ்தானின் லாகூரில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்தியா நடத்திய தாக்குதலால் நள்ளிரவில் பீதியில் உறைந்தனர் லாகூர்வாசிகள்.
இந்நிலையில், இந்தியாவில் உள்ளோர் இந்த தாக்குதலுக்கு வரவேற்பு தெரிவித்து “பாரத் மாதா கி ஜெய்- ஜெய்ஹிந்த்” என சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். குறிப்பாக, மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள் உள்ளிட்டோரும் இவ்வாறு சமூகத் தளங்களில் பதிவிட்டு தங்கள் வரவேற்பை தெரிவித்தனர். மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், கிரண் ரிஜிஜு, பியுஸ் கோயல் எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர். மேலும், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், சட்டீஸ்கர் முதலமைச்சர்களும் இவ்வாறு வரவேற்பு தெரிவித்து எக்ஸ்தளத்தில் பதிவிட்டனர்.
ஆபரேஷன் சிந்தூர்:
ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா நடத்திய தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 3 பயங்கரவாத அமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.





