
ஜாதியை வைத்தோ அல்லது மதத்தை வைத்தோ தமிழர்களை பிரிக்க முடியாது என செங்கோட்டையில் கனிமொழி எம்.பி பேசினார்.
நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் கலைஞர் தமிழ் சங்கம் சார்பில் கலைஞர் தமிழ் சங்க செயலாளர் ஆபத்துகாத்தான் தலைமையில் மறைந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரத்தின வேல் பாண்டியனின் படத் திறப்பு விழா இன்று நடைபெற்றது .
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக திமுக மாநில மகளீரணி அமைப்பாளர் கனிமொழி எம்.பி கலந்து கொண்டு ரத்தின வேல் பாண்டியனின் படத்தை திறந்து வைத்து பேசியதாவது:- திராவிட இயக்கத்தின் அடிநாதமே சமூக நீதி ஆகும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு பெற்றுத் தந்த பெருமை திராவிட இயக்கத்துக்குத்தான் உண்டு.
இந்தியா முழுவதிலும் பிற்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைப்பதற்காக பிற்பட்ட மக்களுக்கான தேசிய ஆணையம் அமைக்கப்பட்டு, அதனுடைய தலைவராக நீதி அரசர் ரத்தினவேல் பாண்டியன் அவர்களை மத்திய அரசு நியமித்தது. அந்த அறிக்கை தான் மண்டல் கமிசனுடைய பரிந்துரைகளை மத்திய அரசு சட்டமாக்க வழி வகுத்தது.
சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது மண்டல் அறிக்கையின் பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது. அந்தவகையில் சமூக நீதி காத்தவர் ரத்தினவேல் பாண்டியன்.
மத்திய அரசு தமிழக அரசாங்கத்தை ஒரு பொம்மலாட்டம் போல் ஆட்டி வைக்குறது. அதற்கு ஏற்றால் போல் இங்கு இருக்கும் முதலலமைச்சர் துணை முதலமைச்சரும் சொல்வதற்கெல்லாம் தலையாட்டி கொண்டு இருக்கிறார்கள் .நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுப்பதற்கு கூட மத்திய அரசாங்கத்தின் அனுமதி பெற்றே தமிழக அரசாங்கம் வழக்கு தொடுக்கிறார்கள் என அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் இங்கு ஜாதியை வைத்தோ அல்லது மதத்தை வைத்தோ ஊடுருவ நினைத்தால் நாங்கள் எல்லோரும் தமிழர்கள். தமிழால் ஒன்று பட்டவர்கள் அந்த இன உணர்வு இருக்கும் வரை எங்களை மதத்தாலோ ஜாதியாலோ பிரிக்க முடியாது என்றார்.



