புதுதில்லி: அரியவகை மான்களை வேட்டையாடிய வழக்கில் இந்தி நடிகர் சல்மான் கானுக்கு ஜோத்புர் நீதிமன்றம், அவரை குற்றவாளி என்று அறிவித்து 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
19 ஆண்டுகளுக்கு முன்னர் மான் வேட்டையாடியதாகத் தொடரப்பட்ட வழக்கில், இந்தி நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்த ஜோத்பூர் நீதிமன்றம், இந்தி திரையுலக பிரபலங்களான சயிஃப் அலி கான், தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோரை வழக்கிலிருந்து விடுவித்தது.
ராஜஸ்தானில் ஹம் சாத் சாத் ஹெய்ன் படப்பிடிக்குச் சென்ற இடத்தில் மான்களை வேட்டையாடியது தொடர்பாக, சல்மான்கான் மீது 4 வழக்குகள் தொடரப்பட்டன. 1998ஆம் ஆண்டு செப்டம்பரில் பவத் என்ற கிராமத்தில் 2 மான்களை வேட்டையாடியது, 1998ஆம் ஆண்டு அக்டோபரில் கோடாவில் ஒரு மானையும், கன்கனி கிராமத்தில் 2 மான்களையும் வேட்டையாடியது என சல்மான் கான் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், மான் வேட்டையின் போது, உரிமம் காலாவதியான துப்பாக்கிகளை அவர் பயன்படுத்தியதாக ஒரு வழக்கு தொடரப்பட்டது.
பவத் கிராமத்தில் 2 மான்களை சுட்டு வேட்டையாடிய வழக்கில், சல்மான் கானுக்கு 2006 பிப்ரவரியில் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அது மேல்முறையீட்டில் ரத்து செய்யப்பட்டது. கோடாவில் மான் வேட்டையாடிய வழக்கில் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 3 நாட்கள் சிறையில் இருந்த பிறகு அவர் ஜாமீனில் வெளி வந்தார். பின்னர், மேல்முறையீடு செய்ததில், சல்மான் கானுக்கு விதிக்கப்பட்ட 5 வருட சிறைத் தண்டனையை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், உரிமம் இல்லாத துப்பாக்கிகளை பயன்படுத்திய வழக்கில், ஜோத்பூர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜனவரியில் சல்மான்கானை விடுவித்தது.
இதனிடையே, மான் வேட்டையின் மூன்றாவது வழக்கில் சல்மான்கான், சயிஃப் அலி கான், தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் உள்ளிட்டோர் மீது 2006 ஏப்ரலில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய சல்மான்கான் உள்ளிட்ட அனைவரும் ஜோத்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்தி திரையுலக பிரபலங்கள் என்பதால் அவர்களைக் காண நீதிமன்ற வளாகத்தில் ரசிகர்கள் அதிகம் பேர் திரண்டனர். இதனால் ஏதும் அசம்பாவிதங்கள் நேர்ந்துவிடாமல் தடுக்க போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இந்நிலையில், இந்த மூன்றாவது வழக்கில் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் வீதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
அதே நேரம் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சயீஃப் அலி கான், தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் உள்ளிட்டோருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இல்லாததால் சந்தேகத்தின் பலனை சாதகமாக்கி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சல்மான்கான் ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, சல்மான் கானுக்கு வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது தொடர்பாக வழக்கறிஞர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். இதனிடையே அவர் ஜாமீன் கோரி மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை நாளை நீதிமன்றம் விசாரிக்கும் என்று கூறப்படுகிறது.