
வங்கிகளுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை என ‘வாட்ஸ்-அப்’பில் வரும் தகவல் உண்மைதானா? இதற்கு வங்கி அதிகார்கள் என்ன கூறுகின்றனர்?
வாட்ஸ் அப்பில் வலம் வரும் தகவல் தவறானது என்றும், வரும் 31-ம் தேதி வங்கிகள் செயல்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
‘வாட்ஸ்-அப்’பில் வங்கி விடுமுறை குறித்து கடந்த 2 நாட்களாக ஒரு தகவல் பரவி வருகிறது. அதில், வரும் 29-ம் தேதி வியாழக்கிழமை மகாவீர் ஜெயந்தி, 30-ம் தேதி வௌ்ளிக்கிழமை புனிதவெள்ளி, 31-ம் தேதி சனிக்கிழமை மற்றும் ஏப்.1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, ஏப்.2-ம் தேதி திங்கட்கிழமை ஆண்டு கணக்கு முடிப்பு தினம் என தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. எனவே, அதற்கேற்றவாறு தங்களுடைய வங்கிப் பணப் பரிவர்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்தத் தகவலை தவறானது என வங்கி அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியபோது, வரும் 29, 30-ம் தேதிகளில் மகாவீர் ஜெயந்தி மற்றும் புனிதவௌ்ளியை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால், 31-ம் தேதி சனிக்கிழமையன்று வங்கிகள் முழு நாள் செயல்படும். அன்றைய தினம் வழக்கம் போல் வாடிக்கையாளர்கள் பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து வங்கி சேவைகளையும் மேற்கொள்ளலாம்.
ஏப்.1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை நாள்.
ஏப்.2-ம் தேதி வங்கிகளின் ஆண்டு கணக்கு முடிக்கும் தினம். எனவே அன்றைய தினம் வங்கிகள் செயல்படும். ஆனால், அன்று பணப் பரிவர்த்தனைகள் மற்றும் வாடிக்கையாளர் சேவை ஏதும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று கூறினர்.



