மைசூரு: முதல்வர் நாற்காலியை அடுத்தவருக்கு விட்டுக் கொடுத்து விடக் கூடாது என்பதற்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, உடைந்த நாற்காலியில் அமர்ந்து மண்டையை உடைத்துக் கொண்டார்.
கர்நாடகத்தின் மிக முக்கியப் பகுதியான மைசூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள சித்தராமையா, காங்கிரஸ் தலைவர் வீட்டில் உணவு அருந்த நாற்காலியில் அமர்ந்தார். அப்போது அதிலிருந்து கீழே விழுந்ததில், சித்தராமையாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
கர்நாடக மாநில சட்டசபைக்கு, வரும் மே 12ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் எப்படியாவது வென்று விட வேண்டும் என்ற முனைப்பில் பாஜகவும், ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற வெறியில் காங்கிரஸும் போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றன. சென்ற வாரம் மைசூரு பகுதியில் பாஜக., தலைவர் அமித்ஷா தீவிர பிரசாரம் செய்து வந்த நிலையில், காங்கிரஸுக்கு பலமான பகுதியான மைசூரு பகுதியில் இந்த வாரம் சித்தராமையா தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
மைசூரு சித்தராமையாவுக்கு பலம் சேர்க்கும் பகுதி. அவர் போட்டியிட இங்குள்ள சாமுண்டீஸ்வரி தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் மாவினஹள்ளி பகுதியில் உள்ள காங்கிரஸ் தலைவரின் வீட்டில் விருந்து உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்காக அந்த இல்லத்துக்கு வந்த சித்தராமையா, ஒரு பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்தார். அப்போது, நாற்காலியின் கால் வளைந்து சித்தராமையா சரிந்து கீழே விழுந்தார். பயங்கரமான சத்தம் கேட்டதால் ஓடி வந்து பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்நேரம் முன்னாள் எம்எல்ஏ சத்ய நாராயணா, அவரது நண்பர் எம் சித்தேகவுட ஆகியோர் உடன் இருந்தனராம். அனைவரும் இதைக் கண்டு கண்கலங்கி அழுதே விட்டனராம்.
பின்னர், தலையில் பட்ட காயத்துக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. சித்தராமையாவின் மகன் யதீந்திரா ஒரு மருத்துவர் என்பதால் உடனே சிகிச்சை கொடுத்து, லேசாக வெட்டுக் காயம் பட்டுள்ளது என்று கூறினார்.அவர் பின்னர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெறப்பட்டுள்ளது.
பின்னர் அவர் மைசூருவில் இருந்து விமானத்தில் பெங்களூரு சென்றார். செவ்வாய்க்கிழமை இன்று தொடங்கி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் 5 நாள் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்கிறார் சித்தராமையா.