கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக இல்லாத ஊழலற்ற ஆட்சியை அமைப்போம் என்று தமிழகத்தில் ‘மக்கள் நல கூட்டணி’ என்ற அமைப்பு தோன்றியது. ஆரம்பத்தில் இந்த கூட்டணிக்கு நல்ல வரவேற்பு கிடைப்பது போன்ற ஒரு மாயத்தோற்றம் தோன்றினாலும் தேர்தல் நெருங்க நெருங்க இந்த கூட்டணி தேறாது என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வந்தனர். இந்த கூட்டணியில் கடைசி நேரத்தில் முதல்வர் வேட்பாளராக இணைந்தார் விஜயகாந்த் . இந்த கூட்டணி தேர்தலில் போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. பெரும்பாலான வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
இந்த நிலையில் இதேபோன்று தற்போது காங்கிரஸ் , பாஜக இல்லாத 3வது அணியை அமைக்கவிருப்பதாக ஒரு குரூப் கிளம்பியுள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜக மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டாலும், அவை இரண்டும் தேசிய கட்சிகள். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இந்த இரண்டு கட்சிகளுக்கு ஒரு குறிப்பிட்ட வாக்கு சதவீதம் உண்டு. எனவே இந்த இரண்டும் இல்லாத கூட்டணி தேறுமா? என்பதே கேள்விக்குறிதான் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஒரு கூட்டணி என்றால் அகில இந்திய அளவில் ஒரு புகழ் பெற்ற தலைவர் தேவை. மோடி, ராகுல்காந்தி போல் 3வது அணியில் இந்தியா முழுவதிலும் பெயர் வாங்கிய ஒரு தலைவர் இல்லை. மம்தா பானர்ஜி, சந்திரசேகரராவ், மு.க.ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு போன்ற தலைவர்கள் அந்தந்த மாநிலங்களில் மட்டுமே செல்வாக்கு பெற்றவர்கள். எனவே இந்த கூட்டணி மக்கள் நல கூட்டணி போன்று மாறுமா? அல்லது இரண்டு தேசிய கட்சிகளுக்கும் அதிர்ச்சி கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்