புது தில்லி:
கர்நாடகாவில் இருந்து பாஜக., ஆதரவுடன் சுயேச்சை எம்பி.,யாக மாநிலங்களவைக்கு தேர்வாகி செயல்பட்டு வந்த தொழிலதிபர் ராஜீவ் சந்திரசேகர், மீண்டும் போட்டியிடுகிறார். ஆனால் இம்முறை அவர், பாஜக.,வில் இணைந்து அக்கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.
ஞாயிற்றுக் கிழமை நேற்று, பாஜக.,வின் மத்திய தேர்தல் குழுக் கமிட்டி, வெவ்வேறு மாநிலங்களில் இருந்து பாஜக., சார்பில் மாநிலங்களவைக்குப் போட்டியிடும் நபர்களின் பட்டியலை அறிவித்தது. இந்தப் பட்டியலில் ஜார்கண்ட், உத்தராகண்ட், சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேஷ், ஹரியானா, மகாராஷ்டிரா, உத்தர்பிரதேஷ், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து போட்டியிடும் 18 பேர் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. அதில், கர்நாடகத்தில் இருந்து ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுவதாக பாஜக.,வின் அதிகாரபூர்வ பட்டியலில் தெரிவிக்கப் பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று செய்தி நிறுவனம் ஒன்று ராஜீவ் சந்திரசேகரிடம் பேட்டி எடுத்தது. அப்போது, தான் பாஜக.,வில் திங்கள்கிழமை (இன்று) இணையவுள்ளதாகவும், கர்நாடகத்தில் தூய்மையான ஓர் அரசை நிறுவும் பாஜக., வின் முயற்சியில் தோள் கொடுக்கப் போவதாகவும் கூறினார். மேலும், பிரதமர் நரேந்திரமோடி, பாஜக., தலைவர் அமித் ஷா ஆகியோரின் வழிகாட்டலில், கர்நாடகத்தில் ஊழலற்ற அரசு உறுதியாக அமையும் என்று கூறினார்.
செல்போன் பயோனிர் என்று துவக்க காலத்தில் அறியப்பட்ட தொழிலதிபர் ராஜீவ் சந்திரசேகர், ஆங்கில ரிபப்ளிக் டிவி.,யின் முதலீட்டாளர்களில் முதன்மையானவர். ஏசியநெட் நியூஸ் செய்தி ஊடகப் பிரிவின் உரிமையாளர் என்பது குறிப்பிடத் தக்கது.
பாஜக.,வெளியிட்ட ‘மாநிலங்களவைக்குப் போட்டியிடுபவர்களின் பட்டியல்’