
புதுதில்லி: மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சச்சின் டெண்டுல்கர், தனது முழு சம்பளம் ரூ.90 லட்சத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கி அசத்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மென் என புகழப்பட்ட சச்சின் டெண்டுல்கர், மாநிலங்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்து எடுக்கப்பட்டு, பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே நாடாளுமன்றம் சென்று வந்தார். நாடாளுமன்றத்துக்கு வரவில்லை என்றும், வந்தாலும் பேசவில்லை என்றும் பல்வேறு சர்ச்சைகள்.
நாடாளுமன்றத்தின் எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. இருப்பினும் ஆந்திர மாநிலத்தில் உள்ள புட்டம் ராஜு கண்ட்ரிகா கிராமத்தையும், மகாராஷ்டிராவில் டோன்ஜா கிராமத்தையும் சச்சின் தத்தெடுத்த வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றியுள்ளார். ஆந்திராவில் பல வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளார்.
இவரது பதவிக் காலம் அண்மையில் முடிவடைந்த நிலையில், தற்போது தனது 6 ஆண்டு கால சம்பளம் ரூ.90 லட்சத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார் சச்சின்.



