
சென்னை: இயேசு உயிர்த்தெழுந்தது கட்டுக் கதை, ஆனால் பகவான் ரமணர் அதைச் செய்துள்ளார் என்று ஒரு பேச்சுவாக்கில் இசைஞானி இளையராஜா பேசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது. இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளையராஜா வீட்டின் முன் நேற்று கிறிஸ்துவர்கள் சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இளையராஜா, கூகுள் நிறுவனத்தின் தலைமையகத்திற்கு அண்மையில் வந்திருந்தார். இதில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் பேசிய அவர் “ரமண மகரிஷியை போன்று உலகில் தோன்றிய ஞானிகளில் வேறு எவரும் கிடையாது. இயேசு உயிர்த்தெழுந்து வந்ததாகச் சொல்வார்கள். அவர் உயிர்த்தெழுந்து பற்றி நிரூபணமாகவில்லை என்று சொல்லப்படுகிறது. உயிர்தெழுதல் என்பது நிகழ்ந்தது ஒருவருக்கு மட்டும் தான். தன்னுடைய 16 வயதில் ரமண மகரிஷிக்கு தான் உயிர்த்தெழுதல் நிகழ்ந்துள்ளது.” என்று அவர் பேசியுள்ளார்.
இசைஞானி இளையராஜாவின் இந்தக் கருத்து இணையத்தில் வைரலாகப் பரவியது. இந்தக் கருத்துக்கு சிறுபான்மையினர் சிலர் ஆட்சேபம் தெரிவித்தனர். இந்தக் கருத்தை சர்ச்சையாக மாற்றிய ஊடகங்கள், இது இளையராஜாவின் பேச்சு சுதந்திரம் என்று இந்துமதத்தை விமர்சிப்பவர்களுக்கு வக்காலத்து வாங்குவது போல் சொல்லவில்லை. இதனால் இளையராஜாவின் இந்தக் கருத்து சர்ச்சை ஆனது. இது கிறிஸ்தவர்களின் உணர்வுகளையும், நம்பிக்கையும் இழிவு படுத்துவதாக சிறுபான்மை மக்கள் கட்சி கூறியது.
இதற்காக இளையராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி, நேற்று சிறுபான்மை மக்கள் நல கட்சியை சேர்ந்த 35 பேர் இளையராஜாவின் வீட்டை முற்றுகையிட முயன்றனர். அவர்களைக் கைது செய்த காவல்துறை, பிறகு விடுவித்தனர். இதனால் இளையராஜா வீட்டின் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



