
புது தில்லி: பீகார் மாநில முன்னாள் முதல்வரும் முன்னாள் ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ், உடல் நலக் குறைவால் ராஞ்சி சிறையில் இருந்து தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப் பட்ட போது, ரயிலிலேயே வர வேண்டிய நிலை ஏற்பட்டது.
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் மார்ச் 24ஆம் தேதியன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம், லாலு பிரசாத் யாதவுக்கு 14 வருட சிறைத் தண்டனையும், ரூ.60 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. ஏற்கெனவே, மேலும் 3 வழக்குகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்ற லாலு பிரசாத் யாதவ், மாட்டுத்தீவன ஊழலின் நான்காவது வழக்கிலும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு இந்த தண்டனை அளிக்கப்பட்டது.
லாலு பிரசாத் யாதவ், ராஞ்சி சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், ராஞ்சியில் உள்ள மருத்துவ நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தார். பின், மேல் சிகிச்சைக்காக தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவரை ராஞ்சியில் இருந்து தில்லிக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாகவும், பின்னர் ராஜ்தானி ரயில் மூலம் 16 மணி நேர பயணத்திற்குப் பின் தில்லிக்கு அழைத்து வரப்பட்டதாகவும் ஆர்.ஜே.டி., கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் பெரும் பிரச்னையாக விவாதிக்கப் பட்டது. இது குறித்து ஜார்க்கண்ட் அமைச்சர் சார்யூ ராய் வருத்தம் தெரிவித்துள்ளார். லாலுவின் விமான பயணச் செலவுக்கான தொகையை அளிக்க ஜார்கண்ட் அரசு மறுப்பு தெரிவித்தது சரியல்ல. உண்மை நிலை என்னவென்று எனக்கு தெரியவில்லை. எனினும், மோசமான உடல் நிலையில் லாலு இருப்பதால் அவரது கோரிக்கை ஏற்கப்பட்டிருக்க வேண்டும்” என்று கூறினார்.
லாலு பிரசாத் யாதவ், முன்னாள் ரயில்வே அமைச்சர் என்பது குறிப்பிடத் தக்கது.



